For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

மின் தட்டுப்பாட்டை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது - துரைமுருகன்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் நிலவி வரும் மின் தட்டுப்பாட்டை சீரமைக்கத் தேவையான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது என்று சட்டசபையில் இன்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழக சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சிகள் தமிழகத்தில் மின்வெட்டு நிலவுவதாக கூறி அது குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தைக் கொண்டு வந்தன. பின்னர் அதிமுக, பாமக, சிபிஐ, சிபிஎம், மதிமுக உறுப்பினர்கள் இதன் மீது பேசினர்.

இதற்குப் பதிலளித்து சட்டத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசுகையில்,

உறுப்பினர்களின் கவலைகளை இந்த அரசு புறக்கணிக்கவில்லை. மின்வெட்டு இருப்பதை மறைக்கவும் இல்லை. இது தமிழகத்தில் மட்டும் இருக்கும் பிரச்சனையல்ல. இந்தியா முழுவதும் உள்ள நிலைதான்.

மின்சாரம் தயாரிக்க அனல், புனல், எரிவாயு, காற்றலை ஆகியவற்றை நம்பியிருக்கிறோம். மழை இருந்தால்தான் புனல் மின்சாரம் கிடைக்கும். காற்று அடித்தால்தான் காற்றலை மூலம் மின்சாரம் எடுக்க முடியும். நிலக்கரி மூலம் அனல் மின்சாரம் தயாரிக்கப் படுகிறது. இதற்கு மத்திய அரசிடமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் நிலக்கரி இறக்குமதி செய்யப்படுகிறது.

தமிழகத்தின் மின்சார தேவை 11 ஆயிரம் மெகாவாட் ஆகும். ஆனால் உற்பத்தி திறனோ 7300 மெகாவாட் தான். பற்றாக்குறை 3700 மெகாவாட் ஆகும். இதனை சமாளிக்க மின்சார வணிகர்கள் மூலமும் மத்திய அரசு தொகுப்பிலிருந்தும் மின்சாரத்தை பெற்று வருகிறோம். ஆனால் அதுவும் போதவில்லை.

தொடர்ந்து அதிக மின்சாரத்தை பெற முயற்சி மேற்கொண்டு இருக்கிறோம். ஏதோ தமிழ்நாட்டில்தான் மின்வெட்டு இருக்கிறது என்பதைப் போல உறுப்பினர்கள் பேசினார். இது எல்லா மாநிலத்திலும் உள்ளதுதான்.பெருநகரங்களை பொருத்தவரை ஐதராபாத் தினசரி 2 மணி நேரம் மின்வெட்டு உள்ளது. பெங்களூரில் 1 மணி நேரம் மின்வெட்டு இருக்கிறது. ஆனால் சென்னையிலோ 24 மணி நேரமும் மின்சாரம் உள்ளது. கிராமப்புற பகுதிகளை பொறுத்தவரை ஆந்திராவில் 4 மணி நேரமும் கர்நாடகத்தில் 6 மணி நேரமும் மின்வெட்டு உள்ளதுது.

தமிழ்நாட்டில் 3 மணி நேரம் சுழற்சி முறையில் மின்தடை உள்ளது. விவசாயத்தை பொறுத்தவரை ஆந்திராவில் 7 மணி நேரம் மின்சாரம் வழங்குகிறார்கள். கர்நாடகத்தில் 6 மணி நேரம்தான் மின்சாரம் கொடுக்கப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் பகலில் 6 மணி நேரமும் இரவில் 3 மணி நேரமுமாக 9 மணி நேரம் மின்சாரம் வழங்கப்படுகிறது. இதேபோல தொழிற்சாலைகளுக்கும் தமிழகத்தில் அதிக மின்சாரம் வழங்கப்படுகிறது.

மின்சார வெட்டு என்பது பருவநிலையை பொறுத்து. கோடைக்காலம் வந்தால் மின்சார பயன்பாடு அதிகரித்து பற்றாக்குறை ஏற்படும். அதிமுக ஆட்சிக்காலத்திலும் மின்வெட்டு இருந்தது. 3.10.1982 முதல் 20.7.1984 வரையிலும் 1.2.1985 முதல் 1.7.1990 வரையிலும் பின்னர் 1991லும் மின்தட்டுப்பாடு இருந்தது

மின்சார பற்றாக்குறையை சமாளிக்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து ஏதுமில்லை. இந்த பற்றாக்குறையை சமாளிக்க எல்லாவித முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. நீர் மின்சாரத்துக்கு நாம் பருவமழையை நம்பிதான இருக்க வேண்டி இருக்கிறது.

மேலும் மத்திய தொகுப்பிலிருந்தும் கூடுதல் மின்சாரத்தை பெற்றும் அனல் மின்சார உற்பத்தியை அதிகரித்தும் மின் பற்றாக்குறையை போக்க வேகமான முயற்சிகளை அரசு எடுத்து வருகிறது. எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு மின்சார பற்றாக்குறையை சமாளிக்க அரசு எல்லாவிதமான நடவடிக்கைளயும் எடுக்கும் என்றார்.

ஆனால் துரைமுருகன் பதிலில் திருப்தி இல்லை என்று தெரிவித்து அதிமுக உள்ளிட்ட கட்சிகளின் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X