For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

போட்டா போட்டி பந்த்-ஸ்தம்பிக்கிறது ஆந்திரா

By Sridhar L
Google Oneindia Tamil News

Chandrasekara Rao
ஹைதராபாத் & டெல்லி: தெலுங்கானா தனி மாநிலம் அமைக்கக் கூடாது என்று கோரி அனைத்துக் கட்சி கூட்டு நடவடிக்கைக் குழு விடுத்துள்ள அழைப்பை ஏற்று இன்று ஆந்திராவின் இதர பகுதிகளில் பந்த் நடந்தது. இதனால் இயல்பு வாழ்க்கை முற்றிலும் சீர்குலைந்தது.

இந் நிலையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான சிக்கலுக்குத் தீர்வு காண மத்திய அரசு கூட்டியுள்ள அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் டெல்லி சென்றுள்ளார்.

கட்சியின் சிந்தனையாளர் ஜெயசங்கருடன் டெல்லி வந்துள்ளார் ராவ். நாளை ஆந்திராவைச் சேர்ந்த முக்கிய கட்சிகளின் தலைவர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தி கருத்து கேட்கிறது. இதில் ராவும், ஜெயசங்கரும் கலந்து கொள்வார்கள்.

டெல்லி வந்த ராவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்பதில் நான் உறுதியான நம்பிக்கையுடன் உள்ளேன்.

தெலுங்கானா மாநிலத்திற்கு அனைத்துத் தரப்பினரின் ஆதரவையும் திரட்டும் வகையில் பல்வேறு கட்சிகளின் தலைவர்களை நான் டெல்லியில் சந்திக்கவுள்ளேன்.

தனி மாநிலம் தொடர்பான நடவடிக்கைகள் தற்போதுதான் தொடங்கியுள்ளன. அரசியல் சட்டப்படிதான் அனைத்தும் நடைபெறுகின்றன. தெலுங்கானா விவகாரம் சுமூகமாக தீரும் என்று நம்புகிறேன் என்றார்.

அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதல்வர் ரோசய்யா, பிரஜா ராஜ்ஜியம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி உள்ளிட்டோரும் கலந்து கொள்கின்றனர். சந்திரபாபு நாயுடு கலந்து கொள்வது குறித்து உறுதியாகத் தெரியவில்லை.

தெலுங்கானா எதிர்ப்பு பந்த்:

இந் நிலையில் தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ராயலசீமா மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் இன்று பந்த் நடைபெற்றது.

இன்று ராயலசீமா- கடலோர பகுதிகளில் அமைந்துள்ள சித்தூர், அனந்தபுரம், கர்னூல், நெல்லூர், கடப்பா, பிரகாசம், விஜயவாடா, விசாகபட்டினம், கிருஷ்ணா, குண்டூர், ஸ்ரீகாகுளம் உள்ளிட்ட 13 மாவட்டங்களில் தெலுங்கானாவுக்கு எதிராக முழு அடைப்புப் போராட்டம் நடந்தது.

இதனால் இப்பகுதிகளில் பஸ் ஓடவில்லை. கடைகள் அனைத்தும் மூடப்பட்டதால் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டன.

175 எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.

தமிழக பேருந்துகள் நிறுத்தம்:

இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திராவுக்கு இயக்கப்படும் பேருந்துகள் நேற்று நள்ளிரவு முதல் மீண்டும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் திருப்பதி செல்லும் பக்தர்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.

நாளை போட்டி பந்த்:

இதற்கு பதிலடியாக நாளை எதிர் போராட்டம் நடத்த தெலுங்கானா போராட்டத் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதனால் நாளை ஆந்திராவின் பிற பகுதிகளில் இருந்து தெலுங்கானாவுக்குள் வரும் பஸ்கள், வாகனங்கள் அனைத்தையும் மறியல் செய்ய திட்டமிட்டுள்ளனர். ரயில்களையும் மறிக்கப் போவதாக அறிவி்த்துள்ளனர்.

மாணவர்களின் மகா கர்ஜனை...

இதற்கிடையே நேற்று மாலை ஹைதராபாத்தில் 4 லட்சம் மாணவர்கள் மகா கர்ஜனை என்ற பெயரில் பிரமாண்ட போராட்டத்தை நடத்தினர்.

தெலுங்கானா போராட்டத்தை சந்திரசேகர ராவின் கட்சி நடத்தினாலும் கூட தெலுங்கானா பகுதி மாணவர்கள்தான் அதை பிரமாண்டமாகவும், ஆக்ரோஷமாகவும் நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தின் மைய பகுதியாக உஸ்மானியா பல்கலைக்கழகம் செயல்படுகிறது. மாணவர்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று மஹா கர்ஜனை என்ற பெயரில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

தெலுங்கானா பகுதியை சேர்ந்த 10 மாவட்டங்களில் இருந்தும் மாணவர்கள் அணி, அணியாக வந்து இந்த பேரணியில் பங்கேற்றனர். பல்கலைக்கழக அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற பேரணியில் 4 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.

எங்கு பார்த்தாலும் ஜெய் தெலுங்கானா என்ற கோஷம் எதிரொலித்தது. போராட்டத்தில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு வீரவணக்கத்துடன் பொதுக்கூட்டம் தொடங்கியது.

நக்சல் ஆதரவுக் கவிஞரான வரவர ராவ் உள்ளிட்ட பல்வேறு தெலுங்கானா ஆதரவு இயக்கத்தினரும் பேரணியில் பங்கேற்று பேசினார்கள். தனி தெலுங்கானா கோரிக்கையை ஆதரிக்காவிட்டால் ஹைதராபாத்தில் உள்ள காங்கிரஸ் மற்றும் தெலுங்குதேசம் கட்சி அலுவலகங்களை தகர்த்து தரைமட்டமாக்குவோம் என்று கூட்டத்தில் பேசிய மாணவர் பிரதிநிதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

ஐக்கிய ஆந்திராவை வற்புறுத்தி நடைபெற இருக்கும் முழு அடைப்பு போராட்டத்திற்கு பதிலடியாக, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரா பகுதியில் இருந்து தெலுங்கானா பகுதிக்கு ரயில், பஸ் உள்ளிட்ட எந்த வாகனங்களையும் நுழையவிட மாட்டோம் என்றும் எச்சரித்தனர்.

மேலும், தெலுங்கானா கோரிக்கை நிறைவேறாவிட்டால், தற்போது பொங்கல் விடுமுறைக்கு சென்று இருக்கும் அரசு ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட யாரையும் ஹைதராபாத்திற்குள் மீண்டும் நுழைய விடுவது இல்லை என்றும் பேரணி முடிவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தெலுங்கானா குறித்து சந்திரபாபு நாயுடு, சிரஞ்சீவி ஆகியோர் தங்கள் நிலை பற்றி தெளிவாக விளக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டது. தெலுங்கானா பகுதி எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் தங்கள் பதவியை தூக்கி எறிந்துவிட்டு போராட்டத்தில் குதிக்க வேண்டும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டது.

தனி தெலுங்கானா அறிவிப்பு வரும் வரை உஸ்மானியா பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தையும் புறக்கணிப்போம் என்றும் மாணவர்கள் அறிவித்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X