For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அதிமுகவுக்கு வரலாறு காணாத தோல்வி- டெபாசிட் இழந்தது: தொண்டர் தீக்குளிப்பு

By Staff
Google Oneindia Tamil News

Anbalagan
பென்னாகரம்: பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட்டை இழந்து 3வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருப்பது அக்கட்சியினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதைத் தாங்கிக் கொள்ள முடியாமல் ஈரோடு அருகே அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்து விட்டார்.

பென்னாகரம் தொகுதிக்கு நடந்த தேர்தலில் அதிமுக 26,787 வாக்குகள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்துள்ளது. பாமகவை விட இந்தக் கட்சி 14,498 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதிமுக தொண்டர் தீக்குளிப்பு:

பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக டெபாசிட்டை இழந்ததோடு, பாமகவை விட பின்னுக்குத் தள்ளப்பட்டதால் அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர் ஒருவர் தீக்குளித்துள்ளார்.

ஈரோடு மாவட்டம் 18வது வார்டு அ.தி.மு.க. செயற்குழு உறுப்பினர் தங்கவேலு (45). தேர்தலில் அ.தி.மு.க., தோல்வியடைந்துள்ளது தெரிந்தவுடன் தீக்குளிக்க முயன்றார். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.


தொடரும் தோல்விகள்:

கடந்த 2001ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்குப் பின் வரிசையாக எல்லா தேர்தல்களிலும் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக படுதோல்வி அடைந்து வருகிறது.

அடுத்த துணைப் பிரதமர் என்றெல்லாம் வட இந்திய மீடியாவால் பில்ட்-அப் கொடுக்கப்பட்ட ஜெயலலிதா கட்சியின் சரிவை நிறுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருப்பதே நிஜம்.

தேர்தலில் தோற்றாலும் வென்றாலும் மக்களுடன் கலந்து வாழ வேண்டியவர்கள் அரசியல்வாதிகள். ஆனால், அதிகாரம்-ஆட்சியில் இருப்பது மட்டுமே அரசியல் என்று நினைத்துவிட்டார் ஜெயலலிதா.

கொடநாட்டில் போய் ரெஸ்ட் எடுத்துக் கொண்டு கொடுங்கையூரில் 4வது தெருவில் தண்ணீர் வரவில்லை என்று ஒரு போராட்டம், கோரிப்பாளையத்தில் ரோட்டில் பள்ளம் இருக்கிறது என்று ஒரு போராட்டம் என்று தினந்தோறும் ஏதாவது அறிக்கை மட்டும் வெளியிட்டுவிட்டால் தனது வேலை முடிநதுவிட்டது என்று நினைத்துவிட்டார்.

அவர் அறிவித்த போராட்டங்களையாவது அதிமுகவினர் சரியாக கடைபிடித்தார்களா என்றால் அதுவும் இல்லை. டிவி, பத்திரிக்கை கேமராக்கள் படம் எடுக்கும் வரை கோஷம் போட்டுவிட்டு அப்படியே கலைந்து போவது தான் போராட்டம் என்று நடத்தினார்கள்.

இவ்வாறு தன்னைத்தானே கேலிக்கூத்தாக்கிக் கொண்டுவிட்டது அதிமுக. அது தான் இந்த தேர்தல் முடிவில் எதிரொலித்துள்ளது.

2004ம் ஆண்டுக்குப் பின் 2 மக்களவைத் தேர்தல்கள், ஒரு சட்டமன்றத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், உள்ளாட்சி இடைத் தேர்தல்கள், 11 இடைத் தேர்தல்களில் அடுத்தடுத்து தோற்றுள்ளது அதிமுக.

ஆனால் அந்த தோல்விகளில் எல்லாம் ஏற்படாத மாபெரும் பின்னடைவை பென்னாகரத்தில் சந்தித்துள்ளது ஜெயலலிதாவின் அதிமுக. இங்கு டெபாசிட்டை பறி கொடுத்துள்ளார் அதிமுக வேட்பாளர் அன்பழகன். அத்தோடு 3வது இடத்துக்கும் அதிமுக தள்ளப்பட்டு விட்டது.

தமிழகத்தின் ஆளும் கட்சியாக இருந்த ஒரு கட்சி, சட்டசபையில் பிரதான எதிர்க் கட்சி, டெபாசிட்டை இழந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியான விஷயம் தான்.

''இது வன்னியர்கள் பெல்ட்.. அங்கு பாமக தானே அதிக ஓட்டு வாங்க முடியும்'' என்று சில ஜெயலலிதா ஆதரவு 'அதி புத்திசாலி' பத்திரிக்கையாளர் போன்றவர்கள் நொண்டி சமாதானம் சொல்லலாம்.

அதிமுக ஒன்றும் வன்னியர் அல்லாத ஒருவரை அங்கு வேட்பாளரை நிறுத்தவில்லை என்பதும், மாநிலத்தின் பிரதான கட்சி என்பது ஜாதிகளைக் கடந்து வெல்ல வேண்டும் என்பதும் தான் அரசியல் கட்டாயம். அதை அதிமுகவால் செய்ய முடியாவில்லை, அதை விடக் கொடுமையாக டெபாசிட்டைக் கூட பெற முடியாமல் போனது என்பதை ஜெயலலிதாவின் தனிப்பட்ட தோல்வியாகவே கருத முடியும்.

முன்பு திமுகவிடம் போய்விடக் கூடாது என்பதற்காக பாமகவுக்கு ஏராளமான சீட்களை அள்ளித் தந்ததும் ஜெயலலிதா தான் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது அவரது 'அரசியலே' அவருக்கு எதிராய் திரும்பியிருக்கிறது.

அதே போல பணம் கொடுத்து ஓட்டு வாங்கினார்கள் என்ற குற்றச்சாட்டைச் சொல்லி தப்பவும் அதிமுகவால் முடியாது. இந்தத் தேர்தலில் பணம் தராத கட்சியே இல்லை என்பது தான் உண்மை. மேலும் பணம் கொடுத்து ஓட்டு வாங்கும் கலாச்சாரத்தை ஆரம்பித்து வைத்ததும் அதிமுக தான் என்பது தான் சோகமான உண்மை.

அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் வரும் நிலையில் அதிமுகவுக்கு உடனடித் தேவை 'சுய பரிசோதனை'.

இல்லாவிட்டால் வரும் தேர்தல்களில் டெபாசிட்டையாவது பெற்று விட வேண்டும் என்ற அவலமான நிலைக்கு அதிமுக மாறி விடும் சூழல் ஏற்படலாம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X