For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கயமைத்தன சாமியார்களை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது-கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

பகலில் சாமி-இரவில் காமியாகவும் வாழ்க்கை நடத்தி, பாமர மக்களின் வாழ்வையும் அறிவையும் பாழாக்கி வருகின்ற- பணக் கொள்ளை அடிக்கின்ற பகல் வேடக்காரர்களை; பாமர மக்களுக்கு அடையாளம் காட்ட- பகுத்தறிவு இயக்கம் பல்லாண்டு காலமாக, பல சான்றுகளைக் காட்டி, பலத்த எதிர்ப்புக்கிடையிலேயும் பிரச்சாரம் செய்து வந்தும்கூட,

படக் காட்சிகள், நாடகங்கள் இவற்றின் வாயிலாக எண்ணற்ற எடுத்துக்காட்டுகளை சித்திரித்தும் கூட, உதாரணமாக படமாக வெளிவந்த சந்திரகாந்தா, சொர்க்கவாசல், மனோகரா, வேலைக்காரி, பராசக்தி, தூக்குமேடை போன்றவற்றில் அந்தக் காவியுடைதாரிகளின் கபட நாடகத்தை எடுத்துக் காட்டியும் கூட,

இன்னமும் புரிந்து கொள்ள முடியாத- புரிந்து கொண்டாலும் திருந்திக் கொள்ள இயலாத- மௌடீகத்தில் மூழ்கியோர்- நாட்டில், சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

சமூக நலனும், கண்ணியமும் காக்கப்பட வேண்டுமென்று, அவற்றில் அக்கறை காட்டுகிற ஒரு மக்கள் நல அரசு அண்மையில் நடைபெற்றதாகக் கூறப்படுகிற; காட்சியாக்கி காட்டப்படுகிற; கயமைத்தன சாமியார்களின் ஏமாற்று வித்தைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடியாது.

அதே நேரத்தில் குற்றங்கள் நடைபெறுவதைவிட அந்தக் குற்றங்கள் எப்படி நடைபெற்றன- எங்கே யாரால் நடத்தப்பட்டன- எந்த முறையில் நடத்தப்பட்டன என்பதைச் சான்றாகக் காட்ட- வெளியிடப்டுகின்ற படங்களாயினும், செய்திகளாயினும் அவை அளவுக்கு மீறும்போது அவற்றை தொலைக்காட்சியிலோ பத்திரிகைகளிலோ படங்களாகப் பார்த்திடும் இளையோர் நெஞ்சங்களில் எத்தகைய மாறுதல்கள் ஏற்படும் என்பதையும்,

அது இளைய சமுதாயத்தை எங்கே கொண்டு போய் நிறுத்தம் என்பதையும் எதிர்காலத் தலைமுறையின் மீது அக்கறை கொண்டோர் அனைவரும் எண்ணிப் பார்த்து நடத்திட வேண்டுமென்று கேட்டுக்கொள்வது ஓர் அரசின் கடமையாகும்.

அந்தக் கடமையை செய்கின்ற அரசு- அந்தக் கடமையைச் செய்கின்ற நேரத்தில்- அந்தக் கடமை வெற்றி பெற அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டியது தான் அனைவரும் மேற்கொள்ளும் சூளுரையாக இருக்க வேண்டுமேயல்லாமல் ஒரு தீமையை விவரிப்பதின் மூலம்- அது மற்றொரு பெரிய தீமைக்கு வித்திடுவதாக ஆகக்கூடாது.

அண்மையில் வெளிவந்துள்ள செய்திகள், அதனைத் தொடர்ந்து வெளிவருகின்ற செய்திகள் எவையாயினும் அவற்றை விவரம் உணர்ந்தோர் அரசுக்கும்- அரசின் காவல் துறைக்கும் தெரிவிக்க வேண்டுமேயல்லாமல்- தாங்களே முன்னின்று அவற்றை வெளிச்சம் போட்டுக் காட்டுவது தேவையற்றது என்பது மட்டுமல்ல, இத்தகைய தீயவர்களுக்கு தங்கள் செயலை நியாயப்படுத்த வலிமை சேர்ப்பதாகவும் ஆகி விடும்.

“அருவருக்கத் தக்க செய்திகளை மற்றும் படங்களை வெளியிடுவது முள்ளை முள்ளால் எடுக்கும் காரியம் தானே" என்று சில ஏடுகளும், தொலைக்காட்சி நிறுவனங்களும் வாதிடலாம். முள்ளை முள்ளால் எடுக்கலாம். ஆனால் போதையேற்றும் கள்ளை அருந்தியவனை, மேலும் கள்ளையூற்றி திருத்தி முடியுமா? அது போலத்தான் இந்தச் செய்திகளும் படங்களும் சமூகத்தை மேலும் சீரழித்துவிடக் கூடாதே என்ற கவலையோடு அரசின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இது போன்ற ஏமாற்று வித்தைக்காரர்களையும், பக்தி வேடம் பூண்டு பாமர மக்களை படுகுழியில் தள்ளுகின்ற பகல் வேடக்காரர்களையும் அவர்களிடம் பலியாகி சமுதாயத்தைச் சீரழிக்கின்ற சபலபுத்தி உடையவர்களையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது.

இந்த அரசு எடுக்கின்ற நடவடி கைகளுக்கு உண்மையிலேயே பகுத்தறிவு வளர்த்து ஊருக்கு உபதேசிகளை ஒழித்துக்கட்ட வேண்டுமென்று எண்ணுகின்ற ஒவ்வொருவரும் உறுதுணையாக இருக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X