For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் மசோதா: 70% பாஜக எம்.பிக்கள் எதிர்ப்பு-அத்வானி அவசர ஆலோசனை

By Staff
Google Oneindia Tamil News

Advani
டெல்லி: ராஜ்யசபாவில் மகளிர் மசோதா நிறைவேற முழு ஆதரவு அளித்த பாஜக , லோக்சபாவில் அதை நிறைவேற்ற முழு ஆதரவு தருமா என்பது பெரும் கேள்விக் குறியாகியுள்ளது.

அக்கட்சியைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்களில் 70 சதவீதம் பேர் மசோதாவை ஆதரிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் ஏற்பட்டுள்ள குழப்பத்தை சரி செய்ய அத்வானி தலைமையில் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் வட்டாரம் கிலியடைந்துள்ளது.
கடந்த 9ம் தேதி மகளிர் மசோதா ராஜ்யசபாவில் ஒரு வழியாக நிறைவேற்றப்பட்டது. இதற்கு பாஜக அளித்த ஆதரவு முக்கியக் காரணமாகும். பாஜகவின் ஆதரவு இல்லாமல் ராஜ்யசபாவில் நிச்சயம் மசோதாவை நிறைவேற்றியிருக்க முடியாது.

ஆனால், லோக்சபாவிலும் பாஜகவின் முழு ஆதரவு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. காரணம், பாஜகவைச் சேர்ந்த லோக்சபா உறுப்பினர்கள் பலர் மசோதாவுக்கு எதிராக கிளம்பியுள்ளனராம்.

மேலும், லோக்சபாவில் வாக்கெடுப்பின்போது கொறடா உத்தரவு எதையும் பிறப்பிக்கக் கூடாது என்றும் கட்சித் தலைமையை அவர்கள் வலியுறுத்தியுள்ளனராம். மனசாட்சிப்படி வாக்களிக்குமாறு மட்டுமே கூற வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனராம்.

பாஜகவில் எழுந்துள்ள இந்த எதிர்ப்புக்குக் காரணம்- ராஜ்யசபாவில் மசோதாவை நிறைவேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு நடந்து கொண்ட விதம்தான் காரணமாம். வெற்றிகரமாக எதிர்க்கட்சிகளை காங்கிரஸ் பிளவுபடுத்தி விட்டது. அதற்குத் தெரிந்தோ, தெரியாமலோ பாஜகவும் துணை போய் விட்டது. இது மிகப் பெரிய தவறு.

குறிப்பாக, விலைவாசி உயர்வுப் பிரச்சினையில், காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு எதிராக பாஜக, இடதுசாரிகள், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதாதளம், பகுஜன் சமாஜ் கட்சி என அத்தனை எதிர்க்கட்சிகளும் ஓரணியில் திரண்டு வந்த நிலையில், அதை உடைத்து விட்டது காங்கிரஸ் மகளிர் மசோதா மூலம். இதை பாஜக புரிந்து கொள்ளாமல் விட்டு விட்டது துரதிர்ஷ்டவசமானது என்று இந்த எதிர்ப்பாளர்கள் கட்சித் தலைமையிடம் கூறியுள்ளனர்.

அக் கட்சியின் எம்பியான யோகி நித்யானந்த் கூறுகையில், பெண்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு எங்களுக்கு கட்சியின் கொறடா உத்தரவிட்டால் அதை நிச்சயம் மீறுவோம் என்றார்.

இதையடுத்து இந்த விவகாரம் குறித்துப் பேச மூத்த தலைவர் அத்வானியின் வீட்டில் இன்று முக்கிய எம்பிக்கள், தலைவர்களின் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பாஜகவில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் புரட்சியால் காங்கிரஸ் வட்டாரம் கிலி அடைந்துள்ளது.

ஏற்கனவே ராஜ்யசபாவில் திக்கித் திணறி மசோதாவை நிறைவேற்றிய காங்கிரஸ் தற்போது லோக்சபாவில்தான் பெரும் சவாலை சந்திக்கவுள்ளது.

இந்த நிலையில் பாஜகவின் முழு ஆதரவும் கிடைக்காவிட்டால் நிச்சயம் மசோதா நிறைவேறுவது சிக்கலாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த திடீர் புரட்சி குறித்துத லோக்சபா பாஜக தலைமைக் கொறடா ரமேஷ் பயஸ் கூறுகையில், லோக்சபா பாஜக எம்.பிக்களிடையே மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு உள்ளது. எம்.பிக்களை சமாதானப்படுத்த கட்சித் தலைமை தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளது.

70 சதவீத எம்.பிக்கள் மசோதாவுக்கு எதிராக உள்ளனர். ராஜ்யசபாவில் மார்ஷல்களுக்கு மத்தியில் இந்த மசோதாவைக் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய விதம் குறித்து பாஜக எம்.பிக்கள் கொதித்துப் போயுள்ளனர்.

அதிருப்தியுடன் உள்ள எம்.பிக்களுடன் ஏற்கனவே யஷ்வந்த் சின்ஹா, முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் ஒரு சுற்றுப் பேச்சு நடத்தியுள்ளனர் என்றார்.

பீகாரைச் சேர்ந்த பாஜக மூத்த தலைவரான எம்.பி. ஹுக்கும் தியோ நாராயணன் யாதவ் கூறுகையில், கட்சிக் கொறடா உத்தரவு பிறப்பிக்கப்பட்டால் அதை நான் நிச்சயம் மீறி மசோதாவுக்கு எதிராக வாக்களிப்பேன்.

இதற்காக என்னைக் கட்சியை விட்டு நீக்கினாலும் கூட பரவாயில்லை கவலை இல்லை. நான் ஒரு சோஷலிசவாதி. சமூக நீதியில் என்னால் சமரசம் செய்து கொள்ள முடியாது.

லோக்சபாவில் மசோதா வரும்போது கட்சிக் கொறடா உத்தரவை பிறப்பிக்க வேண்டாம் என கட்சித் தலைமையைக் கேட்டுக் கொண்டுள்ளேன். அதை அவர்கள் மதிக்க வேண்டும்.

ராஜ்யசபாவில் இந்த மசோதாவை மார்ஷல்களை வைத்து காங்கிரஸ் கட்சி நிறைவேற்றிய செயல் மிகவும் அவமானகரமானது.

எதிர்ப்பு தெரிவித்தவர்களை குண்டுக்கட்டாக தூக்கிப் போட்டு ராணுவச் சட்டத்தை அவர்கள் அரங்கேற்றியுள்ளனர். இதைக் கண்டிக்காமல் பாஜக வேடிக்கை பார்த்தது வேதனைக்குரியது.

வரலாறு பாஜகவை மன்னிக்காது. திரவுபதி துகிலுரியப்பட்டபோது அதை தடுக்க முயலாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர் பீஷ்மரும், துரோணாச்சாரியாரும். அதேபோலத்தான் ராஜ்யசபாவில் நடந்ததை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது பாஜக என்றார் யாதவ்.

மூத்த உறுப்பினர்கள் முதல் இளம் உறுப்பினர்கள் வரை சரமாரியாக மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கிளம்பியுள்ளதால் பாஜக தலைமை பெரும் சங்கடத்துக்குள்ளாகியுள்ளது.

ராஜ்சபா ஒத்திவைப்பு:

இந் நிலையில் பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்ட போது அத்துமீறிய எம்.பிக்கள் 7 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரம் இன்று ராஜ்யசபாவில் எதிரொலித்தது. இது குறித்து ராஜ்யசபாவில் எதிர்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. இதனால் அவைத் தலைவர் ஹமீது அன்சாரி அவையை ஒத்திவைத்தார்.

அதே போல இன்று காலை லோக்சபா கூடியதும் எதிர்கட்சிகள் அமளியில் இறங்கின. இதையடுத்து கேள்வி நேரம் ஒத்திவைக்கப்பட்டு, முலாயம், லாலு ஆகியோர் பெண்கள் இட ஒதுக்கீடு ம‌சோதா மீது பேச அனுமதி வழங்கப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X