For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேச்சுவார்த்தைக்ககு வாருங்கள் – நக்சல்களுக்கு ப.சிதம்பரம் அழைப்பு

By Staff
Google Oneindia Tamil News

Chidambaram
கொல்கத்தா: மாவோயிஸ்ட் நக்சலைட்கள் வன்முறையைக் கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மேலும், நக்சலைட்களை ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட மாட்டாது என்றும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் உள்ள லால்கர், மாவோயிஸ்ட் நக்சலைட்களின் ஆதிக்கம் மிகுந்த பகுதியாக இருந்து வருகிறது. இங்கு முற்றுகையிட்டிருந்த நக்சலைட்களை ஒழிக்கும் நடவடிக்கை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கியது. பாதுகாப்புப் படையினர் கடுமையாகப் போராடி இப்பகுதியிலிருந்து நக்சலைட்களை ஒடுக்கியுள்ளனர். இப்பகுதிகளைச் சுற்றிலும் நக்சலைட் ஒழிப்பு நடவடிக்கைகளில் பாதுகாப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், அதிக பதட்டம் நிறைந்த லால்கருக்கு இன்று காலை விஜயம் செய்தார் ப.சிதம்பரம். லால்கருக்கு வரும் முதல் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹெலிகாப்டர் மூலம் வருகை தந்த ப.சிதம்பரத்துடன், மேற்கு வங்க மாநில உள்துறை செயலாளர் அரதெந்து சென், டிஜிபி பூபிந்தர் சிங் ஆகியோரும் உடன் வந்திருந்தனர். காலை 8 மணிக்கு லால்கர் போலீஸ் நிலையத்திற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேடில் ஹெலிகாப்டர் வந்து இறங்கியது.

மிக மிக பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வந்து சேர்ந்த ப.சிதம்பரத்தை வரவேற்ற மாவட்ட ஆட்சித் தலைவர் நிகாம், எஸ்.பி. மனோஜ் வர்மா, சிஆர்பிஎப் அதிகாரிகள் அவரை அழைத்துச் சென்றனர்.

பின்னர் லால்கர் காவல் நிலையத்திற்குச் சென்ற ப.சிதம்பரம், நக்சல் ஒழிப்பு வேட்டை குறித்து ஆய்வு நடத்தினார். ஆலோசனைகளை மேற்கொண்டார்.

ஆய்வுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் ப.சிதம்பரம். அப்போது அவர் கூறுகையில், காடுகளில் மறைந்து இருந்து தாக்கி வரும் நக்சலைட்கள் கோழைகள் ஆவர். அவர்கள் ஏன் காடுகளில் ஒளிந்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வன்முறையை கைவிட்டுவிட்டு பேச்சு வார்த்தைக்கு வரவேண்டும் என்று அவர்களுக்கு ஏற்கனவே அழைப்பு விடுத்துள்ளோம்.

உண்மையிலேயே அவர்கள் முன்னேற்றத்தை விரும்பினால், மக்கள் பிரச்சனைகளுக்கு உண்மையிலேயே அவர்கள் தீர்வு காண நினைத்தால் அவர்களை பேச்சுவார்த்தைக்கு வரவேற்கிறோம்.அவர்கள் வன்முறையை கைவிட்டால் எது பற்றியும் பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று நான் கூறி இருக்கிறேன்.

நக்சலைட்டுகளுக்கு எதிராக ராணுவத்தை ஈடுபடுத்த மாட்டோம். மாநில போலீசார், மாநில ஆயுத படை போலீசார் மற்றும் துணை ராணுவ படையினர் மட்டுமே நக்சலைட்டுகளுக்கு எதிராக போராடுவார்கள்.

நக்சலைட்டுகளுடைய பிரச்சனை நியாயமானது என்றால் அவர்களுக்கும் மாநில அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்த உதவத் தயார். நக்சலைட்டுகளுக்கு கிராம மக்கள் எந்த வகையான ஆதரவும் அளிக்கக் கூடாது.

முன்னேற்றம் இல்லாததால் கிராம மக்கள் கோபப்படுவதற்கு நியாயமான காரணங்கள் உண்டு. அதே சமயம் நக்சலைட்டுகள் மக்களை கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நக்சலைட்டுகள் மீண்டும் மீண்டும் ஒன்றுகூடி தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக உளவுத் துறை தகவல்கள் தெரிவிக்கிறது. எனவே அவர்களுக்கு எதிரான போரில் தொடர்ந்து விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார் சிதம்பரம்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X