For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பின்லேடன்: கிடைக்காமல் தவிக்கும் அமெரிக்கா

By Staff
Google Oneindia Tamil News

Osama Bin Laden
வாஷிங்டன்: அல் கொய்தா தலைவர் ஒசாமா பின் லேடன் இருக்கிறாரா, இருந்தால் எங்கே இருக்கிறார். ஒரு வேளை இறந்து விட்டாரா, அப்படியானால் எப்படி இறந்தார், எப்போது இறந்தார் என்பது குறித்து ஒரு துப்பு கூட கிடைக்காமல் அமெரிக்கா தவித்து வருகிறது.

பின்லேடன் ஆப்கன்- பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் பதுங்கியிருக்கலாம். இருப்பினும் அதுகுறித்து உறுதியான தகவல் எங்களிடம் இல்லை. இருப்பினும் அவரைத் தேடும் பணியை தீவிரமாக்கி வருகிறோம் என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் அல் கொய்தா தாக்குதல் நடத்தி எட்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. இருப்பினும் அவர்களின் முக்கிய இலக்கான பின்லேடனின் நிழலைக் கூட நெருங்க முடியாமல் உள்ளது அமெரிக்கா.

பின்லேடன் குறித்து தொடர்ந்து மாறுபட்ட தகவல்களே செய்திகளாக வந்து கொண்டுள்ளன. அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஒரு தகவல் உலா வந்தவண்ணம் உள்ளது. பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறார் என்று இன்னொரு தகவல் வருகிறது. இல்லை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள பழங்குடியினர் பகுதியில்தான் பின்லேடன் பதுங்கியிருக்கிறார் என்று இன்னொரு தகவல் வருகிறது.

ஆனால் பின்லேடன் உயிருடனேயே இல்லை என்றும் ஒரு தகவல் தொடர்ந்து வந்து கொண்டு உள்ளது.

அமெரிக்காவே கூட பின்லேடன் இறந்து விட்டதாக ஒரு முறை கூறியது. பின்னர் அவர்களே பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறினர்.

தற்போது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் இடையிலான பகுதியில்தான் லேடன் பதுங்கியிருக்க வேண்டும் என அமெரிக்கா நம்புகிறது. இந்தப் பகுதிக்குள் ஊடுறுவி பின்லேடனைக் கண்டுபிடிக்க தனது வேட்டையை தீவிரப்படுத்தப் போவதாக அமெரிக்கா கூறுகிறது.

இருப்பினும் இந்த விஷயத்தில் அமெரிக்கா குழப்பத்துடன் இருப்பது தெரிகிறது.

அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேம்ஸ் ஜோன்ஸ் கூறுகையில், மேற்கு பாகிஸ்தானில் உள்ள அடர்த்தியான வனம் மற்றும் மலைப் பகுதியில் பின்லேடன் பதுங்கியிருக்க வாய்ப்புள்ளது. அங்கிருந்தபடி அவ்வப்போது அவர் ஆப்கானிஸ்தானுக்குள்ளும் வந்து போவதாக சந்தேகிக்கிறோம் என்றார்.

பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் கூறுகையில், பின்லேடன் குறித்து நீண்ட காலமாகவே எங்களுக்கு உறுதியான தகவல் இல்லை. இதை நீண்ட வருடங்களாகவே என்று கூட சொல்லலாம் என்றார்.

ஆனால் லேடனைப் பிடிக்கும் வேட்டையை தீவிரப்படுத்தப் போவதாக ஜோன்ஸ் கூறுகிறார்.

கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆப்கானிஸ்தான் நாட்டின் கிழக்கில் உள்ள டோராபோரா மலைப் பகுதியில் பின்லேடன் பதுங்கியிருந்தது அமெரிக்காவுக்கு உறுதியாகத் தெரிய வந்தது. பெரும் படையை அனுப்பியிருந்தால் அப்போது நிச்சயம் லேடனைப் பிடித்திருக்க முடியும். ஆனால் அமெரிக்கா பெருமளவிலான வீரர்களை அங்கு அனுப்ப அப்போது யோசித்து பின்வாங்கியதால் கைக்கெட்டும் தூரத்தில் இருந்த லேடன் தப்பி விட்டார்.

2004ம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை ஆப்கான் எல்லையையொட்டிய தனது பகுதியில் இருந்த தீவிரவாதிகளை விரட்ட பாகிஸ்தான் ராணுவம் தீவிர தாக்குதலை மேற்கொண்டது. அப்போது அமெரிக்காவும் பாகிஸ்தானுடன் இணைந்து தாக்கியிரு்நதால் பின்லேனைப் பிடிக்க முடிந்திருக்கும். அந்த வாய்ப்பையும் அமெரிக்கா தவற விட்டது.

2005ம் ஆண்டு ஜூலை மாதம் அமெரிக்க சிஐஏ இயக்குநர் போர்ட்டர் கோஸ், பின்லேடன் இருப்பிடம் குறித்து உறுதியான தகவல் தன்னிடம் உள்ளதாக தெரிவித்தார். ஆனால் அதற்குப் பிறகு அவர் விளக்கவே இல்லை.

2006ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி அப்போதைய புஷ் அரசுக்கு நெருக்கமான ஈரானிய தலைவரான மிக்கேல் லிடீன் கூறுகையில், என்னைப் பொறுத்தவரை ஒசாமா பின் லேடன் இந்த உலகை விட்டு கடந்த டிசம்பர் மத்தியிலேயே போய் விட்டார். இதையே ஈரானிய மக்களும் கூட நம்புகிறார்கள் என்றார்.

2007ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி அமெரிக்காவின் தீவிரவாத எதிர்ப்புப் பிரிவு நிபுணரான ரிச்சர்ட் கிளார்க் கூறுகையில், பின் லேடனின் லேட்டஸ்ட் வீடியோவைப் பார்க்கும்போது அவர் தனது தாடியை டிரிம் செய்திருப்பது தெரிகிறது. முஸ்லீம்களின் அனைத்துப் பிரிவினரையும் கவருவதற்காக இவ்வாரு செய்துள்ளதாக தெரிகிறது.

இதை வைத்துப் பார்க்கையில், தென் கிழக்கு ஆசியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா ஆகியவற்றில் ஏதாவது ஒரு பகுதியில் அவர் இருக்கலாம் என்றார்.

2008ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி அமெரிக்க குழு ஒன்று வெளியிட்ட ஆய்வறிக்கையில், பாகி்ஸ்தானில் உள்ள மூன்று நிலைகளில் ஒன்றில் லேடன் மறைந்திருக்கலாம் எனக் கூறப்பட்டது. குறிப்பாக கலாம் பள்ளத்தாக்கில் லேடன் இருக்கலாம் என அது தெரிவித்தது.

இந்த ஆண்டு டிசம்பர் 4ம் தேதி பாகிஸ்தானில் பிடிபட்ட தலிபான் தீவிரவாதி கூறுகையில், கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரியில் பின்லேடனை சந்தித்து விட்டுத் திரும்பிய ஒரு முக்கிய நபரை தான் சந்தித்ததாக கூறினார். ஆப்கானிஸ்தானில் உள்ள கஸ்னி என்ற இடத்தில் லேடனை தான் சந்தித்ததாக அந்த நபர் கூறினார் என்று அந்த தீவிரவாதி தெரிவித்தார்.

இப்படி மாற்றி மாற்றி லேடன் குறித்த கருத்துக்கள் நிலவி வருகிறது. கடைசியாக தற்போது வசிரிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தான் எல்லை அல்லது ஆப்கானிஸ்தானுக்குள் ஆகிய மூன்று இடங்களில் ஏதாவது ஒன்றில் லேடன் பதுங்கியிருக்கலாம் என்ற முடிவுக்கு அமெரிக்க உளவு அமைப்புகள் வந்துள்ளன. இதை மையமாக வைத்து தேடுதல் பணியை அமெரிக்கா முடுக்கிவிடவுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X