For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

'மொழியின் பெயரால் பகைமையா?'

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழுக்கு மலையாளம் விரோதம் அல்ல, தெலுங்கு விரோதம் அல்ல, கன்னடமும் விரோதம் அல்ல... அதைப் போலவே அந்த மொழிகளும் விரோதம் பாராட்டாமல் இருக்க வேண்டும் என்றார் கருணாநிதி.

சென்னையில் திரைப்பட நடிகர்களுக்கு விருது வழங்கும் விழாவில் அவர் பேசியது:

நான் எழுதிய வசனங்களை வைத்துக் கொண்டே ஒரு கற்பனை நாடகத்தை இங்கே நடத்தினார்கள். அதில் வசந்த சேனைக்கு பதிலாக இப்போது ஆங்கிலம் வந்து அமர்ந்திருப்பதை எடுத்துச் சொல்லி, தமிழைக் காப்பாற்றியே தீருவோம் என்றனர். தமிழை யாரும் அழிக்க முடியாது.

குஷ்பு தமிழிலே பேசிய பிறகும் தமிழ் அழியவில்லை என்றால் தமிழின் அந்த மொழி வல்லமை எத்தகையது என்பதை நாம் உணரலாம். தமிழுக்கு அத்தகைய சக்தி உண்டு. அதனால் தான் உலகம் முழுவதும் பரவியிருக்கின்ற மொழிகளில் ஒன்றாக தமிழ் மொழி இருக்கின்றது.

ஆங்கிலத்தைப் போல இது ஆட்சி செய்ய வந்த மொழியல்ல. வேறு மொழிகளைப் போல ஒரு மாநிலத்திலே வந்து தங்களை ஆதிக்கம் செய்ய நினைக்கின்ற மொழியல்ல. இந்த மொழி அனைவராலும் போற்றப்படுகின்ற ஒரு மொழியாக இருப்பதற்குக் காரணமே, இந்தச் செம்மொழியை நாம் பல்லாண்டு காலமாக - இதற்கு எந்தப் பெயரும் சொல்லாமல் தாய்மொழி என்று சொல்லி, இந்த மொழியை காப்பாற்றுகின்ற போராட்டங்களையெல்லாம் நடத்தி - அந்தப் போர்களில் நாம் தான் வென்றோம் என்ற அளவிற்கு இன்றைக்கு இந்த மொழி நம்மையெல்லாம் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது.

மொழியின் பெயரால் பகை வேண்டாம்!

இந்த மொழிக்கு உரியவர்கள் நிச்சயமாக மற்ற மொழிக்காரர்களை பகைத்துக் கொள்ளாமல் - மற்ற மொழிக்காரர்களை வெறுக்காமல் - நாம் அனைவரும் ஒரு குடும்பம், நம் அனைவருக்கும் ஒரு குலம் சொந்தம் என்றால், அந்தக் குலத்திற்குப் பெயர், மனித குலம், மாந்தர் குலம், அந்த மனிதர் குலத்தில் ஒருவரையொருவர் புரிந்து கொள்வதற்கு அடையாளமாக எப்படி அவரவர்கள், பழக்கத்திலே உள்ள சைகைகள் பயன்படுகிறதோ அதைப்போல மொழியும் ஒரு கருவி தான் - ஒருவரையொருவர் புரிந்து கொள்ள - ஒருவருக்கு ஒருவர் புரிய வைக்க - ஒருவருக்கொருவர் தெரிந்து கொண்டு பணியாற்ற - ஒருவருக்குப் புரியாததை மற்றொருவர் சொல்ல - இடையிலே உதவுகின்ற ஒரு கருவி தான் மொழி.

அந்த மொழிக்கு தெய்வீகத்தன்மை கொடுத்து, அந்த மொழியைத் தவிர வேறு மொழி, உலகத்திலே பெரிய மொழி அல்ல என்று கூறி, இன்றைக்கு சில பேர் அதற்கான போர்களிலே மனித உணர்வைக் காட்டி நடத்துகின்ற இந்தக் காலத்தில் நம்மையெல்லாம் ஆளாக்கிய பெரியார், அண்ணா - இவர்கள் எல்லாம் எடுத்துச் சொன்ன கருத்து, மொழி ஒரு கருவியாக நமக்கு இருக்க வேண்டுமே அல்லாமல், அந்த மொழிக்கு விரோத உணர்ச்சி, பகை உணர்ச்சி, மனித உணர்ச்சிக்கு மாறுபட்ட உணர்ச்சியை நாம் ஏற்றக்கூடாது என்று பல முறை எடுத்துக் கூறியிருக்கிறார்கள்.

அந்த வழியிலே இந்த ஆட்சிக் சக்கரத்தை இன்றைக்கு சுழற்றிக் கொண்டிருக்கின்ற நானும், எல்லா மொழியிலும் திறமை இருக்கின்றது, எல்லா மொழியிலும் வன்மை இருக்கிறது, ஆனால் ஒரு மொழி இன்னொரு மொழியை ஆதிக்கம் செலுத்துவதை நாம் பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்பதிலே நாம் உறுதியாக இருக்கின்றோம்.

தமிழுக்கு மலையாளம் விரோதம் அல்ல, தமிழுக்கு தெலுங்கு விரோதம் அல்ல, தமிழுக்கு கன்னடம் விரோதம் அல்ல - அதைப்போல கன்னடம் தமிழுக்கு விரோதமாக இருக்கக் கூடாது, மலையாளம் தமிழுக்கு விரோதமாக இருக்கக் கூடாது, தெலுங்கு தமிழுக்கு விரோதமாக இருக்கக் கூடாது.

கன்னடமும், களி தெலுங்கும் கவின், மலையாளமும் துளுவும் உன் உதிரத்து உதித்தெழுந்தே ஒன்று பல ஆயிடினும் என்று மனோன்மணியம் சுந்தரம் பிள்ளை பாடியதையும் மறந்து விடாமல்- எல்லாம் சகோதர மொழிகள்தான்..." என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X