For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஹெட்லியை விசாரணைக்காக இந்தியா கொண்டு வரும் முயற்சிகள் தொடரும்- ப.சிதம்பரம்

By Staff
Google Oneindia Tamil News

P Chidambaram
டெல்லி: ஹெட்லியை நாடு கடத்திக் கொண்டு வரும் முயற்சிகளை இந்தியா தொடரும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்தியாவுக்கு வராமல் தப்பிக்க வழி தேடிக் கொண்டு விட்டான் ஹெட்லி. ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதால் அவனை இந்தியாவுக்கோ வேறு எந்த நாட்டுக்கோ அனுப்பி வைக்க அமெரிக்க கோர்ட் அனுமதிக்காத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ப.சிதம்பரம் செய்தியாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறுகையில்,

ஹெட்லியின் வாக்குமூலத்தைத் தொடர்ந்து எழுந்துள்ள சூழ்நிலையை இந்தியா ஆய்ந்து வருகிறது. ஹெட்லியிடம் விசாரணை நடத்த வேண்டியது அவசியமான ஒன்று. அவனது வாக்குமூலத்தை நாம் பதிவு செய்தாக வேண்டும்.

ஹெட்லி அளித்துள்ள வாக்குமூல நகலை நான் பார்த்தேன். மேலும், ஹெட்லியை இந்தியாவுக்கோ அல்லது டென்மார்க்குக்கோ அல்லது பாகிஸ்தானுக்கோ அனுப்ப மாட்டோம் என்றும் அமெரிக்க விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஹெட்லி மீதான புகார்கள் பல்வேறு நாடுகளுடன் தொடர்புடையவை. இந்தியாவில் மட்டும் ஹெட்லி தவறு செய்திருந்தால் நாடு கடத்திக் கொண்டு வருவது எளிதாக இருந்திருக்கும். ஆனால் அவன் இரு நாடுகளிலும் தவறு செய்துள்ளான். மும்பைத் தாக்குதல் சம்பவத்தில் ஆறு அமெரிக்கர்கள் உயிரிழந்ததை நாம் மறந்து விடக் கூடாது.

அவனை விசாரிக்க அமெரிக்காவுக்கும் உரிமை உள்ளது. அமெரிக்காவின் அவன் கைது செய்யப்பட்டதால், அவனை இங்கு கொண்டு வருவது எவ்வளவு கடினமானது என்பதை நான் அறிவேன். இருப்பினும் நமது முயற்சிகள் தொடரும்.

தற்போதைய சூழ்நிலையை வைத்துப் பார்க்கும்போது ஹெட்லிக்கு ஆயுள் தண்டனை விதிக்குமாறு அமெரிக்க அரசுத் தரப்பில் கோரப்படலாம். அமெரிக்காவைப் பொறுத்தவரை, ஆயுள் தண்டனை என்பது கடைசிக்காலம் வரை சிறையில் அனுபவிக்கும் தண்டனையாகும். இதுகுறித்து நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மும்பை தாக்குதல் சம்பவம் தொடர்பாக ஹெட்லியின் தொடர்புகள் குறித்து நமக்கு அமெரிக்காவிடமிருந்து போதிய தகவல்கள் கிடைத்து விட்டன.

ஆனால் நேரடியாக தொடர்பு கொண்டு விசாரிப்பது என்பது வேறு, தகவல்களைப் பெறுவது என்பது வேறாகும். நாம் அவனைத் தொடர்பு கொண்டு விசாரித்தால்தான் கூடுதல் தகவல்களைப் பெற முடியும்.

அமெரிக்க சட்ட விதிகளின்படி பார்த்தால், நாம் ஹெட்லியிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமோ அல்லது
கடிதம் மூலமோ விசாரணை நடத்த முடியும்.

அதேசமயம், நமக்குத் தேவையான பெரும்பாலான தகவல்களை ஹெட்லியிடமிருந்து அமெரிக்கா நம்மிடம் ஏற்கனவே கொடுத்துள்ளது. நாம் கேட்ட கேள்விகளில் பெரும்பாலானவற்றுக்குப் பதில் கிடைத்து விட்டது.

ஹெட்லியை விசாரிக்க நமக்கு அனுமதி கிடைத்தால் இங்கிருந்து ஒரு குழு அனுப்பபடும்.

தற்போதைய ஹெட்லியின் வாக்குமூலத்தால் மும்பை தாக்குதல் வழக்கில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது.

கசாப் தொடர்பான வழக்கின் விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி விட்டது. தீர்ப்பு வர வேண்டியுள்ளது.

ஹெட்லியையும், கசாப்பையும் சேர்த்து வைத்து நாம் குழப்பிக் கொள்ளத் தேவையில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

ஹெட்லி ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கப் போவது குறித்து அமெரிக்கா ஏற்கனவே இந்தியாவிடம் தெரிவித்திருந்தது என்றார் ப.சிதம்பரம்.

சிதம்பரத்துடன் பேசிய அமெரிக்க அட்டர்னி ஜெனரல்:

இந் நிலையில் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் எரிக் ஹோல்டர் சிதம்பரத்துடன் தொலை‌பேசியில் பேசினார். மும்பை தாக்குதலுக்கு சதி திட்டம் தீட்டியதை ஒப்புக் கொண்ட ஹெட்லி குறித்து இருவரும் ஆலோசித்ததாகத் தெரிகிறது

இன்று இங்கிலாந்து பயணம்:

இந் நிலையில் சிதம்பரம் இன்று 3 நாள் பயணமாக இங்கிலாந்து செல்கிறார்.

அந் நாட்டு உள்துறைச் செயலாளர் ஆலன் ஜான்சன், வெளிநாட்டுத்துறை செயலாளர் டேவிட் மிலிபான்ட், பிரதமரின் வெளிநாட்டு கொள்கை ஆலோசகர் சிமோன் மன்டொனால்ட் ஆகியோரை ப.சிதம்பரம் சந்தித்து தீவிரவாதததை ஒடுக்குவது குறித்து பேசவுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X