For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டீசல் விலை உயர்வை மட்டுமாவது ரத்து செய்ய வேண்டும்: கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
திருச்சி: டீசல் விலை உயர்வை மட்டுமாவது ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

தமிழகத்தில் ஏழை மக்களுக்காக இலவசமாக 21 லட்சம் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டும் 'கலைஞர் வீட்டு வசதித் திட்ட' தொடக்க விழா இன்று திருச்சியில் நடக்கிறது.

இத் திட்டத்தைத் துவக்கி வைக்க இன்று திருச்சி வந்த கருணாநிதி நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி:

கேள்வி: மத்திய அரசு பெட்ரோல்- டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தார்களே. நீங்களும் இதே பிரச்சனைக்காக பிரதமருக்கு கடிதம் எழுதினீர்கள். இது தொடர்பாக எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா??

பதில்: பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறுவது குறித்து பிரதமரிடம் பேசிய பின்னர், மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி என்னிடம் விரிவாகப் பேசினார்.
2010-11ம் ஆண்டில் மத்திய அரசின் வருவாய் 9 லட்சம் கோடி ரூபாய். இதில் வரிகளின் மூலம் 7.7 கோடி ரூபாயும், இதர வருவாய் 1.5 கோடி ரூபாயும் வருகிறது.

ஆனால் பற்றாக்குறையோ 3 லட்சத்து 80 ஆயிரம் கோடியாக உள்ளது. இந்த பற்றாக்குறை நிதியை கடன் வாங்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் நிதிக்குழு நிதிபற்றாக்குறை மூன்று சதவீதத்துக்கு மேல் இருக்கக்கூடாது என்று குறிப்பிட்டுள்ளது. ஆனால், இப்போது பற்றாக்குறை 5.5 சதவீதமாக உள்ளது.

இந்தப் பற்றாக்குறையை போக்க வங்கிகளிடம் மத்திய அரசு கடன் வாங்கும் முறை உள்ளது. ஆனால் இவ்வளவு தொகையை அரசே வாங்கிவிட்டால் மற்ற தொழில் துறைகளுக்கு வங்கிகள் கடன் வழங்க முடியாமல் போய்விடும்.

ஆகையால் மத்திய அரசு பற்றாக்குறையை சமாளிக்க கூடுதல் வரி போட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது. அதில் ஒன்று தான் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியது.

இதனால் நேரடியாக விவசாயிகளும், உணவு உற்பத்தியாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணத்தால், டீசல் விலை உயர்வை மட்டுமாவது ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதை டி.ஆர்.பாலு தலைமையில் சென்ற திமுக எம்பிக்கள் பிரதமரிடம் நேரில் வலியுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பாக எதிர்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் கலந்து கொள்வீர்களா? என்று என்னிடம் கேட்கிறீர்கள் எங்களை பொறுத்தவரை அண்ணாவின் கொள்கைப்படி கருத்து விவாதம் நடத்தி தீர்வு காணவேண்டும். நாடாளுமன்றமோ, சட்டமன்றமோ எந்த மன்ற நடவடிக்கையும் ஸ்தம்பித்து போகும் அளவுக்கு நடந்து கொள்ளக்கூடாது. அதனால் வாக்காளர்களும், பொதுமக்களும் தான் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் விலையை குறைக்க தொடர்ந்து விவாத அடிப்படையில் வலியுறுத்துவோம்.

கேள்வி: உலகத் தமிழ் செம்மொழி மாநாடு முடிந்த கையோடு சட்டசபைக்கு தேர்தல் வருமா?

பதில்: மாநாட்டுக்கு முன்னோ, பின்னோ தேர்தல் எப்போது நடந்தாலும் அது “கையோடு'' தான் நடக்கும் (சிரிப்பு)

கேள்வி: ஒரு நல்ல ஆட்சி செய்ய வேண்டிய உணவு, உடை, உறை விடம் என்ற மூன்றையுமே கொடுத்துவிட்டீர்கள். இலவச விவசாய நிலத்தைக் கூட அளித்திருக்கிறீர்கள். இந்த சூழ்நிலையில் வரவிருக்கின்ற பட்ஜெட்டில் வேறு ஏதாவது வழங்கவிருக்கிறீர்களா?

பதில்: இது 19ம் தேதி காலையிலே தெரிந்துவிடும். 19ம் தேதி மாலை மற்றும் 20ம் தேதி காலை ஏடுகளிலே விரிவாகத் தெரியும் (சிரிப்பு)

கேள்வி: தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி சாதனைகள் புரிந்துள்ளீர்கள். உங்களின் அடுத்த சாதனை என்னவாக இருக்கும்?

பதில்: பத்திரிக்கையாளர்களான உங்களை எங்கள் பக்கம் இழுப்பது தான் (சிரிப்பு)

கேள்வி: இடைத் தேர்தல்களில் நீங்கள் எதிர்க்கட்சியாக இருந்தபோது வலிமையாக செயல்பட்டீர்கள். இப்போது உள்ள கட்சிகள் சிறப்பாக செயல்படவில்லையே?. அவை இடைத் தேர்தல் வராமல் இருந்தால் நல்லது என்று எண்ணி விலகிப்போகும் நிலை உள்ளதே.

பதில்: அது அந்தந்த கட்சிகளின் வலிமையையும் மக்களிடத்தில் அவர்களுக்குள்ள பொலிவையும் பொருத்தது.

கேள்வி: சேது சமுத்திரத் திட்டம் முடங்கிப் போய்க் கிடக்கிறதே? மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையிலே இந்த ஆண்டு நிதியும் ஒதுக்கவில்லை. அந்தத் திட்டம் முடக்கப்பட்டு விட்டதா?

பதில்: முடக்கப்பட்டு விட்டதாகச் சொல்ல முடியாது. தொய்வு அடைந்துள்ளது என்பது உண்மை. ஏற்கனவே சேது திட்டத்திற்காக பணம் ஒதுக்கியிருக்கிறார்கள். 2472 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார்கள். இப்போது திட்டமே உண்டா இல்லையா என்பது நீதிமன்றத்தின் முன்னால் கேள்விக்குறியாக இருக்கிறது. மாற்றுப் பாதை பற்றி கேள்வி கேட்கப்பட்டது. மாற்றுப் பாதைக்கு இடமே இல்லை. முதலில் ஆய்வு செய்து தேர்வு செய்யப்பட்ட பாதையே மிகச் சரியான பாதையாகும்.

கேள்வி: அனைத்து சாதியினரும் அர்ச்சராகலாம் என்ற திட்டத்தில் முதல் கட்டமாக பயிற்சி முடித்தவர்களை சிறிய கோவில்களில் பணி அமர்ந்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதே?

பதில்: அதில் ஆகமம் என்ற சிக்கல் நுழைக்கப்படுகிறது. அதையும் தாண்டி நாங்கள் வெளிவர வேண்டி உள்ளது.

கேள்வி: கலைஞர் வீட்டு வசதி திட்டத்தை நிறைவேற்ற நிதி ஆதாரம் எது?

பதில்: ரூ.1,800 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் முதல் கட்டமாக 3 லட்சம் வீடுகள் கட்டப்படுகின்றன. 6 ஆண்டுகளில் 21 லட்சம் காங்கிரீட் வீடுகளும் கட்டி கொடுக்கப்படும். பணத்தை பற்றி கவலையில்லை.

கேள்வி: நாடாளுமன்றத்தில் உறுப்பினர்கள் தமிழில் பேச அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளதே?

பதில்: நாடாராளுமன்றத்தில் தமிழ் மொழியில் மட்டுமல்ல தமிழ் போன்று மற்ற மாநில மொழிக்காரர்களும் அவர்களுடைய மொழியிலேயே பேசுவதற்காகத்தான் மத்திய ஆட்சி மொழிகளில் தமிழ் போன்ற மாநில மொழிகளும் இடம்பெற செய்ய வேண்டும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.

கேள்வி: ஆசிரமங்களில் நடக்கும் அநியாயங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமா?

பதில்: சமீபகாலமாய் அதிகமாகத்தான் நடக்கிறது. எந்தவிதமான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து முடிவெடுக்க அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலைத்துறை சார்பில் குழு அமைத்து ஆலோசிக்கப்படும்.

கேள்வி: சிதம்பரம் அண்ணாமலை பல்கலை மாணவர்கள் இறந்த சம்பவம் தொடர்பக நீதி விசாரணை நடத்தப்படுமா?

பதில்: விபத்தில் இறந்த மாணவனுக்கு ஆதரவாக சக மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது போலீஸ் விரைந்து வந்ததால், பயந்து போன மாணவர்கள் சிதறி ஓடியுள்ளனர். அப்போது இடம் தெரியாமல் மூன்று, நான்கு பேர் குளத்தில் விழுந்துள்ளனர். அதில், சில மாணவர்கள் இறந்துள்ளனர். அண்மைகாலமாக வெளி மாநிலங்களிலிருந்து, குறிப்பாக பிகாரிலிருந்து மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிக்க அதிகம் பேர் தமிழகம் வருகின்றனர். அப்படி வந்து படித்த மாணவர்கள் தான் இறந்துள்ளனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் என்னிடம் பேசினார். விவரங்களை சேகரித்து கடிதம் எழுதியுள்ளேன். சம்பவ இடத்துக்கு சென்று உதவ அமைச்சர் பன்னீர்செல்வத்தை அனுப்பினேன்.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி பேட்டியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X