For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

உண்ணாவிரதத்தை கைவிட சந்திரசேகர ராவை நேரில் சந்தித்து ரோசய்யா கோரிக்கை

By Staff
Google Oneindia Tamil News

K Chandrasekhara Rao at NIMS
ஹைதராபாத்: ஆந்திர முதல்வர் ரோசய்யா, சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் கே.சந்திரசேகர ராவை மருத்துவமனையில் நேரில் சந்தித்து போராட்டத்தைக் கைவிடுமாறு கோரிக்கை விடுத்தார். ஆனால் அதை ராவ் நிராகரித்து விட்டார்.

சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ராவ் உடல் நலம் பாதிக்கப்பட்டதால் ஹைதராபாத் நிஜாம் மருத்துவ அறிவியல் கழகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவரை நேற்று முதல்வர் ரோசய்யா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் முன்னாள் மத்திய அமைச்சர் அஜீத் சிங், சுகாதாரத் துறை அமைச்சர் தனம் நாகேந்தர் ஆகியோரும் சென்றனர்.

ராவிடம், உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுமாறும், பேச்சுவார்த்தைக்கு வருமாறும் ரோசய்யா கோரிக்கை விடுத்தார்.

அதற்கு ராவ் பதிலளிக்கையில், தெலுங்கானா தனி மாநிலமாக அறிவிக்கப்படும் வரை அல்லது அதற்கு சாதகமான அறிவிப்பு வெளியாகும் வரை போராட்டத்தைத் தொடரப் போவதாக கூறி விட்டார்.

துணை ராணுவம் வந்தது...

இதற்கிடையே, தெலுங்கானா தனி மாநிலம் கோரி நடத்தப்படும் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. தெலுங்கானா பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போலீசாரை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்குவதால், முதல்வர் ரோசய்யாவின் வேண்டுகோளை ஏற்று 20 கம்பெனி மத்திய போலீஸ் படையை மத்திய அரசு அனுப்பியுள்ளது.

ஆந்திராவில் தெலுங்கானா பகுதியில் உள்ள 11 மாவட்டங்களை பிரித்து தெலுங்கானா மாநிலம் அமைக்க வலியுறுத்தி, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சித் தலைவர் சந்திரசேகர ராவ் கடந்த 29ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார்.

நேற்று 8வது நாளாக உண்ணாவிரதம் இருந்தார். அவருடைய உடல்நிலை மோசமானதால், தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த நிலையில், தெலுங்கானா பகுதியில் டி.ஆர்.எஸ். அறிவித்த 48 மணி நேர பந்த் நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கியது.

இதன் காரணமாக, கரீம் நகர், வாரங்கல், மெடக், நிசாமாபாத், நலகுண்டா, கம்மம் உட்பட 11 மாவட்டங்களில் இயல்பு வாழ்க்கை முடங்கியது. 6 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்படவில்லை.

நேற்று முன்தினம் நள்ளிரவு, ஐதராபாத், கரீம் நகர், வாரங்கல், மெடக் பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட அரசு பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. 4 பஸ்களுக்கு தீ வைக்கப்பட்டது. பெட்ரோல் பங்க்குகளும் தாக்கப்பட்டதால், தெலுங்கானா பகுதியில் எல்லா பெட்ரோல் பங்க்குகளும் மூடப்பட்டன.

ஆந்திரா வங்கிகளின் பெயர் பலகையை அழித்து, தெலுங்கானா வங்கி என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுதி வருகின்றனர். மேலும், தண்டவாளங்களில் செய்யப்படும் நாசவேலை போன்றவற்றால் ரயில் போக்குவரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநில பா.ஜ.க தலைவர் பண்டாரு தத்தாத்ரேயா தலைமையில் நேற்று காலை ஆயிரக்கணக்கான பா.ஜ.க தொண்டர்கள், தெலுங்கானா மாநில கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து ஹைதராபாத்தில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டனர்.

சந்திரசேகர ராவ் உடல்நிலை மோசமானதாக வந்த தகவலால், டி.ஆர்.எஸ். தொண்டர் ராஜு, கல்லூரி மாணவர்கள் பிரவீன், ராஜேந்தர், கிருஷ்ணா, ரமேஷ் ஆகியோர் கடிதம் எழுதி வைத்து விட்டு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

இந்த போராட்டம் பற்றி தனது அமைச்சர்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய பிறகு முதல்வர் ரோசய்யா அளித்த பேட்டியில், மாநிலத்தை பிரிக்கும் அதிகாரம் என்னிடம் இல்லை. ஆனால், வன்முறை, கலவரம் நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கை காப்பாற்ற சந்திரசேகர ராவ் தனது உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும்.

சந்திரசேகர ராவ் தனது போராட்டத்தை தொடங்கிய கடந்த 29ம் தேதியில் இருந்து அவர் மீது பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளை நல்லெண்ண நடவடிக்கையாக வாபஸ் பெற அரசு முடிவு செய்துள்ளது என்றார்.

மாநில உள்துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி தலைமையில் தெலுங்கானா பகுதியை சேர்ந்த 7 அமைச்சர்கள், 4 எம்.பி.க்கள், நேற்று காலை 8 மணிக்கு மருத்துவமனைக்கு சென்று சந்திரசேகர ராவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஒரு மணி நேரம் நடந்த இந்த பேச்சுவார்த்தையின்போது, தெலுங்கானா தனி மாநில மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யும் வரை உண்ணாவிரதத்தை கைவிடும் பேச்சுக்கே இடமில்லை என்று சந்திரசேகர ராவ் திட்டவட்டமாக கூறி விட்டார்.

இந்த நிலையில், தெலுங்கானா பகுதியில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டு உள்ள ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதி போலீசாரை ஆர்ப்பாட்டக்காரர்கள் அடையாளம் கண்டுபிடித்து தாக்குகின்றனர்.

இதனால், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த மத்திய ஆயுதப்படை போலீசாரை அனுப்பும்படி முதல்வர் ரோசய்யா விடுத்த வேண்டுகோளை ஏற்று, 20 கம்பெனி மத்திய போலீசாரை தெலுங்கானாவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் அனுப்பியுள்ளார்.

தொடர்ந்து தெலுங்கானா பகுதியில் நிலைமை பதட்டமாக உள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X