அரசுக்கு கள் இயக்கம் ஜனவரி 21 வரை கெடு!
ஈரோடு: தமிழக அரசு கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கவில்லை எனில் ஜனவரி 21ம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழ்நாடு 'கள்' இயக்கத்தின் ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது. கூட்டத்திற்கு அந்த இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி தலைமை தாங்கி பேசியதாவது
கள்ளுக்கு மாநில அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையை நீக்க ஓய்வு பெற்ற நீதிபதி சிவசுப்பிரமணியம் தலைமையில் ஒரு குழுவை தமிழக அரசு கடந்த மே மாதம் 31ம் தேதி அமைத்தது.
இந்த குழு தங்கள் அறிக்கையை இன்னும் அரசிடம் தாக்கல் செய்யவில்லை. ஆனால் இவர்கள் பணி நவம்பர் 30ம் தேதி முடிந்துவிட்டது.
இந்த மாதம் 31ம் தேதிக்குள் சிவசுப்பிரமணியம் அறிக்கை தாக்கல் செய்யப்பட வேண்டும். இதையடுத்து, அரசிடம் இருந்து நல்ல தகவல் வரவில்லை என்றால் ஜனவரி 21ம் தேதி முதல் கள் இறக்கும் போராட்டம் தீவிரப்படுத்தப்படும்.
கள்ளுக்கு விதித்துள்ள தடையை நீக்கிவிட்டு கோவையில் அரசு செம்மொழி மாநாட்டை நடத்த வேண்டும். இல்லையேல் அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் கள் இயக்கம் தங்கள் போராடத்தை துரிதப்படுத்தும் என்றார்.