For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியலை 'சுத்தப்படுத்த' குதிக்கிறாராம் யோகி ராம்தேவ்!

By Staff
Google Oneindia Tamil News

Baba Ramdev
டெல்லி: இந்தியாவில் அரசியலை சுத்தப்படுத்த அடுத்து வரும் தேர்தலில் களமிறங்கப் போவதாக யோகா குரு ராம்தேவ் அறிவித்துள்ளார்.

தேர்தலில் தானே நேரடியாக போட்டியிடவில்லை என்றும் அவரின் 'பாரத் சுவாபிமான் அந்தோலன்' அமைப்பு சார்பில் 543 மக்களவைத் தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள் என்றும் யோகி ராம்தேவ் கூறியுள்ளார்.

தன்னுடைய அமைப்பு தேர்தல் களத்தில் குதித்தவிட்ட பின் ஊழல் பேர்வழிகள் எல்லோரும் அரசியலை விட்டே ஓடிவிடுவார்கள் என்றும் அவர் உறுதியாக கூறுகிறார்.

அவர் கூறுகையில், 'அடுத்த ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் ஒவ்வொரு மாவட்டமாக சுற்றி, 7 முதல் 10 லட்சம் உறுப்பினர்கள் வரை சேர்த்து விடுவோம்.

எங்கள் இயக்கத்தின் முக்கிய நோக்கம் ஊழலை ஒழிப்பது தான். அதோடு வெளிநாடுகளில் முடங்கிக் கிடக்கும் ரூ.300 லட்சம் கோடி கருப்புப் பணத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொண்டு வந்து வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும்.

இந்திய சாமியார்களுக்கு எதிராக சில அரசியல்வாதிகளும், சாதி அமைப்புகளும் சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

கொலை, கற்பழிப்பு, பண மோசடி, செக்ஸ் குற்றச்சாட்டு, கடத்தல் என திட்டமிட்டு பல்வேறு புகார்களை அவர்கள் மீது ஜோடித்து வழக்கில் இழுத்து விடுகிறார்கள் என்கிறார்.

அரசியல் அவதாரத்துக்கான அறிவிப்பை செய்த கையோடு உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதியை தாக்கத் தொடங்கிவிட்டார் யோகி ராம்தேவ்.

கரன்சி மாலை அணிந்து கொண்ட மாயாவதி பற்றி அவர் விமர்சிக்கையில், 'பணம் என்பது நாட்டின் கடைக்கோடியில் உள்ள மக்களின் நலனுக்காக செலவிடப்பட வேண்டும்.

மாயாவதி போன்ற அரசியல்வாதிகளின் ஆபரணமாக ஜொலிக்கக் கூடாது. மாயாவதி வர்த்தக எண்ணத்துடன் செயல்படுபவர். நான் தர்ம சிந்தனையுடன் நடப்பவன்.

மனிதர்களின் உடலில் உள்ள நோய்களை சுத்தப்படுத்திய நான், அரசியலில் உள்ள அசுத்தங்களை அகற்றி சமூகத்தை சுத்தப்படுத்துவேன் என்கிறார் ராம்தேவ்.

நீரிழிவு, மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், எடைக் குறைப்பு என பல்வேறு உடல் நல பிரச்னைகளுக்கு யோகா மூலம் தீர்வுகளை வழங்குவதாக கடந்த ஆறேழு ஆண்டுகளில் இந்தியா மட்டுமல்லாது உலக நாடுகளிலும் பிரபலமாகி இருப்பவர் யோகா ராம்தேவ்.

இவரின் யோகா மையத்தின் சார்பில் நடத்தப்படும் மருத்து தயாரிப்பு நிறுவனத்தில் மனித மற்றும் விலங்குகளின் எலும்புகள் பயன்படுத்தப்படுவதாக மார்க்சிஸ்ட் பிருந்தா கராத் சமீபத்தில் இவர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை கூறியது குறிப்பிடத்தக்கது.

எய்ட்ஸுக்கு மருந்து, புற்று நோய்க்கு மருந்து என அடிக்கடி பரபரப்பு தகவல்களை வெளியிட்டும் வந்தவர் இவர்.

மேலும் யோகா மையங்களில் பணியாளர் சட்ட விதிமீறல் தொடர்பாகவும் செய்திகளில் அடிபட்ட யோகி ராம்தேவின் இயற்பெயர் ராம்கிஷன் யாதவ். ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்தவர்.

57 வயதான இவர், எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்தார். சிறுவயதிலேயே 'பராலிசிஸ்' நோயால் பாதிக்கப்பட்ட இவருக்கு யோகா மீது ஆர்வம் ஏற்பட்டு முறையாக கற்றுக்கொண்டார்.

ஆரம்ப நாட்களில் ஹரியானாவில் கிராமம் கிராமமாக சுற்றி மக்களுக்கு யோகா பயிற்சி அளித்து வந்த இவர், தற்போது இந்தியா மட்டுமல்லாது பல்வேறு வெளிநாடுகளிலும் "யோகா குரு' என பிரபலமாக அறியப்படுகிறார்.

யோகா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தை மக்கள் மத்தியில் பிரபலப்படுத்துவதற்காக திவ்ய யோக மந்திர் என்ற அறக்கட்டளையை நிறுவி நடத்தி வருகிறார்.

பதஞ்சலி யோக சூத்திரங்களை முறையாக பயின்றும், பயிற்றுவித்தும் வருகிறார். நேரடி நிகழ்ச்சிகள், முகாம்கள், டிவி மூலம் என சுமார் 8 கோடிக்கும் மேற்பட்டோர் இவரிடம் இருந்து யோகா பயிற்சிகளை பெற்றுள்ளதாக அவரின் இணையதளத் தகவல் தெரிவிக்கிறது.

விவசாய உற்பத்தியில் வேதியல் கலப்படத்தால் ஏற்படும் பாதிப்பு, விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி, நாட்டின் சுதேசி தொழில்துறை நலிந்து போவது, இந்திய பணம் சுவிஸ் வங்கிகளில் முடங்குவது, சமூக பொருளாதார முரண்பாடுகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகள் குறித்து ராம்தேவ் அவ்வப்போது பேசி வருகிறார்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச முதல்வர் மாயாவதி சமீபத்தில் கூட்டம் ஒன்றில் பேசும்போது இவரை மறைமுகமாக குறிப்பிட்டு இதுபோன்ற பாபாக்களை எல்லாம் நம்பாதீர்கள் என காட்டமாக கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X