For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ப.சிதம்பரம வீட்டை முற்றுகையிட முயற்சி - 300 தவ்ஹீத் ஜமாத்தினர் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: லிபரான் கமிஷன் அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள சங் பரி்வார் தலைவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற தவ்ஹீத் ஜமாத் கட்சியைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் 17வது ஆண்டு தினம் இன்று அயோத்தி உள்ளிட்ட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் அமைதியான முறையில் அனுசரிக்கப்பட்டது.

லிபரான் கமிஷன் அறிக்கையின் பின்னணியில் இன்றைய பாபர் மசூதி நினைவு தினம் வித்தியாசமான சூழலில் வந்திருப்பதால், முக்கியத்துவம் பெற்றது.

அயோத்தியில் அமைதி...

உ.பி. மாநிலம் அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு தினம் மிகவும் அமைதியான முறையில், அனுசரிக்கப்பட்டது.

மத்திய உள்துறையின் உத்தரவின்பேரில் அயோத்தி- பைசாபாத் பகுதி பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டது.

இந்த தினத்தை வீர தினமாக விஸ்வ இந்து பரிஷத் அறிவித்திருந்தது. அதேசமயம் சமாஜ்வாடிக் கட்சி கருப்பு தினமாக அறிவித்திருந்தது.

மத நல்லிணக்கம், அமைதியை வலியுறுத்தி இன்று சிறப்புப் பிரார்த்தனைகளுக்கு அகில இந்திய பாபர் மசூதி நடவடிக்கைக் குழு ஏற்பாடு செய்திருந்தது.

அயோத்தியில் மட்டும் கிட்டத்தட்ட 1000 பாதுகாப்புப் படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுத்தப்பட்டனர்.

தமிழகத்தில் பலத்த பாதுகாப்பு...

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி தமிழகத்திலும் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்புக்காக ஒரு லட்சம் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முக்கிய பகுதிகளில் 24 மணி நேரமும் போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர்.

சென்னையில், 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்கள், போலீசாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டன. இதுதவிர சென்னையில் உள்ள ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் போலீசாரின் ரோந்துப்பணி தீவிரப்படுத்தப்பட்டது.

ரயில்வே பாதுகாப்புப்படை போலீசாருடன், தமிழ்நாடு ரயில்வே போலீசார் ஓடும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

சென்னையில் உள்ள உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான நிலையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு, தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் விமான நிலையங்களுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

அதே போல கோயம்பேடு, பாரிமுனை உள்ளிட்ட பல பஸ் நிலையங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

பல்வேறு வழிபாட்டு இடங்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் கடைப்பகுதிகள், சினிமா தியேட்டர்கள், கடற்கரை போன்ற இடங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்தனர்.

மக்கள் அதிகம் கூடும் கோயில்கள் மற்றும் சுற்றுப்புறத்தில் மெட்டல் டிடெக்டர்கள், ரகசிய கேமராக்கள் வைக்கப்பட்டன. முக்கிய மசூதிகளுக்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது.

தடையை மீறியவர்கள் கைது...

இந்த நிலையில், லிபரான் கமிஷன் அறிக்கையின்படி பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சென்னையில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயன்ற தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சேர்ந்த சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகம் முழுவதும் இன்று முஸ்லீம் அமைப்புகள் சார்பில் கண்டனக் கூட்டங்கள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன.

சென்னையில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் சார்பில் அண்ணாசாலையில் உள்ள அண்ணா சிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இவ்வமைப்பின் பொதுச்செயலாளர் எஸ்.ஹைதர் அலி, மாநிலச் செயலாளர் மவுலானா நாசர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அதன் பின்னர் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை நோக்கி ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். ஆனால் இதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் போலீசாரின் தடுப்பை மீறி அண்ணா சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மறியலில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்லும்படி போலீசார் கூறியதால் வாக்குவாதம் முற்றி தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

பின்னர் தமுமுகவின் தலைவர்கள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டனர். இதையடுத்து அவர்கள் மறியலை கைவிட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்களில் சிலர் பாஜக தலைவர்கள் வாஜ்பாய், அத்வானி ஆகியோரின் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்பு கோஷமிட்டனர். வாலாஜா சாலையில் ஆர்ப்பாட்டம் செய்த தமுமுகவினர் மத்திய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர்.

சிதம்பரம் வீட்டை முற்றுகையிட முயற்சி...

இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் சார்பில் அதன் தலைவர் எஸ்.எம்.பாஸ்கர் தென் சென்னை மாவட்ட செயலாளர் யூனுஸ், வட சென்னை மாவட்ட செயலாளர் ஹனீபா முன்னிலையில் 300க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் நுங்கம் பாக்கம் சாலை கிருஷ்ணம்மாள் தெரு அருகே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

பாபர் மசூதி வழக்கை விரைந்து முடிக்க வலியுறுத்தியும், சம்பவத்துக்கு காரணமான இந்துத்துவ அமைப்பினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோஷமிட்டனர்.

லிபரான் கமிஷன் அறிக்கையின்படி வாஜ்பாய், அத்வானி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நுங்கம்பாக்கம் பைகிராப்ட் கார்டன் ரோட்டில் உள்ள மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் வீட்டை முற்றுகையிட தவ்ஹீத் ஜமாத் அமைப்பினர் செல்ல முயன்றனர்.

ஆனால் அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதில் 150 பெண்கள் உள்பட சுமார் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

பாபர் மசூதியை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஜனநாயக முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் காஜா முகைதீன் தலைமையில் சுமார் 70க்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பனகல் மாளிகை முன்பு முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதற்கு போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் அருகே இஸ்லாமிய ஜனநாயக கட்சியின் மாநில தலைவர் அக்ரம்கான் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X