For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நடப்பு கூட்டத்தொடரிலேயே லோக்சபாவிலும் பெண்கள் மசோதா தாக்கல்?

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி: ராஜ்ய சபாவைத் தொடர்ந்து பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை லோக்சபாவிலும் நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த 13 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்து வந்த இந்த மசோதா, ராஜ்யசபாவில் கடும் எதிர்ப்பு, அமளிக்கு இடையே நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.

எதிர்ப்பு மிகக் கடுமையாக இருப்பதால் நடப்பு கூட்டத் தொடரில் இந்த மசோதாவை லோக்சபாவில் மத்திய அரசு தாக்கல் செய்யாது என்று கூறப்பட்டது.

லோக்சபாவிலும் இந்த மசோதாவை நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றால் தான் அது சட்டமாகும்.

இந் நிலையில் இந்த மசோதாவை நடப்பு பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே, தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இப்போது நடந்து வரும் பட்ஜெட் மே 7ம் தேதி வரை இரண்டு கட்டமாக நடக்கவுள்ளது. இப்போது நடந்து வரும் முதல்கட்ட கூட்டத் தொடர், வரும் 16ம் தேதியுடன் முடிவடையும். இதையடுத்து ஏப்ரல் 12ம் தேதி இரண்டாவது கட்டத்தொடர் தொடங்கும்.

இந் நிலையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பி.கே.பன்சால் நிருபர்களிடம் பேசுகையில்,

ராஜ்யசபாவில் நடந்த சம்பவங்களை போல் நடைபெற்றுவிடாமல் தவிர்க்க லோக்சபாவி்ல் மசோதாவை தாக்கல் செய்வதில் அவசரம் காட்ட மாட்டோம். சூடான நிலைமை தணிந்து, சுமூக நிலை திரும்பியதும் மசோதா தாக்கலாகும்.

அதே நேரத்தில் நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரின் கடைசி நாளான மே 7ம் தேதிக்குள் லோக்சபாவில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுவிடும்.

முடிந்தால் முதல் கட்டக் கூட்டத் தொடர் ஒத்தி வைக்கப்படும் நாளான மார்ச் 16க்கு முன்பே கூட மசோதா தாக்கலாகும் என்றார்.

வெட்டு தீர்மானம்-இடதுசாரிகளுக்கு பாஜக ஆதரவு:

இந் நிலையில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட், விலைவாசி தொடர்பாக இடதுசாரிகள் கொண்டு வரும் வெட்டு தீர்மானங்களை ஆதரிக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது.

பட்ஜெட்டில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை இடதுசாரிகளும் பாஜகவும் கண்டித்து வருகின்றன.
இந் நிலையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து பட்ஜெட் மீது இடதுசாரிகள் வெட்டு தீர்மானம் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

அதை ஆதரிக்கப் போவதாக பாஜக அறிவித்துள்ளது. அக் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் கோபிநாத் முண்டே கூறுகையி்ல்,

அத்தியாவசிய பொருட்களின் விலை, விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருவது குறித்து இடதுசாரி கட்சிகளை போலவே பாஜகவும் கவலைப்படுகிறது. எனவே, விலைவாசி பிரச்சனை தொடர்பாக இடதுசாரிகள் வெட்டு தீர்மானம் கொண்டு வந்தால் அதற்கு ஆதரவாக உறுதியாக வாக்களிப்போம்.

பெட்ரோலிய பொருட்களின் விலையை அதிகரித்தது தொடர்பாக, தனியே வெட்டு தீர்மானம் கொண்டு வந்தால் அதையும் ஆதரிப்போம் என்றார்.

லாலு, முலாயம் சிங் ஆகியோர் வெளியில் இருந்து அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெற்றுள்ளதாக அறிவித்துள்ள நிலையில், இந்த வெட்டுத் தீர்மானங்களை தோற்கடிக்க வேண்டுமானால் மத்திய அரசுக்கு அதன் அனைத்துக் கூட்டணிக் கட்சிகளும் முழுமையாக துணை நின்றாக வேண்டும்.

மம்தா பானர்ஜி போன்றவர்கள் கடைசி நேரத்தில் ஏதாவது காரணத்துக்காக காலை வாரிவிட்டால் அரசே கவிழவும் வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

முஸ்லிம் எம்.பிக்களுக்கு சமாஜ்வாடி கோரிக்கை:

இந் நிலையில் சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவரான அகமது ஹசன் கூறுகையில், மகளிர் இட ஒதுக்கீட்டால் முஸ்லீம், தலித், பிற்படுத்தப்பட்ட இன பெண்களுக்கு எந்த பலனும் கிடையாது. குஜராத், ஹரியானா, பஞ்சாப் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஒரு முஸ்லிம் எம்.பி. கூட, நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை. இத்தகைய சூழ்நிலையில், ஒரு முஸ்லீம் பெண் எப்படி தேர்ந்தெடுக்கப்படுவார்?.

எனவே, இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு அனைத்துக் கட்சி முஸ்லீம் எம்.பிக்களும் தங்கள் கட்சிகளை வலியுறுத்த வேண்டும். காங்கிரசும் பாஜகவும் முஸ்லீம்களை ஏமாற்றி விட்டன. அவர்களை அரசியலில் இருந்து விரட்ட கூட்டு சதி செய்கின்றன என்றார்.

இதன்மூலம் லோக்சபாவிலும் இந்த இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை சமாஜ்வாடிக் கட்சி கடுமையாக எதிர்க்கப போவது உறுதியாகிவிட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X