For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போகிறது-ஜெயலலிதா

By Staff
Google Oneindia Tamil News

Jayalalitha
சென்னை: அடுத்த சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு, தமிழக பட்ஜெட்டில் விளம்பரத்திற்காக கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

கொடநாட்டில் ரெஸ்ட் எடுத்துவிட்டு நேற்று சென்னை திரும்பிய ஜெயலலிதா இன்று சட்டசபைக்கு வரவில்லை. இந் நிலையில் பட்ஜெட் குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

ஒரு மாநிலத்தின் பொருளாதார நிலைமையை, ஒரு மாநிலத்தின் உற்பத்தி திறனை, தொழில் வளர்ச்சியை, மக்கள் நலப்பணிகளை படம் பிடித்துக் காட்டுவது தான் நிதிநிலை அறிக்கை. 2010-2011 ம் ஆண்டிற்கான தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையை படித்துப்பார்க்கும் போது தமிழகம் வளர்ச்சிப் பாதையில் செல்வதாகத் தெரியவில்லை. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை மனதில் வைத்து விளம்பரத்திற்காக கவர்ச்சித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதும், பற்றாக்குறை அதிகரித்துக் கொண்டே போவதும் தான் பளிச்சென்று நிதிநிலை அறிக்கையில் தென்படுகிறது.

பற்றாக்குறை அறிக்கை என்பது நாட்டின் வளர்ச்சிக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கும் வழிவகுக்குமேயானால் அதில் தவறு ஒன்றுமில்லை. ஆனால் தமிழக அரசால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிதிநிலை அறிக்கை விலைவாசியை மேலும் அதிகரிக்கக்கூடிய, ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்கக்கூடிய ஆபத்தான நிதிநிலை அறிக்கையாக விளங்குகிறது.

2009-2010ம் ஆண்டு 1,024.34 கோடி ரூபாயாக இருந்த வருவாய் பற்றாக்குறை 2010-2011-ல் 3,396.45 கோடி ரூபாயாகவும்;

11,823.64 கோடி ரூபாயாக இருந்த நிதிப்பற்றாக்குறை, 16,222.13 கோடி ரூபாயாகவும் உயர்ந்துள்ளது.

2009-2010 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டம் தொடர்பான வரவுகள் மற்றும் செலவுகளின் நிலை குறித்த ஆய்வின்படி, 30.9.2009 முடிய ஆறுமாத காலத்தில் தமிழக அரசின் மொத்த வருவாய் வரவுகளின் போக்கு 5,000 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்திருக்கிறது. அதாவது,

2009-2010ம் ஆண்டுக்கான மொத்த வரவு-செலவுத்திட்ட மதிப்பீடு 58,271.14 கோடி ரூபாய். 30.9.2009 வரை குறைந்தபட்சம் 29,135 கோடி ரூபாயாவது வருவாய் வந்திருக்க வேண்டும். ஆனால், இந்த அரசின் புள்ளிவிவரப்படி, 30.9.2009 வரை 24,432.15 கோடி ரூபாய் தான் வருவாய் வந்திருக்கிறது. இந்த நிலை நீடித்தால், பற்றாக்குறை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

நான் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக...

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 2,500 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று எனது தலைமையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விளைவாக, கரும்புக்கான ஆதார விலையை ஓரளவு உயர்த்தி டன் ஒன்றுக்கு 2,000 ரூபாயாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகை இல்லாமல் 2,500 ரூபாய் அளிக்கப்படும் என்று கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், போக்குவரத்துக் கட்டணம் மற்றும் ஊக்கத் தொகையுடன் சேர்த்து 2,000 ரூபாய் என்ற அறிவிப்பு கரும்பு விவசாயிகளை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நதி நீர் இணைப்புத் திட்டம் மற்றும் அண்டை மாநிலங்களுடனான நதி நீர்ப் பிரச்சனைகள் ஆகியவற்றை தீர்ப்பது குறித்து உறுதியான நடவடிக்கைகள் எதுவும் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

பாம்பாற்றின் குறுக்கே மறையூர் அருகே உள்ள கோவில்கடவு பகுதியில், கேரள நீர்மின் திட்டத்திற்காக புதிய அணை கட்ட கேரள அரசு உத்தேசித்துள்ளதை தடுத்து நிறுத்துவது குறித்து நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடாதது வருந்தத்தக்கது.

வேடிக்கையாக இருக்கிறது:

தமிழ்நாட்டின் சட்டம்- ஒழுங்கு சீரழிந்து கொண்டே போகிறது. பட்டப்பகலில், மக்கள் நெரிசல் மிகுந்த இடங்களில், காவல் நிலையங்களுக்கு அருகிலேயே அன்றாடம் கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், தமிழகத்தில் பயங்கர வாதம், தீவிரவாதம் சிறிதும் தலையெடுக்காமல் இருந்திட இந்த அரசு மிகவும் விழிப்புடன் இருந்து வருவதாக நிதி நிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருப்பது வேடிக்கையாக இருக்கிறது.

தனியார் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் உயர்ந்து கொண்டே இருக்கும் கல்விக் கட்டணத்தை குறைக்க எந்த வழிவகையும் இந்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை.

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு 3,889 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருந்தாலும், பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் பற்றாக்குறையும், மருந்துகள் பற்றாக்குறையும் தொடர்ந்து இருந்து கொண்டே தான் இருக்கிறது.

மின் உற்பத்தித் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு இருப்பதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், நான்கு ஆண்டு காலமாக கடுமையான மின் தட்டுப்பாடு தமிழகத்தில் தொடர்ந்து இருந்து வருகிறது. இதன் காரணமாக தொழில் வளர்ச்சி, விவசாய உற்பத்தி ஆகியவை குறைந்து வேலையில்லாத் திண்டாட்டம் தலைவிரித்து ஆடுகிறது.

அழிவுப் பாதைக்கு..மரண வாயிலுக்கு:

தமிழ்நாட்டின் முக்கியப் பிரச்சனைகளான விலை வாசி உயர்வைக் கட்டுப்படுத்தவும், கடுமையான மின் தட்டுப்பாட்டை போக்கவும், வேலையில்லாத் திண்டாட்டத்தை போக்கவும் வழிகோலாமல் தமிழகத்தை அழிவுப் பாதைக்கு, தமிழக மக்களை மரண வாயிலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது இந்த நிதிநிலை அறிக்கை.

மொத்தத்தில் தமிழக அரசால் இன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது நிதிநிலை அறிக்கை அல்ல, “நிலைகுலை" அறிக்கை என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X