For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆந்திர சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு-ஜனாதிபதி ஆட்சி அமலாகும்?

By Staff
Google Oneindia Tamil News

ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா பகுதிகளைச் சேர்ந்த 13 மாவட்ட எம்எல்ஏக்கள் இன்று ஆந்திர சட்டசபையில் பெரும் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபை காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுவிட்டது.

சட்டசபையில் பெரும்பாலான எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில், அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சி அமலாகும் நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில் அவையை காலவரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

அவை ஒத்தி வைக்கப்பட்ட பின் சட்டசபை வளாகத்தில் தெலுங்கானா எதிர்ப்பு மற்றும் ஆதரவு எம்எல்ஏக்கள் தனித்தனியே கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் சட்டசபை வளாகத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே தெலுங்கானாவுக்கு எதிராக தொடர்ந்து 4வது நாளாக போராட்டங்கள், பஸ் எரிப்புகள், ரயில் மறியல்கள் நடந்து வருகின்றன.

இந்தப் பகுதிகளில் 4 வது நாளாக இன்றும் பந்த் நடப்பதால் மாநிலமே ஸ்தம்பித்துப் போயுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.

விசாகப்பட்டினம், கர்னூல், விஜயவாடா, நெல்லூர், சித்தூர், அனந்தபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கல்வி நிலையங்கள், கடைகள் மூடப்பட்டுள்ளனன.

பஸ்கள் மீது தாக்குதல்கள் தொடர்வதால் பஸ் சேவை அடியோடு நிறுத்தப்பட்டுள்ளது.

அனந்தபுரம் மாவட்டம் செல்லவாரி பள்ளியில் உள்ள ரயில் நிலையம் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வழியாக செல்லும் ரயில்கள் வேறு வழியாக திருப்பி விடப்பட்டுள்ளன.

கடலோர ஆந்திரம் மற்றும் ராயல சீமா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்ஜியம் ஆகிய முக்கிய கட்சிகள் போர்க்கொடி உயர்த்தியுள்ளன. இக்கட்சிகளைச் சேர்ந்த 138 எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக் கடிதங்களைக் கொடுத்து விட்டனர். ரோசய்யா தலைமையிலான அமைச்சரவையில் 20 அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை முதல்வரிடம் கொடுத்து விட்டனர்.

அதை வாபஸ் பெற எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் மறுத்து வருவதால் அந்த மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமாலக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

அமைச்சர்களும் இரு பிரிவாக செயல்பட்டு வருவதால் ஆட்சியை நடத்துவதே முதல்வர் ரோசய்யாவுக்கு பெரும் சிக்கலாகியுள்ளது.

இதனால் அவரும் விரைவில் ராஜினாமா செய்யக் கூடும் என்கிறார்கள். நிலைமை மோசமாகி வருவதால் தானும் பதவி விலக தயாராக இருப்பதாக ரோசய்யா, அமைச்சர்களிடம் கூறியுள்ளதாகத் தெரிகிறது.

ராமராவ் சமாதியில் உண்ணாவிரதம்-பார்வதி கைது:

இந் நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் உருவாக்குவதை கண்டித்து தொடர் உண்ணாவிரதம் இருந்த முன்னாள் முதல்வர் என்.டி.ராமராவின் மனைவி லட்சுமி பார்வதி கைது செய்யப்பட்டார்.

தலைமை செயலகத்துக்கு அருகே உள்ள என்.டி.ராமராவ் சமாதியில் அவரும் அவரது என்.டி.ஆர். தெலுங்கு தேசம் கட்சி' தொண்டர்களும் உண்ணாவிரதம் இருந்தனர்.

மேலும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியின் மகளிர் அணித் தலைவி ஷோபா ராணி உட்பட 50க்கும் மேற்பட்ட பெண்களும் லட்சுமி பார்வதியுடன் உண்ணாவிரதம் இருந்தனர். இதையடுத்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர்.

தெலுங்குதேச எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரதம்:

அனந்தபுரம் மாவட்டம் தெலுங்கு தேச எம்.எல்.ஏக்களான பரிட்டால சுனிதா, ரகுநாத ரெட்டி, பார்த்தசாரதி ஆகியோர் இன்று சாகும்வரை உண்ணாவிரதம் தொடங்கினார்கள். இதேபோல விஜயவாடாவில் தெலுங்குதேசம் எம்.எல்.ஏக்கள் தேவினேனி உமரி மகேஸ்வர்ராவ், ராமகோட்டையா ஆகியோர் நேற்று முதல் சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்.

இந் நிலையில் தெலுங்கானாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்.பியான ராஜகோபால் ஆந்திர சட்டசபை முன் அமர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்திருந்தார்.

இதையடுத்து அவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்தனர்.

பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: வீரப்பமொய்லி

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய சட்ட அமைச்சரும் ஆந்திர மாநில காங்கிரஸ் விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான வீரப்ப மொய்லி,

ஆந்திராவில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தும் பேச்சுக்கே இடமில்லை. ஆந்திர பிரச்சனைக்கு பேச்சுவார்த்தை மூலம் மத்திய அரசு தீர்வு காணும் என்றார்.

நாளை அமைச்சரவைக் கூட்டம்:

தெலுங்கானாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 20க்கும் மேற்பட்ட ஆந்திர அமைச்சர்கள் ராஜினாமா செய்துவிட்ட நிலையில் நாளை அமைச்சரவைக் கூட்டத்தை அவசரமாகக் கூட்டியுள்ளார் முதல்வர் ரோசய்யா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X