• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திமுகவின் திருமங்கலம் பாணி தில்லுமுல்லு-ஜெ

By Staff
|

Jayalalitha
சென்னை: திருச்செந்தூர், வந்தவாசி இடைத் தேர்தலை திருமங்கலம் பாணியில் சந்திக்க திமுக திட்டமிட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திருச்செந்தூர், வந்தவாசி ஆகிய சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவித்ததிலிருந்து, இரு தொகுதிகளிலும் திமுகவினரின் அராஜகம், அட்டூழியம் தலைவிரித்து ஆடுகிறது.

பண பலம், படை பலம், அதிகார பலம் ஆகியவற்றின் மூலம் திருமங்கலம் பாணியில் தேர்தலைச் சந்திக்க திமுக திட்டம் தீட்டி வருகிறது.

திமுக அரசின் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி நாற்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறும் என்று வழக்கம் போல இந்த முறையும் அறிவித்து இருக்கிறார். இதிலிருந்தே தில்லுமுல்லு வேலை செய்ய திமுக திட்டம் தீட்டியிருப்பது தெளிவாகிறது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், நேற்று திருச்செந்தூர் தொகுதியில் கழகத்தின் தேர்தல் அலுவலகத்துக்குள் புகுந்து அங்குள்ள பொருட்களை சூறையாடியதோடு மட்டுமல்லாமல், பயங்கர ஆயுதங்களை கொண்டு கட்சி தொண்டர்களை வெட்டும்படி கூறியிருக்கிறார்.

இந்தத் தாக்குதலில் ஆறுமுகனேரி பேரூராட்சி 4வது வார்டு கட்சி செயலாளர் அரசகுரு, இளைஞர் பாசறை தலைவர் தாமோதரன் ஆகியோருக்கு வெட்டுக்காயம் ஏற்பட்டுள்ளது. இதே பகுதியைச் சேர்ந்த வார்டு அதிமுக தலைவர் முருகேசன் மற்றும் இளைஞர் பாசறை செயலாளர் சிவபிரகாஷ் ஆகியோர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

இது குறித்து காவல் துறையினரிடம் புகார் கொடுத்தால், புகார் மனுவை பெற்றுக் கொள்ளவே காவல் துறையினர் முதலில் தயக்கம் காட்டினர். பின்னர் கட்சி தொண்டர்கள் தர்ணா போராட்டம் நடத்தியதன் விளைவாக புகார் மனுவை காவல் துறையினர் பெற்றுக் கொண்டு, வெட்டிய திமுகவினர் மீது சாதாரண வழக்குகளை பதிவு செய்துள்ளனர்.

அதே சமயத்தில், திமுகவினர் அளித்த பொய் புகாரை பெற்றுக் கொண்டு வெட்டுக் காயம் அடைந்த கட்சி தொண்டர்கள் மீது ஆயுதங்களை வைத்து மிரட்டியதாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தாக்கியவர்களை விட்டுவிட்டு, தாக்கப்பட்டவர்கள் மீது வழக்கு போடுகிறீர்களே என்று காவல் துறையினரிடம் கேட்டால், எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன, மேலிடத்து உத்தரவு என்று பதில் தெரிவிக்கின்றனர். காவல் துறையினரின் இந்த பாரபட்ச செயலுக்கு எனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அதே போன்று, உடன்குடி ஒன்றிய ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுவாமிநாதனுக்கு திமுகவினர் கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்து, காவல் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்ட பிறகும், அவருடைய வாகனத்தை திமுகவினர் அடித்து நொறுக்கியுள்ளனர். இதிலிருந்து காவல் துறை திமுகவின் ஏவல் துறையாக மாறிவிட்டது என்பது தெளிவாகிறது.

வந்தவாசி தொகுதியிலும் திமுகவினரின் அராஜகம் தலைவிரித்து ஆடுகிறது. திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டால் அது குறித்து காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை. அவர்களுடைய வாகனங்களையும் மறிப்பதில்லை. அதே சமயத்தில் கட்சி தொண்டர்கள் செல்லும் வாகனங்களை வழி மறித்து அவர்களை துன்புறுத்துகின்றனர்.

மேலும், திமுக அமைச்சர்கள் சிவப்பு நிற சுழல் விளக்குடன் வாகனத்தில் பவனி வருகின்றனர். பாதுகாப்பு வாகனங்களும் உடன் செல்கின்றன.

இதையெல்லாம் காவல் துறையினர் கண்டு கொள்வதில்லை. தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்கள் இருக்கும் போதே, படை பலம், அதிகார பலம் தலைவிரித்து ஆட ஆரம்பித்து விட்டது.

இதை கட்டுப்படுத்த வேண்டிய தேர்தல் ஆணையம் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. வாக்காளப் பெருமக்கள் தான் நல்லதொரு தீர்ப்பை வழங்க வேண்டும். திமுக அரசால் வன்முறை, அராஜகம், அட்டூழியம் ஆகியவற்றைத் தான் அரங்கேற்ற முடியுமே தவிர, மக்களின் அவல நிலையை போக்க முடியாது. கடந்த மூன்றரை ஆண்டு காலத்தில் மக்களை பல்வேறு துன்பங்களுக்கு இந்த அரசு ஆளாக்கியிருக்கிறது.

விஷம் போல் ஏறிக் கொண்டிருக்கின்ற விலைவாசியை கட்டுப்படுத்த வக்கில்லாமல் மக்களை அவதிக்கு உள்ளாக்கியிருக்கும் ஆட்சி திமுக ஆட்சி. ஒளிமயமாக விளங்கியிருந்த தமிழகத்தை இருளில் மூழ்கடித்த ஆட்சி திமுக ஆட்சி. அப்பாவி இலங்கைத் தமிழர்களை அழிக்க உறுதுணையாக இருந்த ஆட்சி திமுக ஆட்சி.

தமிழக மீனவர்கள் அன்றாடம் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் ஆட்சி திமுக ஆட்சி.

மீனவர்களுக்கு எதிரான சட்டத்தை கொண்டு வர துடிக்கும் மத்திய அரசின் நடிவடிக்கையை தட்டிக் கேட்காத ஆட்சி திமுக ஆட்சி. மணலை கொள்ளையடித்து குடிநீர்ப் பற்றாக்குறையை நிகழ்த்தி கொண்டிருக்கும் ஆட்சி திமுக ஆட்சி.

கச்சத்தீவு தாரை வார்க்கப்படும் போது வாய்மூடி மவுனியாக இருந்தவர் கருணாநிதி. தமிழகத்திற்கு வரும் காவேரி நீரை தடுக்கும் வகையில் கர்நாடக அரசு பல அணைகளை கட்டிக் கொண்ட போது அதை வேடிக்கை பார்த்தவர் கருணாநிதி.

காவேரி நதிநீர்ப் பிரச்சனை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற்றவர் கருணாநிதி. கர்நாடகதமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையேயான காவேரி நதிநீர் ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி.

தமிழகத்திற்கு சாதகமாக இருந்த முல்லைப் பெரியாறு பிரச்சனையை பாதகமாக ஆக்கியவர் கருணாநிதி. பாலாறு, பொன்னையாறு ஆகியவற்றின் குறுக்கே ஆந்திர அரசு தடுப்பணைகள் கட்டுவதை கண்டுகொள்ளாமல் இருப்பவர் கருணாநிதி. ஒகேனக்கல் திட்டத்தை ஒத்திப்போட்டவர் கருணாநிதி.

இவை எல்லாவற்றிற்கும் காரணம் கருணாநிதியின் சுயநலமும், குடும்ப வருமானமும் தான். இலவச கேபிள் இணைப்பு தருகிறேன் என்று வாக்குறுதி அளித்தாரே கருணாநிதி? இதை நிறைவேற்றினாரா? இலவச டிவி என்ற போர்வையில் தன் குடும்பத்தின் கேபிள் டிவி வருமானத்தை பல கோடி ரூபாய்க்கு உயர்த்திக் கொண்டார் கருணாநிதி.

ஒரு சில குடும்பங்கள் வளம் பெற வாக்களிக்க வேண்டுமா? அல்லது கோடிக்கணக்கான ஏழை, எளிய குடும்பங்கள் வளம் பெற வாக்களிக்க வேண்டுமா? என்பதை தமிழக மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.

தன் குடும்ப வருமானத்தை பெருக்குவதற்காக, தன்னுடைய ஆட்சியை பாதுகாத்துக் கொள்வதற்காக, ஸ்பெக்ட்ரம் ஊழலில் அடித்த கோடிகளை தக்க வைத்துக் கொள்வதற்காக, தமிழக மக்களின் நலன்களை, உரிமைகளை தாரை வார்த்துக் கொண்டிருக்கின்ற சுயநலவாதி கருணாநிதியின் குடும்ப ஆட்சியை வீழ்த்தி, தமிழ்நாட்டை காப்பாற்றிட நல்ல முடிவினை எடுக்கும் பொறுப்பு தமிழக மக்களிடம் தான் இருக்கின்றது.

அதை நிரூபிக்கின்ற வகையில், பணத்தையும், அதிகாரத்தையும், வன்முறையையும் நம்பி தேர்தல் சந்திக்கும் கருணாநிதியை வீழ்த்திட, ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டுள்ள திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி தொகுதி வாக்காளர்கள் நடைபெற இருக்கின்ற இடைத் தேர்தல்களில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து அமோக வெற்றி பெற செய்திட துணை நிற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

அதிமுக ஆட்சியில் இடைத் தேர்தல்கள் நடந்தபோது இதே போன்ற குற்றச்சாட்டுகளை திமுக முன் வைத்தது நினைவுகூறத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X