For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மகளிர் மசோதாவை ஆதரித்த காங், எதிர்க்கட்சிகளுக்குப் பாராட்டு- ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மகளிர் இட ஒதுக்கீட்டு முன்வடிவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் நான் பாராட்டியே ஆக வேண்டும் என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சுமார் 14 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் எழுப்பப்பட்ட நாடாளுமன்றத்திலும், மாநில சட்டமன்றப் பேரவைகளிலும் மகளிருக்கான 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்ட முன்வடிவு, மாநிலங்களவையில் அமோக ஆதரவுடன் நிறைவேறி இருக்கிறது.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த சட்ட முன்வடிவை ஒற்றுமையுடனும், ஒருமித்த கருத்துடனும் அரிய வகையில் நிறைவேற்றிக் கொடுத்த ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளையும் நான் பாராட்டியே ஆக வேண்டும்.

இந்திய மரபு வழி பழக்க வழக்கங்கள், ஆண், பெண் இருபாலாரையும் எப்பொழுதும் சமமாகவே கருதுகிறது. இந்து மதத்தின் மிக உயர்ந்த கடவுள் அர்த்தநாரீஸ்வரராக, அதாவது பாதி பெண், பாதி ஆணாக சித்தரிக்கப்படுகிறார். சக்தி, சிவம் ஆகியவை ஒரு முழுப்பொருளின் முக்கிய இரு பகுதிகள் என புராணங்கள் நமக்கு போதிக்கின்றன.

தத்துவ மேதைகளாகவும், மகாராணிகளாகவும், குலத் தலைவிகளாகவும் இருந்த பெண்கள், ஆண்களுக்கு சமமாகவோ அல்லது ஆண்களை விட சிறப்பானவர்களாகவோ தான் விளங்கினார்கள் என்று இந்திய வரலாற்றுக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.

1960 களிலேயே ஒரு பெண்மணியை இந்தியப் பிரதமராக்கி நாம் பெருமைப்படுத்தினோம். இன்றைக்குக் கூட, ஒரு பெண்மணி தான் குடியரசுத் தலைவர் மாளிகையை அலங்கரித்துக் கொண்டிருக்கிறார்.

நம் நாட்டின் மொத்த மக்கள் தொகையில் பெண்கள் சரிபாதியாக இருந்தாலும், பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள். ஆணாதிக்க சமூகம் கட்டுப்பாடுகளை விதித்ததன் காரணமாகவே, பெண்கள் சமூக அரசியல் பங்களிப்பில் இருந்து ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளார்கள்.

இந்த முரண்பாட்டை சரிசெய்யும் வகையிலும், பாலின சமத்துவத்தை உறுதிப்படுத்தும் வகையிலும் உருவாக்கப்பட்ட ஒரு சிறிய நடவடிக்கையே பெண்கள் இடஒதுக்கீடு சட்டம்.

மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டு இருக்கிறது என்பது சிறியதொரு படியாக இருந்தாலும், இந்த மசோதா கடந்து வந்த பாதையைப் பார்க்கும் போது இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கையே. இந்த மசோதா சட்டமாவதற்கு முன்பு நாடாளுமன்ற மக்கள் அவையில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நம் நாட்டில் உள்ள 28 மாநிலச் சட்டமன்றப் பேரவைகளில் குறைந்தபட்சம் 14 சட்டமன்றப் பேரவைகளில் இந்தச் சட்டத்திற்கு பின்னேற்பு வழங்கப்பட வேண்டும். இந்தத் தருணத்தில், குறுகிய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டு, மேலும் காலதாமதமின்றி இந்த மசோதா சட்டமாக்கப்படுவதை அனைத்து அரசியல் கட்சிகளும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

நான் தமிழகத்தின் முதலமைச்சராக இருந்த போது, மகளிருக்கு கிடைக்க வேண்டிய பங்கினை உறுதி செய்ய பாடுபட்டேன். தமிழகத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் ஏற்பட நான் முக்கிய காரணமாக இருந்தேன். தாயின் பெயரையும் தலைப்பெழுத்தாக வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டேன்.

ஆணாதிக்கம் நிறைந்த சமூக அரசியல் அமைப்பில், மகளிருக்கு சமத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்பதை உறுதி செய்வது முக்கியம் என்பதை கருத்தில் கொண்டு தான் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அ.தி.மு.க. தொடர்ந்து ஆதரித்து வருகிறது.

மகளிர் இடஒதுக்கீடு மசோதா சட்டமாகிய பிறகு, மாநில சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றத்தில் பொறுப்புகளை ஏற்கக் கூடிய மனோதிடமும், திறமையும் பெண்களுக்கு அவசியம். எனவே, எதிர்காலத்தில் பெண்கள் அரசியலில் ஆக்கப்பூர்வமான பங்கினை வகிக்கும் வகையில் தங்களை வளர்த்துக் கொள்ளவும், பண்படுத்திக் கொள்ளவும், பெண்களுக்கு பயிற்சி அளிக்க அ.தி.மு.க. தேவையான நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளது.

மகளிருக்கு அதிகாரம் அளித்தல், பாலின சமத்துவம், வலுவான மற்றும் நீள்மீட்சி இந்தியா ஆகியன அ.தி.மு.க.வின் நோக்கங்கள் ஆகும் என்று தெரிவித்துள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X