For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கச்சத்தீவை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை - மத்திய அரசு

By Staff
Google Oneindia Tamil News

Katchativu
டெல்லி: கச்சத்தீவு முடிந்து போன கதை. அதை திரும்பப் பெறுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. தமிழக மீனவர்களின் நலன் காக்க புதிய ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியும் என்று மத்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ராஜ்யசபாவில் தெரிவித்தார்.

இதுகுறித்து ராஜ்யசபாவில் அவர் பேசுகையில், கச்சத்தீவு மீதான உரிமை பிரச்சினை தற்போது தீர்க்கப்பட்டு விட்ட ஒன்று. அதை மறுபடியும் மறு ஆய்வு செய்யும் பேச்சுக்கே இடமில்லை. இதுகுறித்து இலங்கையுடன் பேச்சு நடத்தும் திட்டமும் அரசிடம் இல்லை.

இந்தியா, இலங்கை இடையிலான சர்வதேச கடல் எல்லை 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களின் மூலம் இறுதி செய்யப்பட்டு விட்டது.

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவதாக புகார்கள் வருகின்றன. எனவே, கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்காக இலங்கை அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள நாங்கள் யோசனை தெரிவித்துள்ளோம். இதில் உள்ள நியாயத்தை இலங்கை அரசு உணரும் என்று நம்புகிறோம். எனவே, சில நாட்களில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி விடும்.

கச்சத்தீவு பிரச்சினை முடிந்துபோன விஷயம். அதில் மறுபரிசீலனை செய்வது அல்லது கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார் கிருஷ்ணா.

முன்னதாக விவாதத்தைத் தொடங்கி வைத்து பாஜக உறுப்பினர் வெங்கையா நாயுடு பேசுகையில்,

இலங்கையில் அகதி முகாம்களில் உள்ள தமிழர்களின் நிலைமை மிகவும் பரிதாபமாக உள்ளது. இதுபற்றி மத்திய அரசு உறுதியான தகவல் எதுவும் அளிக்கவில்லை. இது பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையிலான பிரச்சினை அல்ல.

இலங்கையில் வாழும் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை. ஆகவே, உண்மை நிலையை அறிய, அங்கு அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் குழுவை அனுப்பி வைக்க வேண்டும். ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்ட குழுவின் அறிக்கையை சபையில் தாக்கல் செய்தால் மகிழ்ச்சி அடைவோம் என்றார்.

அதற்குப் பதிலளித்த எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே விடுத்த அழைப்பின்பேரில், ஓர் இந்திய குழு அனுப்பி வைக்கப்பட்டது. அது நாடாளுமன்றக் குழுவாக இல்லாதபோதிலும், அதில் சில எம்.பிக்கள் இடம்பெற்றனர். அவர்கள் அங்கு சென்று திரும்பிய பிறகு பிரதமரிடம் அறிக்கை அளித்தனர்.

(அப்போது குறுக்கிட்ட அதிமுக எம்.பி. டாக்டர் மைத்ரேயன், அந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யாதது ஏன்? என்றார்)

இப்போது குழுவை அனுப்ப முடியாது:

இலங்கைக்கு மீண்டும் குழுவை அனுப்புவது பற்றி நாடாளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். எனது கருத்து என்னவென்றால், இலங்கை அதிபர் தேர்தல் நெருங்கும் நேரத்தில், அங்கு குழுவை அனுப்பக்கூடாது என்பதுதான்.

இலங்கை நமது நட்பு நாடு. இந்தியாவின் பாதுகாப்புக்காக இலங்கையுடன் சுமூக உறவை கடைபிடித்து வருகிறோம். நாட்டு நலனுக்காக இலங்கையுடன் ராணுவ ஒத்துழைப்பை மேற்கொண்டு வருகிறோம். போரில் இலங்கை ராணுவத்துக்கு இந்தியா உதவி செய்ததாக கூறுவது தவறு.

போரின்போது, தமிழர்கள் பாதுகாப்பாக வெளியேற அனுமதிக்குமாறு இலங்கை அரசை வற்புறுத்தியதே, இந்தியாதான். மனித உரிமை மீறல்கள் எங்கு நடந்தாலும், அதை இந்தியா அங்கீகரித்தது இல்லை.

இலங்கையில் உள்ள அகதிகள் முகாம்களில் இருந்து ஒன்றரை லட்சம் பேர், அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மீதி உள்ள ஒரு லட்சம் பேரையும் குடியேற்றம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்துவோம்.

இலங்கை பிரச்சினைக்கு அரசியல் தீர்வுதான், நிரந்தர தீர்வாக அமையும். அதற்கான அரசியல் நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்பட வேண்டும். இலங்கை அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை திருத்தி நடைமுறைப்படுத்துவது மூலமே தீர்வு காண முடியும்.

இலங்கை தமிழர்களின் மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு இந்திய அரசு கணிசமான நிதி உதவி அளித்துள்ளது. தமிழகத்தில் இருந்து நிவாரண பொருட்கள் அடங்கிய இரண்டரை லட்சம் குடும்ப பைகள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐ.நா. அகதிகள் அமைப்பு மூலமாக வினியோகிக்கப்பட்டன. அவையெல்லாம் பயனாளிகளிடம் போய் சேர்ந்து விட்டதாகவே எங்களுக்கு தகவல் வந்துள்ளது. இருப்பினும், இலங்கை தமிழர்களுக்கு செய்தது போதுமானது அல்ல என்பதை ஏற்றுக்கொள்கிறேன்.

இலங்கையில் இந்திய அரசு மேலும் பல திட்டங்களை மேற்கொண்டு வருகிறது. அவற்றை கண்காணித்து வருகிறோம். சிங்கள பகுதிகளில் மட்டுமே திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக கூறுவது தவறு என்றார்.

பின்னர் பாஜக உறுப்பினர் ரவிசங்கர் பிரசாத் எழுந்து, இப்பிரச்சினை தமிழகத்தில் ஒரு முக்கிய அரசியல் பிரச்சினை என்பதால்தான், அத்தனை கட்சிகளும் இப் பிரச்சினையை எழுப்புகிறார்கள் என்றார்.

தொடர்ந்து சிபிஐ உறுப்பினர் டி.ராஜா பேசுகையில்,

அகதி முகாம்களில் வசிக்கும் தமிழர்களை இலங்கை அரசு அளித்த உறுதிமொழியின்படி, 6 மாத காலத்துக்குள் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இலங்கை தமிழர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சிங்களவர்களுக்கு சமமாக சமஉரிமை கிடைக்கும்படி இலங்கை அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். அவ்வாறு இயலாத பட்சத்தில் கச்சத்தீவு ஒப்பந்தத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

ஒருசிலர் மட்டுமே இலங்கைக்கு சென்று வந்துள்ளதால், உண்மை நிலையை கண்டறியும் வகையில், அனைத்து கட்சி எம்.பி.க்களை கொண்ட குழு ஒன்றை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்றார்.

சிபிஎம் உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில்,

கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்த பிறகு, 1976-ம் ஆண்டு முதல் 1983-ம் ஆண்டுவரை தமிழக மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்து வந்துள்ளனர். ஆனால் தற்போது இந்த நிலைமை இல்லை. எனவே, இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். முடியாத பட்சத்தில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும்.

மேலும், தமிழர்களுக்கு சம உரிமை அரசியல்ரீதியாக கிடைக்க வழி வகுக்கப்படும் என இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இதற்கு காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றார்.

திமுகவைச் சேர்ந்த திருச்சி சிவா பேசுகையில்,

இலங்கை அரசு முகாம்களில் இருந்து தமிழர்களை வெளியேற்றுவதால் மட்டும் இப்பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. இலங்கை தமிழர்களுக்கு அரசியல்ரீதியாக சம உரிமை கிடைக்க வழிவகுக்க வேண்டும். கச்சத்தீவு ஒப்பந்தத்தின் அடிப்படையில் தமிழக மீனவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றார்.

மதிமுகவின் மலைச்சாமி பேசுகையில்,

ராமநாதபுரம், ராமேசுவரம் மீனவர்களின் துயரங்களை நீக்க வேண்டுமானால் கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் அல்லது அதை செயல் இழக்க செய்ய வேண்டும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X