For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஜெ-ராமதாஸ் புறக்கணிக்கப்பட்டவர்கள்-கனிமொழி

By Staff
Google Oneindia Tamil News

வந்தவாசி: திமுக ஆட்சிக்கு 'ஜீரோ' மதிப்பெண் போட்டதால் தான் ராமதாஸை நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் பூஜ்ஜியம் ஆக்கினார்கள் என்று திமுக எம்பி கனிமொழி கூறினார்.

இடைத் தேர்தல் நடக்கும் வந்தவாசி தொகுதியில் திமுக வேட்பாளர் கமலக்கண்ணனை ஆதரித்து கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

தெல்லார் என்ற இடத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசுகையில்,

எத்தனையோ ஆட்சிகளைப் பார்த்திருக்கிறோம். மன்னர்களின் பொற்கால ஆட்சி பற்றி பாடப் புத்தகங்களில் படித்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டில் தான் முதல்வர் கருணாநிதியின் பொற்கால ஆட்சியை நேரடியாக பார்க்கிறோம்.

கடந்த ஆட்சியில் பசி, பட்டினியால் மக்கள் வாடினார்கள். அனைவருக்கும் உணவு வழங்கக்கூடிய தஞ்சை தரணியில் மக்கள் எலிக்கறி சாப்பிட்டதை பார்த்தோம்.

ஆனால் கருணாநிதி ஆட்சிக்கு வந்ததும் 2 ரூபாய்க்கு 1 கிலோ அரிசி வழங்கினார். இந்த ஆட்சிதான் மக்கள் ஆட்சி.

சாதாரண மக்கள் அறுவை சிகிச்சை செய்துகொண்டால் எவ்வளவு கஷ்டம், எவ்வளவு செலவாகும் என்பது அனைவருக்கும் தெரியும். இதையெல்லாம் உணர்ந்து கலைஞர் காப்பீடு திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இப்படி மக்களுக்கு என்னென்ன வேண்டும் என்று சிந்தித்து, மக்கள் கோரிக்கை வைக்காமலேயே தேவைகளை நிறைவேற்றும் அரசு இது.

எத்தனையோ இடைத்தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள், வாக்குப்பதிவு இயந்திரம் சரியில்லை, மக்கள் சரியில்லை என்று சொன்னார்கள். கடந்த தேர்தலை சிலர் புறக்கணித்தனர். அது மக்களை கைவிட்டதாகத்தான் அர்த்தம்.

கடந்த தேர்தலில் உங்களை புறக்கணித்தவர்களை நீங்கள் புறக்கணிக்க வேண்டும்.

நமது சிறப்பான ஆட்சிக்கு 'ஜீரோ' மதிப்பெண் போட்டார் ராமதாஸ். மக்கள் அதை ஏற்கவில்லை. அதனால்தான் நாடாளுமன்றத் தேர்தலில் பாமகவுக்கு மக்கள் ஜீரோவை பதிலாகத் தந்தார்கள்.

ராமதாஸை மக்கள் புறக்கணித்தார்கள். பாமகவை பூஜ்ஜியம் ஆக்கினார்கள்.

இந்த இடைத்தேர்தலில் தனது கட்சியனரை 'ஓ' போடச் சொல்லியிருக்கிறார் அவர். மக்கள் இதையும் புறக்கணிக்க வேண்டும்.

அதே போல ஜெயலலிதாவை மக்கள் என்றோ புறக்கணித்து விட்டார்கள். அப்படி புறக்கணிக்க என்ன காரணம்?. கருணாநிதி ஆட்சி பற்றி அவர் தவறாகப் பேசியது தான்.

இந்தத் தேர்தலிலும் மக்கள் அவரை புறக்கணிப்பார்கள் என்றார்.

தீவிர பிரச்சாரம்-திருமாவளவன்:

இந் நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திமுக அரசு அடித்தட்டு மக்களுக்காகவும், நடுத்தர மக்களுக்காகவும் ஏராளமான நலத்திட்டங்களை அறிவித்து அவற்றை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. அதனால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் நன்மதிப்பையும் பெற்றுள்ளது.

குறிப்பாக, அண்மையில் அறிவிக்கப்பட்டு வெற்றிகரமாக நடைமுறையில் இருந்து வரும் "கலைஞர் காப்பீட்டுத் திட்டம்' அனைத்துத் தரப்பு மக்களின் பேராதரவையும் பெற்றுள்ளது.

இந்நிலையில் திமுக வேட்பாளர்களின் வெற்றி மிக எளிதானது என்பதை அறிவோம். எனினும் அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைப்பது கூட்டணி கட்சி என்கிற முறையில் விடுதலைச் சிறுத்தைகளின் கடமையாகும்.

ஆகவே, இரு தொகுதிகளிலும் விடுதலைச் சிறுத்தைகள் திமுக வேட்பாளர்களின் வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

மேலும் வரும் 9ம் தேதி திருச்செந்தூர் தொகுதியிலும், 10ம் தேதி வந்தவாசி தொகுதியிலும் திருமாவளவன் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X