For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மூளைச் சாவடைந்த மகளின் சிறுநீரகங்கள் தந்தைக்குப் பொருத்தம்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஆந்திராவைச் சேர்ந்த 5 வயது சிறுமி மூளைச்சாவைச் சந்தித்தாள். இதையடுத்து அவளது இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டு, உயிருக்குப் போராடி வந்த அவளது தந்தைக்குப் பொருத்தப்பட்டு அவர் புது வாழ்வு பெற்றுள்ளார்.

ஆந்திரா மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சந்திரசேகரன் (36). இவர் சித்தூரில் சர்க்கரை தொழிற்சாலையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக இவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

சந்திரசேகரனின் ஒரே மகள் ஜனனி (5). சித்தூரில் உள்ள ஒரு பள்ளியில் முதலாம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் ஜனனி சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தாள். தலையில் பலத்த காயம் அடைந்த அவள் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தாள்.

அவளை வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு எடுத்து வந்தனர். ஜனனியை பரிசோதித்த டாக்டர்கள் உடனடியாக அவளை சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கும்படி அறிவுறுத்தினார்கள். இதையடுத்து ஜனனி சென்னைக்குக் கொண்டு வரப்பட்டாள்.

சென்னை அரசு மருத்துவமனை டாக்டர்கள் ஜனனி உடலை பரிசோதித்தபோது அவள் மூளை சாவு நிலையை அடைந்திருப்பதை கண்டுபிடித்தனர். நேற்று மதியம் 12.47 மணிக்கு ஜனனி மூளை சாவடைந்தது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விபத்தில் ஆழ்நிலை மயக்கத்துக்கு சென்று மூளை சாவடைந்த ஜனனியின் உடலில் பெரிய அளவில் எந்த காயமும் ஏற்படவில்லை. உடல் உறுப்புகள் நல்ல நிலையில் இருந்தன. எனவே ஜனனி உடல் உறுப்புகளை தேவைப்படுபவர்களுக்கு தானம் கொடுக்கலாம் என்று டாக்டர்கள் யோசனை தெரிவித்தனர்.

ஜனனியின் கண்கள், கல்லீரல், சிறுநீரகம், இதயம், இதய ரத்தக் குழாய்கள் ஆகியவற்றை தானமாகக் கொடுக்கலாம் என்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தனர். இதற்காக சந்திரசேகரனிடமும், அவரது மனைவியிடமும் டாக்டர்கள் உடல் உறுப்பு தானம் பற்றி எடுத்துக் கூறினார்கள்.

இந்த கவுன்சிலிங் நடந்த போதுதான் சந்திரசேகரன் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு இருப்பது டாக்டர்களுக்கு தெரிய வந்தது. உடனே டாக்டர்கள், உங்கள் மகள் சிறுநீரகங்களை எடுத்து உங்களுக்கே பொருத்தி விடலாம் என்று கூறினர்.

இதைக் கேட்டதும் சந்திரசேகரன் கண்ணீர் விட்டு அழுதார். மகள் பறிபோன துக்கம் ஒருபக்கம், அவளே தனக்கு உயிர் கொடுக்கப் போகிறாள் என்ற வேதனை இன்னொரு பக்கம்.

இதையடுத்து டாக்டர்கள் ஜனனி, சந்திரசேகரனின் ரத்தத்தைப் பரிசோதித்தனர். அதில் பொருத்தம் இருப்பது தெரிய வந்ததால், சிறுநீரகங்களைப் பொருத்தினால் சிறந்த முறையில் அவை செயல்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து ஜனனியின் உடல் உறுப்புகளை அகற்றும் பணி தொடங்கியது. அவளது இரு சிறுநீரகங்களும் எடுக்கப்பட்டு சந்திரேசகரனுக்கு பொருத்தப்பட்டன.

இந்தியாவில் மூளை சாவடைந்த ஒரு சிறுமியின் உடல் உறுப்புகள் தந்தைக்கு பொருத்தப்பட்டிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

அதேபோல, ஜனனியின் 2 கண்களும் அரசு கண் மருத்துவமனைக்கு தானமாக கொடுக்கப்பட்டது. இதன்மூலம் யாராவது 2 பேர் பார்வை பெற முடியும். கல்லீரல் குளோபல் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.

ஜனனியின் இதயம் நல்ல நிலையில் இயங்கியது. ஆனால் அதை பெறுவதற்கான நோயாளிகள் யாரும் சென்னையில் இல்லாததால், இதயத்தைத் தானமாக கொடுக்க முடியாமல் போய் விட்டது.

இருப்பினும், இதய ரத்தக் குழாய்களை முகப்பேரில் உள்ள மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மருத்துவமனைக்கு கொடுத்துள்ளனர்.

தந்தைக்கு மட்டுமல்லாமல், மேலும் நான்கு பேரின் வாழ்க்கைக்குப் புத்துயிர் கொடுத்துள்ளாள் சிறுமி ஜனனி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X