For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருப்பூரில் 60 ஆயிரம் பேரிடம் ரூ575 கோடி ஏமாற்றிய நிதி நிறுவனம்!

By Staff
Google Oneindia Tamil News

Rupee
கோவை: திருப்பூர் நிதி நிறுவனம் பாசி போரக்ஸ் ரூ 575 கோடியை வாடிக்கையாளர்களிடம் மோசடி செய்துள்ளது. இதில் பணம் செலுத்திய 60 ஆயிரம் பேர் ஏமாந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் அவினாசி ரோட்டில் இயங்கி வந்த, பாசி போரெக்ஸ் என்ற நிதி நிறுவனம் கவர்ச்சி திட்டத்தை அறிவித்து இருந்தது. ரூ.50 ஆயிரம் முதலீடு செய்தால் மாதம் ரூ.13 ஆயிரத்து 750 வீதம் 4 மாதங்கள் பணம் தரப்படும். 5-வது மாதம் முதலீடு செய்த ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.13 ஆயிரத்து 750 சேர்த்து தரப்படும். அதாவது 320 சதவீதம் அளவுக்கு வட்டிவிகிதம் வழங்குவதாக இந்த நிறுவனம் அறிவித்தது.

இந்த கவர்ச்சி திட்டத்தை நம்பி, ஏராளமானோர் பணம் செலுத்தினர். முதலில் அறிவித்தபடி பணம் வழங்கிய இந்த நிதிநிறுவனத்தினர், கோடிக்கணக்கில் பணம் வசூலானதும், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை வழங்காமல் இழுத்தடித்தனர். இதில் ஏமாற்றம் அடைந்த முதலீட்டாளர்கள் திருப்பூர் போலீசில் புகார் செய்தனர்.

இந்த நிறுவனத்தின் நிர்வாகிகள் கதிரவன், மோகன்ராஜ், கமலவள்ளி ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்கள் கைதாகாமல் இருக்க ஐகோர்ட்டு மூலம் முன்ஜாமீன் பெற்றனர்.

இந்த மோசடி வழக்கு கோவை பொருளாதார குற்றப்பிரிவுக்கு தற்போது மாற்றப்பட்டுள்ளது. கூடுதல் டி.ஜி.பி. திலகவதியின் உத்தரவின் பேரில், ஐ.ஜி. விஜயகுமார் மேற்பார்வையில் பாசி நிறுவன புகார்களை பெற்று பதிவு செய்து பணத்தை திருப்பி கொடுக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

60 ஆயிரம் பேர் ஏமாந்தனர்

கோவை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் உள்ள கோவை மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு மோதிலால் தலைமையில் போலீசார் புகார்களை பெற்று வருகிறார்கள்.

பொருளாதார குற்றப்பிரிவின் முதல்கட்ட விசாரணையில் பாசி நிறுவனத்தில் சுமார் 60 ஆயிரம் பேர் அளவுக்கு பணம் கட்டி ஏமாந்துள்ளது தெரியவந்துள்ளது.

தினந்தோறும் 50 பேருக்கும் மேல் புகார்கள் கொடுத்தபடி உள்ளனர். தற்போது திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் புகார் மனுக்கள் பெறப்படுவதாகவும், அந்தந்த மாவட்டங்களில் புகார் மனுக்கள் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்களிடம் புகார் மனுக்கள் பெற்று முடிந்ததும், கோவை, நீலகிரி மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் புகார் மனுக்கள் பெறப்படும் என்றும், 3 மாத காலத்திற்கு மேல் புகார்களை வாங்கும் பணி நடைபெறும் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கர்நாடகா, கேரளா வாடிக்கையாளர்களும்...

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் உள்பட, கர்நாடகம், கேரளா, ஆந்திரா, உத்தரபிரதேசம், பீகார், ஒரிசா, குஜராத், மராட்டியம், சத்தீஷ்கார் உள்பட 10 மாநிலங்களை சேர்ந்தவர்களும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். வெளிமாநிலங்களில் இருந்து 600 பேர் புகார் செய்ய முன்வந்துள்ளனர்.

போலீசார் கணக்கிட்டுள்ளபடி இந்த நிறுவனம் ரூ.575 கோடி வரையில் வசூல் செய்து மோசடி செய்து இருக்கலாம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. முழுக்க, முழுக்க இணையதளத்தை பார்த்து பணம் கட்டி ஏமாந்தவர்கள் ஏராளமாக உள்ளனர். விரைவில் பணத்தை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற ஆசையில் ஏராளமானவர்கள் பணம் செலுத்தி ஏமாந்துள்ளனர்.

முதலீட்டாளர்களின் பணம் திரும்ப கிடைக்க குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கும் மேலாகுமாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X