For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நல்ல விளைச்சல் தரும் நெல் வயல் திமுக - கருணாநிதி

By Staff
Google Oneindia Tamil News

விழுப்புரம்: களை இல்லாத விவசாயம் இல்லை. களைகளை அகற்றி நல்ல விளைச்சல் தரும் நெல் வயலாக திமுக திகழுகிறது என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.

விழுப்புரம் அருகே உள்ள முண்டியம்பாக்கத்தில் புதியதாக அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது. இதை இன்று மாலை 4 மணிக்கு தமிழக முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.

இதற்காக இன்று காலை 7.50 மணிக்கு சென்னையில் இருந்து குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் புறப்பட்ட கருணாநிதி, விழுப்புரத்திற்கு காலை 10.20 மணியளவில் வந்து சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதையடுத்து புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலய திறப்பு விழாவில் கலந்துகொண்டார் முதல்வர்.

துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் முதல்வர் கருணாநிதி பேசுகையில்,

பொன்முடி பேசும்போது இந்த மாவட்டத்திற்கு பொறியியல் கல்லூரி தந்தார், மருத்துவ கல்லூரி தந்தார், பேருந்து நிலையம் தந்தார் என்றெல்லாம் குறிப்பிட்டார். ஆற்றல் வாய்ந்த பொன்முடியை சட்டமன்ற உறுப்பினராக்கி உங்களுக்காக உழைப்பதற்கு அவரை அமைச்சராக்கியதும் நான்தான்.

இந்த விழுப்புரம் நகரில் என்னுடைய அருமை நண்பர்கள் பலர் வாழ்ந்தார்கள், அவர்களில் பலர் இன்றைக்கு உயிருடன் இல்லை. ஆனாலும் அவர்கள் வளர்த்த இயக்கம் இங்கு செழிப்போடு உள்ளது. இது மேலும் செழித்து வளரும் என்ற நம்பிக்கையின் அடையாளமாக இந்த விழா இங்கு நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.

அண்ணா கண்ட பல கனவுகளை இந்த ஆட்சியில் நாம் படிப்படியாக நிறைவேற்றி வருகிறோம். இந்த மாவட்ட கட்சி அலுவலகத்தை திறக்கும் நேரத்தில் நமக்கும் நண்பர்களுக்கும் மகிழ்ச்சியாக இருக்கிறது. ஆனால் இது போன்ற நல்ல காரியங்களால் திமுகவுக்கு பெருகி வரும் செல்வாக்கை கண்டு பொறுத்துக்கொள்ள முடியாத சிலருக்கு பொறாமையாக இருக்கும். அதனால்தான் சில கட்சிகள் தமிழ்நாட்டில் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

களை இல்லாத விவசாயம் இல்லை. களைகளை அகற்றி நல்ல விளைச்சல் தரும் நெல் வயலாக திமுக திகழுகிறது. இது போன்ற மாவட்ட கட்சி அலுவலகங்கள் மாவட்டந்தோறும் உருவாகி வருகிறது. எல்லா கட்டிடங்களுக்கும் கலைஞர் அறிவாலயம் என்றே பெயர் சூட்டத் தேவையில்லை.

இந்த கட்சிக்காக உயிரை பணயம் வைத்து உழைத்தவர்களின் பெயர்களையும் சூட்ட வேண்டும். திமுகவுக்கு உழைத்த தியாகிகளுக்கு மட்டுமின்றி பிற கட்சிகளில் உள்ள தேசிய தலைவர்கள், தியாகிகளையும் மறவாமல் அவர்களுக்கு நினைவு மண்டபங்கள், சிலைகள் போன்றவற்றை அமைத்து அவர்களுக்கு புகழ் சேர்க்கும் இயக்கும் திமுக மட்டுமே.

அந்த வகையில் சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சி., தேச விடுதலைக்காக போராடிய கட்டபொம்மன், பூலித் தேவன் போன்ற தலைவர்களை மறக்காமல் அவர்களுக்கு பெருமை சேர்த்தது திமுகதான். இத்தகைய பாரம்பரியம்மிக்க கட்சியின் மாவட்ட செயலாளராகவும், அமைச்சராகவும் உள்ள பொன்முடி இங்கு ஒரு அருமையான மாவட்ட கழக கட்டிடத்தை கட்டியிருக்கிறார். இதில் முதல் நிகழ்ச்சியாக முன்னாள் எம்எல்ஏ மூக்கப்பனின் மகன் திருமணமும் நடைபெற்று இருக்கிறது. சுயமரியாதை திருமணமாக நடைபெற்ற இதில் பங்கேற்றதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

திமுக ஆட்சி என்னென்ன சாதனைகளை செய்துள்ளது என்பதை அறிய வேண்டும் என்றால் விழுப்புரம் நகரத்தை ஒரு சுற்று சுற்றி வந்தாலே போதும். இந்நகரில் எழுதி வைத்துள்ள சாதனைகளை பார்த்தாலே, இவ்வளவு சாதனைகளா என்று திமுகவினரும் மற்றவர்களும் நினைக்கத் தோன்றும்.

இதுபோன்று மக்களுக்கு நாம் செய்த சாதனைகளை எல்லா இடங்களிலும் பிரச்சாரம் செய்ய வேண்டும். இந்த பகுதியில் உள்ள விளம்பர பதாகைகள் அனைத்தையும் நான் பார்த்தேன். பல்வேறு அரிய படங்களுடன் ஆட்சியின் சாதனைகள் அடங்கிய படங்களும் நிறைந்து விழுப்புரம் நகரமே ஒரு கண்காட்சி சாலையாக திகழ்கிறது.

இதை உருவாக்கிய அமைச்சர் பொன்முடி மற்றும் உதவியாக இருந்த கட்சியினர் அனைவரையும் பாராட்டுகிறேன். அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நகரப்பகுதிகள் மட்டும் அல்லாமல் கிராமங்களிலும் நம் கட்சி வளர்ந்துள்ளது. இனி நாம் ஓட்டு கேட்கவே தேவையில்லை. மக்கள் தாமாகவே வந்து போடுவார்கள் என்று அமைச்சர் துரைமுருகன் அடிக்கடி வெளியூர் கூட்டங்களுக்கு சென்று வந்து அவர் கூறுவார். அவர் பேச்சை கேட்டு நீங்கள் தூங்கி விடாதீர்கள். இன்னும் கடுமையாக நாம் உழைக்க வேண்டும்.

துணை முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு ஊருக்கு செல்லும் போதும் அந்த பகுதிகளில் ஏராளமான கூட்டம் வருவதை நாம் காணலாம். நாம் கலந்து கொள்கின்ற கூட்டங்களுக்கு வருவது போலவே அதிகமான கூட்டம் துணை முதல்வர் கூட்டங்களுக்கும் வருகிறது. அந்த அளவிற்கு திமுகவிற்கு மக்களின் ஆதரவும் செல்வாக்கும் பெருகி உள்ளது. நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக திமுக வளர்ந்து வருகிறது.

இந்த வளர்ச்சியை கண்டு பொறுக்காமல் தான் சிலர் போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று நடத்துகின்றனர். இங்கே கூட சில நாட்களுக்கு முன்பு ஒரு அம்மையார் நல்ல உள்ளம் கொண்ட, நல்ல எண்ணம் கொண்ட அவர் போராட்டம் நடத்தினார். அவர் வாழ்க. அவர் எண்ணம் வாழ்க. அவர் இப்படியெல்லாம் போராடினால் தான் நாம் மேலும் வளர முடியும்.

சுமார் 500 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகம் ஒன்று சென்னையில் நாம் கட்டி அதன் திறப்பு விழா வருகிற 13ந் தேதி நடைபெற உள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும். பிரதமர் மன்மோகன்சிங்கும் இதில் பங்கேற்க இருக்கிறார்கள்.

இதையும் பொறுக்க முடியாமல் சிலர் விமர்சிக்கிறார்கள். சிலர் பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அவர்கள் எல்லாம் எப்பொழுதுமே திமுக எதிர்ப்பு நிலையை கொண்டவர்கள். எதை செய்தாலும் குறை சொல்பவர்கள்.ஒவ்வொரு மனிதருக்குமே மான உணர்வு தேவை. அதை உணர்த்துவதற்கு உருவானது தான் சுயமரியாதை இயக்கம். அதன் தாக்கத்தில் ஏற்பட்டது தான் திராவிட இயக்கம். அந்த திராவிட இயக்கத்தின் அரசியல் பரிமாணம் தான் திமுக. அந்த திமுக மான உணர்வுள்ள, சுய மரியாதை உணர்வுள்ள இதுபோன்ற பாசறை களை உருவாக்கி வருகிறது. இந்த பாசறை பட்டறைகளில் பயிற்சி அளித்து கொள்கை வீரர்களை உருவாக்குவோம்.

திமுக பேச்சாளர்களும், செயல் வீரர்களும் இதே வேலையாக இருந்து கட்சியை வளர்க்க வேண்டும். விழுப்புரத்தில் ஏற்பட்டுள்ள இந்த எழுச்சி எங்கும் பரவட்டும் என்றார் கருணாநிதி.

மாலை 4 மணிக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் திறப்பு விழா நடக்கிறது.

விழாவில் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு சுழல் நிதி மற்றும் நேரடி கடன் உதவியையும், அரசின் நலத் திட்ட உதவிகளையும் வழங்க உள்ளார்.

இதைத் தொடர்ந்து இரவு 7 மணிக்கு விழுப்புரம் காமராஜ் நகராட்சி பள்ளி மைதானத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி, துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் கலந்துகொண்டு அரசின் சாதனைகளை விளக்கி பேசுகின்றனர்.

பின்னர் இரவு 12.30 மணிக்கு விழுப்புரம் ரயில் நிலையத்தில் இருந்து சேலம் எக்ஸ்பிரஸில் சென்னைக்கு திரும்புகிறார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X