For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் தூண் கருணாநிதி- சோனியா

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானதில் இருந்தே, அந்த கூட்டணிக்கும், எனக்கும், பிரதமருக்கும் வலிமையும், நம்பிக்கையும் தரக்கூடிய முக்கிய தூணாக கருணாநிதிதான் விளங்கி வருகிறார். அவரது ஆதரவையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம் என்று புகழாரம் சூட்டியுள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

சென்னையில் நேற்று நடந்த சட்டசபைக் கட்டடத் திறப்பு விழாவுக்கு முன்னிலை வகுத்து சோனியா காந்தி பேசியதாவது:

தமிழகத்தின் புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாகத்தை பிரதமர் திறந்து வைக்கும் இந்த வரலாற்று சிறப்புமிக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். இது ஒரு சாதாரண நிகழ்ச்சி அல்ல. இது ஒரு கொண்டாட்டம்.

1861-ல் அடித்தளம் அமைக்கப்பட்ட சிறந்த வரலாற்றின் புதிய தொடக்கமாக இந்த நிகழ்ச்சி அமைந்துள்ளது. 1861-ல் தான், நிர்வாக சபை என்ற சிறிய அமைப்புக்கு, மக்களுக்கு அமைதி மற்றும் சிறந்த நிர்வாகத்தை அளிப்பதற்காக அதிகாரம் அளிக்கப்பட்டது. அந்த அமைப்பு பல்வேறு மாற்றங்களை அடைந்து, 1937-ம் ஆண்டில் சென்னை மாகாண சட்டசபையாக, இந்திய அரசின் 1935-ம் ஆண்டு சட்டத்தின்படி மாற்றியமைக்கப்பட்டது. சுதந்திரத்துக்கு பிறகு, இந்திய அரசியலமைப்பு சட்டப்படி 1952-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் அந்த சபை மீண்டும் திருத்தியமைக்கப்பட்டது.

ஒவ்வொரு மாநில சட்டமன்றத்துக்கும் ஒரு சிறப்பு உள்ளது. தமிழக சட்டமன்றத்துக்கும் பல்வேறு தனிச்சிறப்புகள் உள்ளன. இந்தியாவில் உள்ள சட்டசபைகளிலேயே முதல் பெண் உறுப்பினராக டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி இருந்தது தமிழக சட்டமன்றத்தில்தான். அவர், 1927-ல் உறுப்பினராக இருந்தார். நியமன உறுப்பினரான ராஜாஜி, தமிழகத்தின் முதல்-அமைச்சரானார்.

ஆனால் அவர் ஒரு (இடைத்தேர்தல்) தேர்தலில், தோல்வியடைந்தார். நான் தோற்றதால் அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தினை கொண்டு வரலாம் என்று கூறினார் அவர்.

எம்.ஜி.ஆர் - கருணாநிதி வாதம்...

தமிழக சட்டசபையில் மிகச் சிறந்த வாதங்கள், சி.சுப்பிரமணியம் மற்றும் அண்ணாதுரை ஆகியோருக்கிடையே நடைபெற்றுள்ளன. இதுபோல், மு.கருணாநிதி மற்றும் எம்.ஜி.ஆர். ஆகியோருக்கும் இடையே ஆரோக்கியமான வாதங்கள் தமிழக சட்டசபையில் அரங்கேறியுள்ளன.

தே வேளையில், காமராஜர், தனது நேர்த்தியான, தெரிந்தெடுக்கப்பட்ட சில வார்த்தைகளால் எவ்வாறு சட்டசபையில் வாதிட்டார் என்பதையும் வரலாறு நமக்கு காண்பிக்கிறது.

பேசாமல் சாதித்தவர் காமராஜர்...

பேச்சாற்றல் ஒரு வெள்ளி என்றும், அமைதியாக இருப்பது தங்கத்துக்கு ஒப்பானது என்றும் கூறுவார்கள். அதை நிரூபித்தவர் காமராஜர். குறைவாக பேசி, நிறைய சாதனைகளை செய்தவர் அவர்.

தமிழக சட்டசபையை அலங்கரித்த மாபெரும் தலைவர்களை நினைவுகூரும் அதே வேளையில், நமது இந்திய அரசியலைப்பின் கூட்டாட்சி தத்துவத்தினை அடிக்கோடிட்டு காட்டவேண்டியது அவசியமாகிறது. அது, மத்திய, மாநில மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றுக்கு ஒன்றை ஒன்று சார்ந்து இருக்கும் நெருக்கமான உறவை காட்டுகிறது.

நமது கூட்டாட்சி தத்துவத்தில், மக்கள் குறைகளை தீர்க்கும் சமூக மேம்பாட்டு திட்டங்களை வகுக்கும் அதிகாரம் மாநில அரசிடம்தான் உள்ளது. அதற்காக, மாநில சட்டசபைகளுக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த அதிகாரம், நகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் அடித்தட்டு மக்களுக்கும், சமூக மேம்பாட்டுத் திட்டங்களின் நன்மை கிடைக்கிறது. இந்த அதிகாரங்கள், கூட்டாட்சியின் மகத்துவத்தை உணர்த்துவதாக உள்ளது. கூட்டாட்சி தத்துவம், நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு பெரிதும் உதவிகரமாக அமைந்துள்ளது. இதை நிலைநாட்டுவதில் தமிழகம் ஒரு முன்மாதிரி மாநிலமாக விளங்குகிறது.

அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக தலைவர்கள்...

1960 முதலே, கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு, ஊரக வளர்ச்சி போன்ற பல்வேறு துறைகளில் தமிழகம் முன்னோடி மாநிலமாக விளங்கி வருகிறது. அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட தமிழக தலைவர்கள், சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நலன்களுக்காகவும், சமூக நீதிக்காகவும், அவர்களது உரிமைகளை பெற்றுத்தரவும் தொடர்ந்து செயல்பட்டு வந்திருப்பது சிறப்பானதாகும். அவர்ëகளது நடைமுறைக்கு சாத்தியப்படக்கூடிய அணுகுமுறை காரணமாக, தமிழகம் தொழில்மயம், வளர்ச்சி மற்றும் மேம்பாடு கொண்ட மாநிலமாக உருவெடுத்துள்ளது. தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதியின் தலைமையில் தமிழகம் பல்வேறு துறைகளில் பீடுநடை போட்டு வருகிறது.

நமது பாராளுமன்ற செயல்பாட்டு முறை மீது இந்திய மக்கள் தாங்கள் வைத்துள்ள நம்பிக்கையை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார்கள். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்கும் சதவீதம் அதிகரித்துக் கொண்டிருப்பதே இதற்கு சாட்சி. ஒவ்வொரு முறையும், அவர்கள் திரளான முறையில் வாக்குச்சாவடிக்கு ஒட்டு போடச் செல்கிறார்கள். வெற்றி பெற்றால் கொண்டாடுகிறார்கள். தோல்வியடையும்போது அதை அமைதியாக ஏற்றுக் கொள்கிறார்கள்.

இந்த சட்டசபை கட்டிடம், மிகவும் சிறப்பானதாகவும், அற்புதமாகவும் அமைந்துள்ளது. இதன் பின்னணியில் ஏராளமான வல்லுனர்கள், கட்டிடக் கலை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரது அயராத உழைப்பு இருந்தாலும், அவற்றுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்ததது முதல்-அமைச்சர் கருணாநிதிதான் என்பதை அறிவேன். அவரது ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் உழைப்பை இந்த கட்டிடத்திலும் காணமுடிகிறது.

இந்த சட்டசபை கட்டுமானப் பணியை அவர் தினந்தோறும் தவறாமல் வந்து பார்த்துச் சென்றார் என்பதும், ஒரு சில நாட்களில் 5 முறை கூட வந்து பார்த்துச் சென்றதாகவும் அறிந்தேன். இந்த விழா நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த நாளில் கூட அதிகாலை 5 மணிக்கு வந்து சட்டசபை வளாகத்தை அவர் பார்வையிட்டுச் சென்றுள்ளார். அவரது அர்ப்பணிப்பு உணர்வையும், எடுத்த காரியத்தின் மீது கொண்ட பற்றையும் நான் பெரிதும் பாராட்டுகிறேன்.

கூட்டணியின் வலிமையான தூண் கருணாநிதி

ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவானதில் இருந்தே, அந்த கூட்டணிக்கும், எனக்கும், பிரதமருக்கும் வலிமையும், நம்பிக்கையும் தரக்கூடிய முக்கிய தூணாக கருணாநிதிதான் விளங்கி வருகிறார். மத்திய அரசுக்கு ஏதாவது ஒரு சிறிய பிரச்சினை என்றாலோ, தேசிய பிரச்சினை என்றாலோ, பிரதமர் மன்மோகன் சிங் உடனடியாக தொலைபேசியில் தொடர்பு கொள்ளும் முதல் நபர் முதல்-அமைச்சர் கருணாநிதிதான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ஆதரவையும், அறிவார்ந்த ஆலோசனைகளையும் நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்.

கருணாநிதி இல்லாமல் மகளிர் மசோதா இல்லை...

மகளிருக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதா பற்றி முதல்-அமைச்சர் கருணாநிதி இங்கு பேசினார். அவரது ஆதரவு இல்லாமல், அந்த சட்டமசோதா நிறைவேறியிருக்க முடியாது. அதற்காக எனது நன்றியை அவருக்கு தெரிவித்துக்கொள்கிறேன்.

புனித ஜார்ஜ் கோட்டையின் பசுமையான நினைவுகள் மனதில் பதிந்திருக்கும் அதே நேரத்தில், இந்த புதிய சட்டசபை கட்டிடத்தில் இன்னும் சில நாட்களில் முதலாவது கூட்டம் நடைபெற உள்ளது. தமிழக சட்டசபை வரலாற்றில் இந்த புதிய கட்டிடம் புதிய தொடக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும் என்று உறுதியாக நம்புகிறேன். தமிழக மக்களுக்கு சிறந்த எதிர்காலம் அமைய எனது வாழ்த்துகள் என்றார் சோனியா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X