For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாபர் மசூதி இடிப்பு: நரசிம்மராவ் தப்புக் கணக்குப் போட்டு விட்டார் -ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

Chidambaram
டெல்லி: உ.பி. அரசையும், பாஜகவையும் நம்பியதன் மூலம், பி.வி.நரசிம்மராவ் தலைமையிலான அப்போதைய காங்கிரஸ் அரசு தப்புக் கணக்குப் போட்டு விட்டது என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

லோக்சபாவில் 2 நாட்களாக நடந்து வந்த லிபரான் கமிஷன் அறிக்கை மீதான விவாதத்திற்கு நேற்று மாலை பதிலளித்து ப.சிதம்பரம் பேசுகையில், 1992ம் ஆண்டு ஏற்பட்ட சூழ்நிலைகள் குறித்து நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு ஏமாந்து விட்டது.

பாஜகவையும், உ.பி அரசையும் நம்பியதன் மூலம் நரசிம்மராவ் அரசியல் தப்புக் கணக்குப் போட்டு விட்டார். இதன் விளைவு சங் பரிவார் அமைப்புகள் பாபர் மசூதியை இடிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. இதனால் காங்கிரஸ் கட்சிக்கும் கெட்ட பெயர் ஏற்பட்டது. காங்கிரஸுக்கு தேர்தல் ரீதியாகவும் அடி விழ காரணமாக அமைந்து விட்டது.

கல்யாண் சிங் தலைமையிலான மாநில அரசு மத்திய அரசுக்கு பொய்யான வாக்குறுதிகளை நம்பி மோசடி செய்து விட்டது. மத்திய அரசிடம் மட்டுமல்லாமல், சுப்ரீம் கோர்ட், தேசிய ஒருங்கிணைப்புக் குழு ஆகியவற்றிடமும், பாபர் மசூதியைக் காப்போம் என பொய் சொல்லியது.

இப்படி கல்யாண் சிங் தலைமையிலான அரசு கூறிய வாக்குறுதிகளை நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு நம்பியது தவறு. இது வருத்தத்திற்குரியது.

திட்டமிட்டு இடித்தனர்...

பல்வேறு மாநிலங்களிலிருந்து கரசேவகர்களை அயோத்திக்கு வரவழைத்து திட்டமிட்டு மசூதியை இடித்தனர். இடிக்க வேண்டும் என்பது மட்டுமே அவர்களது ஒரே நோக்கமாக இருந்தது.

அடல் பிகாரி வாஜ்பாய் சம்பவம் நடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதியன்று அயோத்தியில் இல்லாவிட்டாலும் கூட, அதற்கு முந்தைய தினம், கரசேவகர்களை தூண்டும் வகையில், பேசினார் என்றார் ப.சிதம்பரம்.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் நரசிம்மராவின் பங்கு குறித்து பலரும் குற்றம் சாட்டி வந்தபோதும், லிபரான் கமிஷன் அறிக்கையில் அதுகுறித்து எந்த வார்த்தையும் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை எழுப்பியிருந்தது.

இந்த நிலையில் நேற்று ப.சிதம்பரம் மூலம் நரசிம்மராவின் மெளனமும் தவறானதுதான் என்ற பதிலை காங்கிரஸ் வழங்கியதாக கருதப்படுகிறது.

ராவ் அரசு இடிப்பைத் தடுத்திருக்க முடியும்- காங். எம்.பி.

காங்கிரஸ் கட்சியின் பேனி பிரசாத் வர்மாவும் நேற்று நரசிம்மராவை சாடிப் பேசினார்.

அவர் பேசுகையில், பாபர் மசூதி இடிப்பைத் தடுக்கும் வகையில் சுதாரிப்பாக செயல்பட நரசிம்மராவ் தவறி விட்டார்.

மசூதி இடிப்பில் பாஜகவுக்கும், சங் பரி்வார் அமைப்புகளுக்கும் முக்கியப் பங்கு உள்ளது என்றால் நரசிம்மராவும் தப்பு செய்து விட்டார் என்பதை மறுக்கக் கூடாது.

ஒரு வீட்டில் யாராவது திருடப் போனால் அவர்கள் பாவம் செய்தவர்கள் என்று சொல்லலாம். அதேசமயம், இதை அறியாமல் வீட்டு உரிமையாளர் தூங்கிக் கொண்டிருந்தால் அந்தப் பாவத்தில் பாதி அவருக்கும் போய்ச் சேரும்.

நீங்கள் (பாஜக) பாவம் செய்தவர்கள். இப்படிப்பட்ட பாவத்தைச் செய்த அவர்களைத் தடுக்க மத்திய படைகளை நரசிம்மராவ் ஏவியிருந்தால் கரசேவகர்களை பாபர் மசூதியை நெருங்க விடாமல் தடுத்திருக்க முடியும்.

இந்தியாவின் ஜனநாயக பெருமைக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தி விட்டது மசூதி இடிப்புச் சம்பவம். இத்தகைய செயலில் ஈடுபட்ட பாஜகவுக்கு கொடுக்கப்படும் சரியான தண்டனை, அரசியல் ரீதியாக அவர்களை மக்கள் ஒதுக்கி வைப்பதுதான்.

எனக்கு சொந்த ஊர் அயோத்திக்கு பக்கத்தில்தான். ராமர் எங்கு பிறந்தார் என்பது குறித்து பாகிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு ஓடி வந்த அத்வானியை விட எனக்கு நன்றாகவே தெரியும். (அப்போது பாஜக உறுப்பினர்கள் எழுந்து கடுமையாக ஆட்சேபித்துக் குரல் எழுப்பினர்).

16வது நூற்றாண்டில் இருந்த ராமர் கோவிலை இடித்து விட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதாக பாஜகவினர் கூறுவது தவறான செய்தியாகும். அந்தக் கோவில் உண்மையில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இந்துக்கள் கட்டிய கோவிலாகும். அது ராமர் கோவில் அல்ல. பின்னர் அவர்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறி விட்டனர். இதுதான் உண்மை என்றார் வர்மா.

வர்மாவின் பேச்சால் சபையில் பெரும் அமளி ஏற்பட்டு 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. குறி்ப்பாக முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்து வர்மா அவதூறாகப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என பாஜக மற்றும் சமாஜ்வாடிக் கட்சியினர் கோஷமிட்டனர்.

இதையடுத்து முதலில் 5 மணி வரை சபை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் மீண்டும் சபை கூடியபோதும் வர்மா மன்னிப்பு கேட்கக் கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர்.

வாஜ்பாய் குறித்து அவதூறாகப் பேசியுள்ளார் வர்மா. இது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் பாரபட்சம் இல்லாமல் அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவர் வாஜ்யாப். எனவே வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முலாயம் சிங் யாதவ், சரத் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் கடுமையான குரலில் வலியுறுத்தினர். இதனால் சபைக் கூட்டத்தை நடத்த முடியவில்லை.

இதையடுத்து எழுந்த வர்மா, தான் பேசிய சில வார்த்தைகள், உறுப்பினர்கள் மனதைப் புண்படுத்தியிருந்தால் அதற்காக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். ஆனால் திருப்தி அடையாத பாஜகவினர், தொடர்ந்து வர்மா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குரல் எழுப்பியபடி இருந்தநர்.

இதையடுத்து குறுக்கிட்ட சபாநாயகர் மீரா குமார், வர்மா பேசிய அவதூறான வார்த்தைகள் அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுதாக தெரிவித்தார். மேலும், உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் எழுந்து வர்மா பேச்சுக்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறினார். இருப்பினும் பாஜகவினர் அமைதி அடையவில்லை. இதையடுத்து சபை ஒத்திவைக்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X