For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மகளிர் மசோதா தொடர்பாக சரத் யாதவுடன் மோதல்: ஐக்கிய ஜனதா தளத்தை உடைப்பாரா நிதீஷ் குமார்?

By Staff
Google Oneindia Tamil News

Nitish kumar and Sharad Yadav
டெல்லி: மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தொடர்பாக ஐக்கிய ஜனதாதள தலைவர் சரத் யாதவுக்கும், பீகார் முதல்வர் நிதீஷ் குமாருக்கும் இடையே ஏற்பட்டுள்ள பிளவு மேலும் பெரிதாகியுள்ளது. நிதீஷ் குமார் விரைவில் கட்சியிலிருந்து வெளியேறுவார் என்று பேச்சு கிளம்பியுள்ளது.

மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவால் தற்போது ஐக்கிய ஜனதாதளத்தில் பிளவு ஏற்பட்டு விட்டது. இந்த மசோதாவுக்கு கட்சியின் மூத்த தலைவரும், பீகார் முதல்வருமான நிதீஷ் குமார் ஆதரவாக இருந்தார். ஆனால் சரத் யாதவ் எதிர்ப்பு தெரிவித்தார்.

தனது கட்சி எம்.பிக்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடாது என்று சரத் யாதவ் உத்தரவிட்டிருந்தார்.

இருப்பினும் அதை மீறி நேற்று ராஜ்யசபாவில் நடந்த வாக்கெடுப்பின்போது, ஐக்கிய ஜனதாதளத்தின் சிவானந்த திவாரி, என்.கே.சிங், அலி அன்வர், மகேந்திர பிரசாத், பகவான் சஹானி ஆகியோர் ஆதரவு தெரிவித்து வாக்களித்தனர்.

இதனால் சரத் யாதவ் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளார். பீகார் மாநிலத்தில் விரைவில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் ஐக்கிய ஜனதாதளத்தில் ஏற்பட்டுள்ள இந்த பிளவு கட்சி உடையும் அளவுக்கு போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது ராஜ்யசபாவில் நிறைவேற்றப்பட்டுள்ள மகளிர் மசோதா அடுத்து லோக்சபாவில் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. அப்போது ஐக்கிய ஜனதாதளத்தில் பெரும் பிளவு ஏற்பட்டு விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் இந்தப் பிளவு எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறப்படுகிறது. காரணம் இதுவரை நிதீஷ் குமாருக்கும், சரத் யாதவுக்கும் இடையிலான மோதல் நீரு பூத்த நெருப்பாக இருந்து வந்தது. தற்போது அது வெடித்துக் கிளம்பியுள்ளதாக கட்சி வட்டாரத்திலேயே பேசப்படுகிறது

கட்சியின் முக்கியக் கொள்கை முடிவுகளில் நிதீஷ்குமாரின் ஆளுகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதும், பீகாரில் அவரது செல்வாக்கு உயர்ந்து வருவதும் சரத் ஆதரவாளர்களை எரிச்சல்படுத்தியுள்ளது. இதன் விளைவே மகளிர் மசோதாவை காரணமாக வைத்து இரண்டு தரப்பும் முட்டிக் கொண்டது என்கிறார்கள்.

முன்பு மகளிர் மசோதா குறித்து சரத் யாதவ் கருத்து தெரிவிக்கையில், குட்டைத் தலைமுடியுடன் சுற்றி வரும் பெண்களுக்குத்தான் (நகர்ப்புற பெண்களைத்தான் இவ்வாறு வர்ணித்தார் சரத்) இந்த மசோதா உதவிகரமாக இருக்கும் என்று கூறியிருந்தார்.

ஆனால் இவ்வாறு கருத்துச் சொன்ன சில மணி நேரத்திலேயே மசோதாவை தான் ஆதரிப்பதாக நிதீஷ் குமார் அறிவிக்க கட்சியில் பிளவு தோன்றி விட்டது.

ஐக்கிய ஜனதாதளத்திற்கு ராஜ்யசபாவில் ஏழு உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து பேர் நேற்று மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

மீதமுள்ள இருவரில் ஒருவர் ஜார்ஜ் பெர்னாண்டஸ். இவர் நடமாடக் கூட முடியாத நிலையில் உடல் நலம் குன்றி இருக்கிறார். இன்னொருவரான எஜாஸ் அலி மட்டுமே சரத் யாதவின் குரலாக கடந்த 2 நாட்களாக ராஜ்யசபாவில் நடந்த அமளி துமளியில் பிரதிபலித்தார். ராஜ்யசபா தலைவரால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட 7 எம்.பிக்களில் இவரும் ஒருவர்.

இதன் மூலம் நிதீஷ் குமாரின் கையே தற்போது கட்சியில் ஓங்கியிருப்பது உறுதியாகி விட்டது.

அதேசமயம், லோக்சபாவில் மொத்தம் 20 எம்.பிக்கள் இந்தக் கட்சிக்கு உண்டு. அவர்களில் 10க்கும் மேற்பட்டோர் நிதீஷின் ஆதரவாளர்கள் என்பதால் சரத் யாதவின் நிலை மேலும் மோசமடைந்துள்ளது. எனவே லோக்சபாவில் மகளிர் மசோதா கொண்டு வரப்படப்படும்போது கட்சி அனேகமாக உடைந்து போய் விடும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X