For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கருணாநிதி ஓய்வு அறிவிப்பு: அடுத்த முதல்வர் யார்?-அழகிரிக்கு என்ன பதவி?

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi with family
சென்னை: முதல்வர் கருணாநிதி அடுத்த ஆண்டு மத்தியில் ஓய்வு பெறப் போவதாக அறிவித்துள்ளதால் அடுத்த முதல்வர் யார், அடுத்த துணை முதல்வர் யார் என்ற கேள்விகள் எழ ஆரம்பித்துள்ளன.

கோவையில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெறவுள்ள உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டுடன் அரசியல், பதவி உள்ளிட்டவற்றிலிருந்து விடுபடப் போவதாகவும், மக்களில் ஒருவனாக மாறப் போவதாகவும் முதல்வர் அறிவித்துள்ளார்.

இதையடுத்து அடுத்த முதல்வர் யார், துணை முதல்வர் யார் என்ற ஆர்வம் மக்களிடையே எழுந்துள்ளது.

ஏற்கனவே எதிர்பார்த்து வருவது போல மு.க.ஸ்டாலினை முதல்வர் பதவியில் அமர்த்த தலைவர் தீர்மானித்து விட்டார் என்று திமுகவினர் மத்தியில் பேச்சு அடிபடுகிறது.

அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின் முதல்வராக்கப்பட்டால் அவர் வகித்து வரும் துணை முதல்வர் பதவியில் யார் அமர்த்தப்படுவார் அல்லது துணை முதல்வர் பதவி அகற்றப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

முதல்வர் பதவிக்கான பக்குவத்தையும் அனுபவத்தையும் ஸ்டாலின் அடைய வேண்டும் என்பதற்காகவே அவரை அந்தப் பதவியில் உடனடியாக அமர்த்தாமல் பல்வேறு பரீட்சைகளை வைத்து வந்தார் கருணாநிதி.

மாணவர் அணி, இளைஞர் அணித் தலைவர் பதவி, எம்எல்ஏ, சென்னை மேயர் பதவி, உள்ளாட்சித் துறை அமைச்சர் பதவி, கட்சி துணைப் பொதுச் செயலாளர் பதவி, பொருளாளர் பதவி என அமர்த்தி அவரது திறமைகளைப் பரிசோதித்த பின்னர்தான் துணை முதல்வர் பதவியை உருவாக்கி அதில் ஸ்டாலினை அமர வைத்தார் கருணாநிதி.

எனவே முதல்வர் பதவியில் கருணாநிதிக்கு அடுத்து நிச்சயம் ஸ்டாலின்தான் என்பதில் திமுகவினர் மத்தியில் எந்த சந்தேகமும் இல்லை என்பது பொதுவான கருத்து.

அதேசமயம், இந்த அதிகார மாற்றம் சுமூகமான முறையில் நடைபெறுமா என்று சிலர் சந்தேகம் எழுப்புகின்றனர். காரணம்- மு.க.அழகிரி மற்றும் கனிமொழி.

அழகிரியை மத்திய அரசியலுக்கு அனுப்பி வைப்பதன் மூலம், மாநிலத்தில் ஸ்டாலினுக்கு இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும் திட்டத்தில்தான் அவரை எம்பியாக்கி மத்திய அமைச்சர் பதவியையும் வாங்கிக் கொடுத்தார் கருணாநிதி.

இருப்பினும் மத்திய அமைச்சர் பதவியில் அழகிரி செளகரியமாக இல்லை. இதற்கான காரணங்கள் அனைவரும் அறிந்ததே. அவரால் டெல்லி பதவியில் எத்தனை காலத்திற்கு நீடிக்க முடியும் என்பது அவருக்கே தெரியவில்லை. மீண்டும் மாநில அரசியலுக்கே அவர் திரும்பி வர விரும்புவதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.

இதனால் முதல்வர் பதவி ஸ்டாலினுக்குத் தரப்பட்டால் அழகிரிக்கு நிச்சயம் ஏதாவது முக்கியப் பதவியை, தந்தாக வேண்டிய நிலை ஏற்படலாம். அது கட்சிப் பதவியாக இருக்கலாம் என்கிறார்கள்.

ஸ்டாலினுக்குக் கீழ் அழகிரி துணை முதல்வராக வாய்ப்பில்லை. இதனால் அவருக்கு கட்சியின் மிக மிக முக்கியப் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.

இப்போது தென் மண்டலச் செயலாளர் என்ற அளவில் திருச்சிக்கு அந்தப் பக்கம் கன்னியாகுமரி வரை அழகிரியின் கட்டுப்பாட்டில் கட்சி உள்ளது. ஆனால், ஸ்டாலின் முதல்வரானால் கட்சியில் மாநில அளவில் மிக மிக முக்கியப் பொறுப்பை அழகிரி கோரலாம்.

அழகிரியின் வருகைக்குப் பின் தென் மண்டலத்தில் திமுக மாபெரும் சக்தியாக உருவெதிருப்பது அடுத்தடுத்த தேர்தல் முடிவுகள் காட்டிவிட்டன. அதிமுக கோட்டையாக கருதப்பட்ட தென் மாவட்டங்களை திமுகவுக்கு சாதமாக்கிக் காட்டியது அழகிரியின் அயராத உழைப்பும், கட்சியினரிடம் அவர் நடந்து கொள்ளும் விதமும் தான்.

அவரிடம் மாநில அளவிலான பொறுப்பைத் தந்தால் ஜெயலலிதாவுக்கும் வளர்ந்து வரும் தேமுதிகவுக்கு பெரும் அவர் நிச்சயம் மாபெரும் சவாலாக அமைவார் என்பது அழகிரி ஆதரவாளர்களின் எண்ணம்.

இதுதவிர முதல்வரின் மகளான கனிமொழியும் ஆக்டிவான பதவிக்காக காத்திருக்கிறார். அவருக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைக்கும் என எதிர்பார்ப்பு ரொம்ப பலமாகவே இருந்து வந்தது. ஆனால் அதற்கான சாதகமான நிலை ஏற்படாமலேயே உள்ளது.

இதனால் அழகிரி மாநில அளவில் முக்கிய கட்சி நிர்வாக்கப்பட்டால் அவர் விலகும் மத்திய அமைச்சர் பதவி கனிமொழிக்குத் தரப்படலாம்.

ஸ்டாலின்-ராகுல் காந்தி இடையே நல்ல அன்டர்ஸ்டான்டிங் இருப்பதால் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் முதல்வர் கருணாநிதிக்கு அளிப்பதைப் போலவே ஸ்டாலினுக்கும் தொடர்ந்து ஆதரவு தரலாம் என்றே தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X