For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வேதாரண்யம் விபத்து-11 குழந்தைகளை மீட்ட பின்னர் உயிரிழந்த ஆசிரியை சுகந்தி

By Sridhar L
Google Oneindia Tamil News

வேதாரண்யம்: வேதாரண்யம் பள்ளிக்கூட வேன் விபத்தில், நீரில் மூழ்கவிருந்த 11 குழந்தைகளை காப்பாற்றிய நிலையில் 12வது தூக்கி வீசப்பட்ட குழந்தை நீருக்குள் மூழ்கிதால் அதைக் காப்பாற்றப் போய் தானும் உயிரிழந்தார் ஆசிரியை சுகந்தி என்ற உருக்கமான தகவல் கிடைத்துள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே பள்ளி வேன் ஒன்று நேற்று கத்திரிப்புலம் என்ற இடத்தில் உள்ள காமாட்சியம்மன் கோவில் குளத்தி்ல் பாய்ந்து விழுந்தது.

இதில் 9 குழந்தைகளும் 21 வயதான ஆசிரியை சுகந்தியும் உயிரிழந்தனர்.

இந்தக் கோர விபத்தில் உயிரிழந்த ஆசிரியை சுகந்தியின் செயல் மெய் சிலிர்க்க வைக்கும் வகையில் உள்ளது.

வேன் தண்ணீருக்குள் மூழ்கியபோது அதன் கதவுகள் மூடப்பட்டு இருந்தன. இதனால் உள்ளே சிக்கிய ஆசிரியை, கிளீனர் மற்றும் குழந்தைகள் வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

பின்னர் கிளீனரும், ஆசிரியையும் வேன் கண்ணாடிகளை உடைத்து வெளியே வந்தனர். ஒவ்வொரு குழந்தையாக வெளியே தூக்கி வீசினர். கடைசி குழந்தையை தூக்க ஆசிரியை முயற்சித்தபோது அந்த குழந்தை 15 அடி ஆழத்திற்கு போய் விட்டது.

ஆசிரியை சுகந்திக்கு நீச்சல் தெரியாது என்றபோதிலும், எப்படியாவது அந்தக் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற துடிப்புடன், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மளமளவென நீருக்குள் போயுள்ளார்.

ஆனால் அவரது முயற்சி தோல்வியடைந்து அவரும் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இருப்பினும் தான் உயிரிழப்பதற்கு முன்பு 11 குழந்தைகளின் உயிரைக் காப்பாற்றி விட்டார் சுகந்தி.

கும்பகோணம் தீவிபத்தில் பிஞ்சுக் குழந்தைகள் கருகி உயிரிழந்தபோது அவர்களைக் காக்க முயலாமல் ஆசிரியர்கள் தப்பிச் சென்றதால் ஆசிரியர் குலத்திற்கே பெரும் அவமானம் ஏற்பட்டது. ஆனால் ஆசிரியை சுகந்தியின் செயல் அனைவரையும் உருக்கியுள்ளது.

டிரைவரும் 4 குழந்தைகளை காப்பாற்றினார்:

அதே போல வேனின் டிரைவரும், கிளீனரும் குழந்தைகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் குழந்தைகள் அதிக அளவில் இறந்ததைப் பார்த்ததும், ஊர் மக்கள் அங்கு கூடி அவர்களைத் திட்ட ஆரம்பித்தும் தான் அவர்கள் அங்கிருந்து ஓடியுள்ளனர்.

முதலில் இருவரும் விபத்து நடந்தவுடன் ஓடிப் போய்விட்டதாக தகவல்கள் வந்தன. ஆனால், அது தவறு என்று அங்கு இருந்தவர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

டிரைவர், கிளீனர் ஓடியதும் ஆசிரியை சுகந்தி தனியாக போராடிப் பார்த்துள்ளார். ஆனால் முடியவில்லை. அவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நாக்குடையான் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்.

உயிரிழந்த மாணவர்கள் ஜெயபிரகாஷ், ஜெயசூரியா, மகாலட்சுமி, வசூலா, பிரபாகரன், அபிநயா, ஆகிய 7 பேரும் நாககுடையான் கிராமத்தை சேர்ந்தவர்கள். இதனால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

இன்று நாக்குடையான் மட்டுமல்லாது செட்டிக்குளம் உள்ளிட்ட அக்கம் பக்கத்து கிராமங்களில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. கிராமங்கள் சோகமயமாக உள்ளது.

ஆசிரியை சுகந்தியுடன் பணியாற்றிய ஆசிரியைகள் கறுப்பு பேட்ஜ் அணிந்து சுகந்தியின் வீட்டிற்கு சென்று அவரது உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

கிராம மக்கள் அனைவரும் மவுன ஊர்வலமாக சென்று பலியானவர்களின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். நேற்று மாலையில் ஆசிரியை சுகந்தி மற்றும் விபத்தில் பலியான குழந்தைகளுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன.

ஆத்தூரில் 7 பள்ளி வாகனங்கள் பறிமுதல்:

இந் நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் இன்று பள்ளி வாகனங்கள் தணிக்கை நடை‌பெற்றது. ஆத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் சிவானந்தம் த‌லைமையிலான குழுவினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். தலைவாசல் ரயில்வே கேட் அருகே சோதனை நடந்தது.

அப்போது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றி சென்ற பள்ளி வாகனம், முறையான தகுதிச் சான்று இல்லாத வாகனம், என 7 வாகனங்கள் பிடிபட்டன. போதிய முன் அனுபவம் இல்லாத பள்ளி வாகன டிரைவர்களுக்கு அபராதம் விதித்ததோடு, அவர்கள் ஓட்டி வந்த வாகனமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நேற்று இங்கு பள்ளி வேன் மரத்தில் மோதில் 20 மாணவர்கள் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

நெல்லையிலும் வாகனங்கள் பறிமுதல்:

அதே போல நெல்லையில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி விதிமுறைகளை பின்பற்றாத பள்ளி வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

நெல்லையில் பல்வேறு இடங்களில் அதிகாரிகள் இன்று ஆய்வு நடத்தினர். நெல்லை வட்டார போக்குவரத்து அதிகாரி பொன் செந்தில்வேல் தலைமையில் இன்ஸ்பெக்டர் சந்திர சேகரன் மற்றும் அதிகாரிகள் இந்த சோதணையில் ஈடுபட்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களை ஆய்வு செய்ததில் 10 வாகனங்கள் சிக்கின. இவற்றில் பள்ளி மாணவர்களை அதிக அளவு ஏற்றிய வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், தகுதி சான்று இல்லாத வாகனங்களுக்கு ரூ.20 ஆயிரமும் உடனடியாக அபராதம் விதிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டன.

மற்ற வாகனங்களுக்கு தணிக்கை அறிக்கை வழங்கி அபராதம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த அதிரடி சோதனையின் மூலம் ரூ.1 லட்சத்திற்கும் மேலா வசூலிக்கப்பட்டது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரி பொன் செந்தில்வேல் கூறுகையில், பள்ளி வாகனங்களுக்கு சுப்ரீம் கோர்ட் அறிவுரைப்படி 10 விதி்முறைகளை கடைபிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளி் தாளாளர்கள் மற்றும் நிர்வாகிகளை அழைத்து கூட்டம் நடத்தி உள்ளோம்.

இந்த விதி்முறைகளை கடைப்பிடிக்காத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன் சம்பந்தப்பட்ட டிரைவர்கள் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும். கரியாப்பட்டி சம்பவத்தை தொடர்ந்து நெல்லையில் இன்று பள்ளி வாகனங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டு விதிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X