For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைகிறது தெலுங்கானா - முற்றுகைப் போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றம்

By Staff
Google Oneindia Tamil News

Chandrasekara Rao
டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியின் கடும் போராட்டத்தின் விளைவாக, மத்திய அரசு தனது அமைதியைக் கலைத்து, தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான தீர்மானத்தை ஆந்திர சட்டசபையில் நிறைவேற்றுமாறு முதல்வர் ரோசய்யாவுக்கு அது உத்தரவிட்டுள்ளது.

தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியினரும், மாணவர்களும் இணைந்து நடத்தி வரும் மிகப் பெரிய போராட்டம் கிட்டத்தட்ட புரட்சியாக மாறியது. இதனால் தெலுங்கானா பிராந்தியமே ஸ்தம்பித்துப் போனது.

இதனால் மத்திய அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில் இன்று லட்சக்கணக்கான மாணவர்களும், டி.ஆர்.எஸ் கட்சியினரும் ஹைதராபாத்தை ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர்.

மாவோயிஸ்டுகள் இதில் ஊடுறுவி தாக்குதல் நடத்தலாம், இதனால் அசம்பாவிதம் நடைபெறக் கூடும் என மாநில காவல்துறை எச்சரித்திருந்தது.

இதையடுத்து பெரும் இக்கட்டான நிலையில் நேற்று டெல்லியில் 3 முறை முக்கிய ஆலோசனைக் கூட்டங்கள் நடந்தன.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் இதில் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் ஆந்திர முதல்வர் ரோசய்யா, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி ஆந்திர சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற தீர்மானிக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை இன்றே கொண்டு வருமாறும் ரோசய்யாவுக்கு பிரதமர் உத்தரவிட்டார்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறுகையில், தீவிர ஆலோசனைகளுக்குப் பின்னர் இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். தனி தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பான நடைமுறைகள் முடுக்கி விடப்படவுள்ளன. இதற்குப் பொருத்தமான தீர்மானம் ஆந்திர மாநில சட்டசபையில் கொண்டு வரப்படும் என்றார்.

இதன் மூலம் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் மிகப் பெரிய போராட்டம் வெற்றி பெற்றுள்ளது.

முற்றுகைப் போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றம்..

மத்திய அரசின் புதிய அறிவிப்பைத் தொடர்ந்து ஹைதராபாத்தை இன்று ஸ்தம்பிக்க வைக்கும் போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் மூத்த தலைவர் ஹரீஷ் ராவ் (சந்திரசேகர ராவின் உறவினர்) கூறுகையில், சட்டசபை நோக்கி பேரணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது தனி தெலுங்கானாவுக்கு மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து இந்தப் பேரணி வெற்றிப் பேரணியாக மாற்றப்படுகிறது என்றார்.

உண்ணாவிரதம் இருந்து வரும் சந்திரசேகர ராவின் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தெலுங்கானா பகுதியில் உள்ள 10 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் தீவிர போராட்டத்தில் குதித்திருந்தனர்.

ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால் இன்று 10 லட்சம் மாணவர்களை திரட்டி ஆந்திர சட்டசபை முன்பாக முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று தெலுங்கானா மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழுவும் அறிவித்திருந்தது.

இந்த நிலையில்தான் இன்று சட்டசபையில் தீர்மானம் இயற்றப்படும் என மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. மாவோயிஸ்டுகள் வன்முறையில் ஈடுபட்டு விட அனுமதிக்கக் கூடாது என்பதற்காகவே இந்த முடிவை மத்திய அரசு எடுத்ததாக தெரிகிறது.

வெற்றிப் பேரணியாக மாற்றப்பட்டுள்ள போதிலும், முன்னெச்சரிக்கையாக ஹைதராபாத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கண்காணிப்புத் துறை போலீஸ் ஐ.ஜி. அனுராதா கூறுகையில், ஹைதராபாத் நகரின் 22 முக்கிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. 5 மேம்பாலங்கள் மூடப்பட்டுவிட்டன. நடை மேம்பாலங்களில் மக்கள் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, ஹைதராபாத் நகருக்குள் வெளியாட்கள் யாரும் வர வேண்டாம் என்றார்.

நகரில் சட்டம் ஒழுங்கை பராமரிக்க 12 ஆயிரத்து 500 போலீசார் மற்றும் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் தமிழகத்தில் இருந்தும் போலீஸ் உதவி கேட்கப்பட்டதால், தமிழக அரசும் ஆந்திரா வுக்கு போலீசை அனுப்ப உத்தரவிட்டது.

இதன்படி தமிழ்நாடு சிறப்புக் காவல் படையைச் 300 பேர் நேற்று முன்தினமும், நேற்றும், ரயில் மூலம் ஆந்திராவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தமிழக போலீசார் ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழக போலீசுக்கு எஸ்.பி. ஜெயபால் தலைமை தாங்கிச் சென்றுள்ளார்.

தீர்மானம் போதாது - ராவ் மகன்

இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகன் கே.டி.ராமாராவ் கூறுகையில், ஆந்திர சட்டசபையில் தெலுங்கானா மாநிலம் அமைப்பது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்தால் மட்டும் போதாது. நாடாளுமன்றத்தில் மத்திய அரசு இதுதொடர்பாக மசோதாவை அறிமுகம் செய்ய வேண்டும்.

ஹைதராபாத் நகரமும், இந்த தெலுங்கானா மாநிலத்தில் இடம் பெற வேண்டும். ஹைதராபாத் நீங்கலானா தெலுங்கானா மாநிலத்தை தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி ஏற்றுக் கொள்ளாது.

சட்டசபையில் தீர்மானத்தை நிறைவேற்றுவது மட்டும் முடிவைத் தந்து விடாது. நாடாளுமன்றத்தில் மசோதாவை நிறைவேற்ற வேண்டும்.

தற்போது சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். இருப்பினும் விரைவில் நாடாளுமன்றத்தில் மசோதா கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன் என்றார்.

தெலுங்கானா ஆதரவாளர்கள் கொண்டாட்டம்...

மத்திய அரசின் இந்த அறிவிப்பு தெலுங்கானா மகிழ்ச்சியில் உற்சாக அலைகளைப் பரப்பியுள்ளது. நேற்று இரவில் தெலுங்கானா ஆதரவாளர்களும், டி.ஆர்.எஸ். தொண்டர்களும் சாலைகள், தெருக்களில் திரண்டு இதைக் கொண்டாடினர்.

பெருமளவிலான தொண்டர்களும், ஆதரவாளர்களும் சந்திரசேகர ராவ் அனுமதிக்கப்பட்டுள்ள நிம்ஸ் மருத்துவமனை முன்பு குவிந்து கொண்டாடினர். கேசிஆர் வாழ்க, தெலுங்கானா வாழ்க என்று கோஷமிட்டனர்.

ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், பட்டாசு வெடிப்பு என அமர்க்களமாக இருந்தது.

பெண் போலீஸ் அதிகாரி ராஜினாமா...

இந்த நிலையில் தெலுங்கானா மாநிலக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து மேடக் மாவட்டத்தில் டி.எஸ்.பி. நளினி என்பவர் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டார்.

ஆந்திர மாநில டி.ஜி.பி. திரிஷ்குமாரை ஹைதராபாத்தில் சந்தித்து தனது ராஜினாமாக் கடிதத்தை வழங்கினார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் கேட்டு போராட்டம் நடத்த மாணவர்களுக்கு உரிமை உள்ளது. அவர்களுக்கு எதிராக போலீஸ் அடக்குமுறையை பயன்படுத்துவது வேதனை அளிக்கிறது. நானும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவள் என்பதால் என்னால், இதை ஜீரணிக்க முடியவில்லை. எனவே எனது பதவியை ராஜினாமா செய்கிறேன் என்றார்.

பின்னர் நிம்ஸ் மருத்துவமனைக்குச் சென்று சந்திரசேகர ராவையும் அவர் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X