For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மின்நிலைமையை விட பணப் பரிமாற்றத்தில் தெளிவாக இருக்கிறார் ஆற்காடு வீராசாமி- ஜெ.

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தின் மின் நிலைமை குறித்து தெளிவற்ற நிலையில் இருக்கும் ஆற்காடு வீராசாமி, அவருடைய துறையின் மூலம் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தெளிவாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை என்று கூறியுள்ளார் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:

விஷம்போல் ஏறிக் கொண்டிருக்கும் விலைவாசியை அடுத்து தமிழக மக்கள் எதிர்கொண்டிருக்கும் மிகப்பெரிய பிரச்சினை மின்வெட்டு. சென்னையை தவிர தமிழ்நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரமும், கிராமமும் தினந்தோறும் 6 முதல் 8 மணி நேர மின்வெட்டிற்கு ஆட்படுத்தப்பட்டுள்ளது.

சில பகுதிகள் தினந்தோறும் 20 மணி நேரத்திற்கு மின் சாரமே இல்லாமல் இருக்கின்றன. இவற்றில் இரண்டு மணி நேரம் மட்டுமே அறிவிக்கப்பட்ட மின்வெட்டு. மீதமுள்ளவை நியாயமற்ற, தன்னிச்சையான அறிவிக்கப்படாத மின்வெட்டு.

இதன் விளைவாக தொழிற்சாலைகள் செயல்பட முடியவில்லை. வேளாண்மைத் தொழில் ஸ்தம்பித்து விட்டது. தேர்வு சமயத்தில் மாணவ- மாணவிகள் படிக்க முடியவில்லை.

நிலைமை இவ்வாறிருக்க இவை அனைத்தையும் அறிந்த மாநில மின்சாரத்துறை அமைச்சர் மற்றும் மாநில அதிகாரிகள் முன்னுக்குப்பின் முரணான அறிக்கைகளை வெளியிடுவதை பார்க்கும் போது மின்வெட்டு பிரச்சினையை தீர்க்கவோ அல்லது மின் உற்பத்தியை பெருக்கவோ தேவையான ஒருமுகப்படுத்தப்பட்ட முயற்சி எதுவும் எடுக்கப்படவில்லை என்பது தெளிவாகிறது.

தமிழகத்தின் மின்நிலைமை 2009ம் ஆண்டு மே மாதம் மேம்பட்டு விடும் என்று சென்ற ஆண்டு ஏப்ரல் மாதம் மின்சாரத்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தெரிவித்தார்.

ஏப்ரல் மாதத்தில் மக்களை ஏப்ரல் முட்டாளாக்கி பரிகாசம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இது போன்று தெரிவித்திருப்பார் போலும்.

சென்னையைத் தவிர மாநிலம் முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் இரண்டு மணி நேர மின்வெட்டு மே மாதம் வரையில் தொடரும் என்று இந்த ஆண்டு மார்ச் மாதம் 18-ந்தேதி அறிவித்தார்.

இதற்கு ஒரு வாரம் கழித்து தமிழ்நாட்டின் மின் நிலைமை 2011 வரை சீராகாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அறிவிக்கிறார். இதற்கு நான்கு நாட்களுக்குப் பிறகு, இரண்டு மணி நேரமாக இருந்த மின்வெட்டு 3 மணி நேரமாக அதிகரிக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகிறது.

இந்த அளவுக்கு தன்னுடைய துறையைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார் மின்சாரத்துறை அமைச்சர்.

இருப்பினும் தமிழகத்தின் மின் நிலைமை குறித்து தெளிவற்ற நிலையில் இருக்கும் ஆற்காடு வீராசாமி, அவருடைய துறையின் மூலம் நடைபெறும் சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் தெளிவாக இருக்கிறார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

நம்பகமான இடத்திலிருந்து கிடைத்த தகவலின்படி, ஆறு மில்லியன் டன் அளவுக்கும் மேலான குறைந்த வெப்பத்திறன் கொண்ட நிலக்கரி, ஒரு டன் 120 அமெரிக்க டாலர் என்ற வீதத்தில் இந்தோனேசியாவிலிருந்து தமிழ்நாடு மின்சார வாரியத்தால் ஆண்டு தோறும் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தோனேசியாவில் கப்பலில் ஏற்றப்படும் போது ஒரு டன் உயர் வெப்பத்திறன் கொண்ட நிலக்கரியின் விலை 65 அமெரிக்க டாலர்.

கப்பல் மற்றும் சரக்குக் கட்டணமாக 20 அமெரிக்க டாலரைச் சேர்த்தால், இந்தோனேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஒரு டன் உயர் வெப்பத் திறன் கொண்ட நிலக்கரியின் விலை 85 அமெரிக்க டாலர். தெற்கு ஆப்பிரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியின் விலை இதைவிட குறைவு.

உயர் வெப்பத்திறன் கொண்ட நிலக்கரியை விட 35 டாலர் அதிக விலை கொடுத்து, குறைந்த வெப்பத்திறன் கொண்ட நிலக்கரியை ஏற்கனவே நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் தமிழ்நாடு மின்சார வாரியம் வாங்குவதன் மூலம் மேலும் பெருத்த இழப்பிற்கு ஆளாக் கப்பட்டுள்ளது.

இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு டன்னுக்கு ரூ. 1,575 இழப்பு ஏற்படுகிறது. ஆறு மில்லியன் டன்னுக்கும் மேலாக எண்ணூர் மற்றும் தூத்துக்குடி அனல் மின் நிலையங்களுக்கு ஆண்டு தோறும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

மிகப்பெரிய தொகையை கொடுத்து ஆண்டு தோறும் நிலக்கரியை கூடுதல் விலைக்கு தமிழ்நாடு மின்சார வாரியம் இறக்குமதி செய்வதன் மூலம் ஏற்படு கின்ற இழப்பு ஆயிரம் கோடி ரூபாய். எனவே தான் தமிழ்நாடு மின்சார வாரியம் பெருத்த நஷ்டத்தில் இயங்கிக் கொண்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மாநில அரசின் கருவூலத்திலிருந்து இந்தோனேசியாவில் உள்ள நிலக்கரி சுரங்கங்களுக்கு அபரிமிதமாக நிதி செல்ல ஆற்காடு வீராசாமி ஏன் அனுமதி அளித்தார்?

இன்று நுகர்வோருக்கான மின்சார கட்டணத்தை உயர்த்த தமிழ்நாடு மின்சார வாரியம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே விண்ணை முட்டும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திக்குமுக்காடி பாதிப்புக்குள்ளாகியுள்ள நிலையில் குறைந்த நேரமே வரும் மின்சாரத்திற்கு அதிக கட்டணத்தை மக்கள் செலுத்த வேண்டும். இதுதான் தமிழக மக்களின் கண்ணீர் காவியம் என்று கூறியுள்ளார் ஜெயல்லிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X