For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்ணாவிரதத்தை தொடர்கிறேன்-கூறுகிறார் சந்திரசேகர ராவ்

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: நான் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடவில்லை. தொடர்ந்து இருந்து வருகிறேன் என்று தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் கூறியுள்ளார்.

ஆனால் அவர் உண்ணாவிரதத்தை நேற்று மாலையுடன் முடித்துக் கொண்டதாக செய்திகள், புகைப்படங்கள் வெளியானதால், அவருக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ளன. இதனால் தெலுங்கானாவில் பதட்டம் நிலவுகிறது.

தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்தார் சந்திரசேகர் ராவ். இதற்காக அவர் கிளம்பியபோது அதிரடியாகசெயல்பட்ட போலீஸார் ராவைக் கைது செய்தனர்.

இதையடுத்து தெலுங்கானா முழுவதும் வன்முறை வெடித்தது. குறிப்பாக பெரும் திரளான மாணவர்கள், ராவுக்கு ஆதரவாக களம் இறங்கினர்.

கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்திரசேகர ராவுக்கு மருத்துவர்கள் உடல் நலப் பரிசோதனை செய்தனர். இதையடுத்து நேற்று மாலை ராவ் தனது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டதாக செய்திகளும், பழச்சாறு அருந்துவது போல புகைப்படங்களும் வெளியாகின.

இதனால் அவருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராவுக்கு எதிராக போராட்டங்களை மேற்கொள்ள ஆரம்பித்தனர்.

3 பேர் தற்கொலை...

ராவ் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து கரீம்நகர், மாவட்டம் வால்கொண்டா பகுதியை சேர்ந்த பிருத்விராஜ், மெதக் மாவட்டம் துக்கடா பகுதியை சேர்ந்தவர் 10-ம் வகுப்பு மாணவர் ஸ்ரீகாந்த், வரங்கல் மாவட்டம் நரசிம்ம பேட்டை பகுதியை சேர்ந்த பி.எட். மாணவர் பிரவீன் ஆகிய 3 பேரும் தற்கொலை செய்தனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட 3767 பேரை போலீசார் கைது செய்தனர்.

இப்படி ராவுக்கு ஆதரவாக காலையில் கிளம்பிய மாணவர்கள், தெலுங்கானா மாநில ஆதரவாளர்கள், அவர் உண்ணாவிரதத்தைக் கைவிட்டதாக வெளியான தகவலால் அப்படியே எதிராக திரும்பி விட்டனர்.

ஹைதராபாத்தில் மாணவர்கள் அவருக்கு எதிராக திரண்டனர். 4 ஆயிரம் மாணவர்கள் ஒன்று கூடி சந்திரசேகர ராவின் உருவ பொம்மையை பாடை கட்டி ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

தெலுங்கானாவின் துரோகியே, பழரசம் குடிக்காதே, தெலுங்கானா மக்களின் ரத்தத்தை குடி, சுயநலம் கொண்டவரே ஓடிப் போ என்று கோஷமிட்டனர்.

ஹைதராபாத் உஸ்மானிய பல்கலைக்கழக மாணவர்கள், வாரங்கல் காக்கதியா பகுதி மாணவர்கள், நிஜாமா பாத் தெலுங்கானா பகுதி மாணவர்கள் சந்திரசேகரராவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆந்திர மாநிலத்தில் உள்ள 14 சங்கங்களை சேர்ந்த மாணவர்களும் போராட்டம் நடத்தினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் சங்க தலைவர்கள் ரகுமான், சுவாமி, சங்கர், ஆகியோர் கூறுகையில்,

சந்திரசேகரராவ் தனி தெலுங்கானா பிரச்சினையை தனது சுய லாபத்துக்காகவும், குடும்ப நன்மைக்காகவும் பயன்படுத்துகிறார். அவரது மகன், மருமகன் ஆகியோரை எம்.எல்.ஏ. ஆக்கி விட்டார். மகளையும் அரசியலுக்கு கொண்டு வந்து முக்கிய பொறுப்பு கொடுத்துள்ளார். குடும்பத்தின் நலனுக்காக தெலுங்கானா மக்களுக்கு துரோகம் செய்து வருகிறார்.

தெலுங்கானா பிரச்சினைக்காக அவர் ஏற்கனவே டெல்லியில் ஒரு முறை உண்ணாவிரதம் இருந்தார். ஆனால் 4 மணி நேரத்தில் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

இப்போது மீண்டும் கால வரையற்ற உண்ணாவிரதத்தை தொடங்கி சீக்கிரமே முடித்துக்கொண்டார். அவருக்காக 3 பேர் உயிர்த் தியாகம் செய்துள்ளனர். ஆனால் அவர் ஏ.சி அறையில் சிறையில் இருந்து பழரசம் குடித்து உடனே உண்ணாவிரதத்தை முடித்தார்.

அவருக்கு ஆதரவாக நாங்கள் செமஸ்டர் பரீட்சை எழுதாமல் போராட்டத்தில் ஈடுபட்டோம். இப்போது அது எங்களுக்கு பெரும் இழப்பாகி விட்டது. இது தவிர போராட்டத்தில் ஈடுபட்டு போலீஸ் தடியடியையும் வாங்கிக் கொண்டோம். அவர் உண்ணாவிரதத்தை முடிப்பார் என்று நாங்கள் கனவிலும் எதிர்பார்க்கவில்லை.

சந்திரசேகரராவ் உண்ணாவிரதம் வெறும் நாடகம் என்று எங்களின் நண்பர்கள் கூறினார்கள். ஆனால் நாங்கள் கேட்காமல் அவருக்காக ஆதரவு குரல் கொடுத்தோம். ஆனால் அவர் எங்களை ஏமாற்றி விட்டார்.

இனி தனி தெலுங்கானா போராட்டத்துக்கு அரசியல் தலைவர்களை நம்பப் போவதில்லை. நாங்களே போராடு வோம். 14 மாணவர் சங்கங்களை சேர்ந்த அனைத்து மாணவர்களும் ஒன்று திரண்டு போராடுவோம். சந்திரசேகரராவ் முதல்வர் ரோசய்யாவுடன் ஏதோ ஒப்பந்தம் செய்து விட்டாரோ என்பது போல தோன்றுகிறது என்றனர்.

உண்ணாவிரதம் தொடருகிறது - ராவ்

இந்த நிலையில் தான் சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடருவதாகவும், உண்ணாவிரதப் போராட்டத்தை தான் கைவிடவில்லை என்றும் ராவ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னைக் கட்டாய்படுத்தி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு எனக்கு குளுக்கோஸ் ஏறறி ஜூஸ் குடிக்க வைத்து விட்டனர். இது அரசின் சதிச் செயலாகும். நான் எனது உண்ணாவிரதத்தைத் தொடருகிறேன் என்று தனியார் டிவி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ராவ் தெரிவித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X