For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அமைதிக்கான நோபல் பரிசை பெற்றார் ஒபாமா

By Staff
Google Oneindia Tamil News

Obama signs in Nobel guest book
ஆஸ்லோ: நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடந்த நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

2009ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டன.

இயற்பியலுக்கான பரிசு சார்லஸ் கே காவ் (சீனா), வில்லர்ட் பாயில் (அமெரிக்கா), ஜார்ஜ் ஸ்மித் (அமெரிக்கா) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது,.

வேதியியலுக்கான பரிசு வெங்கி என்கிற வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் (இங்கிலாந்து), தாமஸ் ஸ்டெயிட்ஸ் (அமெரிக்கா), அடா யோனாத் (இஸ்ரேல்) ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த எலிசபெத் பிளாக்பர்ன், கரோல் கிரீடர், ஜேக் ஸோஸ்டாக் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டது.

இலக்கியத்துக்கான நோபல் பரிசு ஜெர்மனியின் ஹெர்டா முல்லருக்குக் கிடைத்தது

பொருளாதாரத்திற்கான நோபல் நினைவு பரிசு அமெரிக்காவின் எலினார் ஆஸ்ட்ரோம், ஆலிவர் வில்லியம்சன் ஆகியோருக்கு கிடைத்தது.

இன்று நோபல் பரிசை நிறுவிய ஆல்பிரட் நோபலின் நினைவு நாளாகும். ஒவ்வொரு ஆண்டும் இதே தினத்தில்தான் நோபல் பரிசுகள் வழங்கப்படுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டுக்கான பரிசுகள் இன்று வழங்கப்பட்டன.

அமைதிக்கான நோபல் பரிசு விழா மட்டும் நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெறுவது வழககம். இது ஆல்பிரட் நோபலின் விருப்பமாகும். பிற பரிசுகள் நோபல் பிறந்த ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படும்.

அமைதிக்கான நோபல் பரிசு மட்டும் ஆஸ்லோவில் வழங்கப்படுவதற்கான காரணத்தை நோபல் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. இருப்பினும், நோபல் பரிசுகளை நிறுவி அவர் அறிவித்தபோது நார்வேயும், ஸ்வீடனும், ஸ்விடீஷ் -நார்வேஜியன் யூனியன் என்ற ஒரே குடையின் கீழ் இருந்தன.

எனவே நோபல் பரிசுகளை இரு நாடுகளிலும் வைத்து வழங்க அவர் தீர்மானித்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இன்று ஆஸ்லோவில் நடந்த நிகழ்ச்சியில் பாரக் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக நார்வே நோபல் கழகத்திற்கு மனைவி மிஷலுடன் சென்றார் ஒபாமா. அங்கு வைக்கப்பட்டிருந்த விருந்தினர் புத்தகத்தில் எழுதி கையெழுத்திட்டார்.

பின்னர் நடந்த விழாவில் ஒபாமாவுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது.

பரிசைப் பெற்றுக் கொண்ட பின்னர் ஏற்புரையாற்றிய ஒபாமா, ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்பும் முடிவை சிலர் விமர்சிக்கிறார்கள். நிச்சயம் அந்த முடிவில் தவறேதும் இல்லை.

இந்த விருதுக்கு தகுதி படைத்த மேலும் பலரும் உள்ளனர். இருப்பினும் எனக்கு இந்த விருது கிடைத்துள்ளது பெருமை தருகிறது.

இந்த விருதை முன்பு மார்ட்டின் லூதர் கிங் பெற்றபோது உலகம் முழுவதும் பல்வேறு பிரச்சினைகள் சூழ்ந்திருந்தன. இப்போது நான் பெறுகிறபோதும் அதே போன்ற சூழ்நிலைதான் உள்ளது.

எனக்கு நோபல் பரிசு கொடுத்ததற்காக நோபல் பரிசுக் கமிட்டிக்கு நான் கடமைப்பட்டுள்ளேன் என்றார் ஒபாமா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X