• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

சட்டிஸ்கர் தாக்குதலை திட்டமிட்டு நடத்தியவர் ஆந்திர நக்சல் தலைவர் சுதர்ஷன்

By Staff
|

Maoist
ராய்ப்பூர்: சட்டிஸ்கர் மாநிலம் தான்டேவாடா பகுதியில் நடந்த பயங்கர நக்சலைட் தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கதகம் சுதர்ஷன் என்ற நக்சலைட் தான் என்று தெரிய வந்துள்ளது.

சட்டீஸ்கர் மாநிலம் தான்டேவாடா வனப்பகுதியில் நேற்று நக்சலைட்டுகள் நடத்திய கோரத் தாக்குதலில் சிஆர்பிஎப்பைச் சேர்ந்த 75 வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் மிகப் பெரிய சதித்திட்டத்தைக் கொண்டது என்று தெரிய வந்துள்ளது.

நக்சலைட் தாக்குதலில் உயிரிழந்த ஜவான்கள், தான்டேவாடா வனப்பகுதியில், 72 மணி நேர தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்தனர். பிறகு அப்பணியை முடித்து விட்ட அவர்கள் திரும்பிக் கொண்டிருந்தபோதுத்தான் நக்சலைட்டுகளிடம் சிக்கிக் கொண்டனர்.

சிஆர்பிஎப் ஜவான்கள் மலைப் பகுதி ஒன்றில் வந்து கொண்டிருந்தபோது அந்தப் பகுதியை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நக்சலைட்டுகள் சுற்றி வளைத்துக் கொண்டனர். அது மலைப் பகுதி என்பதால் ஜவான்களால் தப்பிப் போக முடியவில்லை.

மலைக் குன்றின் உச்சியிலிருந்து நாலாபக்கமும் சரமாரியாக துப்பாக்கிகளால் சுட ஆரம்பித்தனர் நக்சலைட்டுகள். இதனால் எந்தப் பக்கம் ஓடினாலும் நக்சலைட்டுகளின் துப்பாக்கிக் குண்டுக்குத் தப்ப முடியாத நிலையில் சிக்கிக் கொண்டனர் ஜவான்கள்.

துப்பாக்கிச் சூடு மட்டுமல்லாமல் கண்ணிவெடித் தாக்குதலையும், கையெறி குண்டுகளை வீசித் தாக்குதலையும் மேற்கொண்டனர் நக்சலைட்டுகள்.

ஜவான்கள் தப்பிச் செல்ல முயன்றால் கண்ணிவெடிகளை வைத்துத் தீர்த்துக் கட்ட நக்சலைட்டுகள் ஏற்பாடு செய்திருந்ததால் ஜவான்களால் எதுவுமே செய்ய முடியாமல் போய் விட்டது.

இதுவரை நடந்த நக்சலைட் தாக்குதலிலேயே மிக மோசமானது இது என்று கருதப்படுகிறது.

ஆந்திர நக்சல் தலைவரே காரணம்

இந்த பயங்கரத் தாக்குதலை தலைமையேற்று நடத்தியவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த கதகம் சுதர்ஷன் என்ற நக்சலைட் தான் என்று தெரிய வந்துள்ளது.

சுதர்சனுக்கு ஆனந்த், மோகன், பிரேந்தர்ஜி என்று பல பெயர்கள் உள்ளன. கிஷன்ஜியைப் போலவே இவரும் ஒரு மூத்த மாவோயிஸ்ட் தலைவர் ஆவார்.

இவரது தலைக்கு பாதுகாப்புப் படையினர் ரூ. 12 லட்சம் விலை வைத்துள்ளனர். தற்போது நக்சலைட்டுகளுக்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டுள்ள கிரீன்ஹன்ட் நடவடிக்கையை சீர்குலைத்து சின்னாபின்னமாக்கும் பொறுப்பு இவரிடம்தான் ஒப்படைக்கப்பட்டுள்ளதாம்.

சுதர்சனுக்கு 53 வயதாகிறது. திடகாத்திரமான உடல் வாகு கொண்ட இவர் முகத்தில் தீக்காயத்துடன், கண்ணாடி அணிந்து, அடர்ந்த தலைமுடியுடன் காணப்படுவார்.

கடந்த 30 வருடங்களாக இவர் நக்சலைட் இயக்கத்தில் இருந்து வருகிறார். திட்டமிடலில் மிகச் சிறப்பானவராம்.

ஆந்திர மாநிலம், அடிலாபாத் மாவட்டம், பெல்லம்பள்ளி கிராமத்தில், நெசவாளர் குடும்பத்தில் பிறந்தவர் சுதர்ஷன். வாரங்கல்லில் பாலிடெக்னிக் படிப்பை முடித்தார். மாணவர் தலைவராக இருந்தவர். பின்னர் நக்சலைட் இயக்கத்தில் இணைந்தார். ஆந்திராவில் சுதர்ஷன் மீது 17 வழக்குகள் உள்ளன. இவற்றில் கொலை வழக்குகளும் அடக்கம்.

இவரது மனைவி சாதனாவும் ஒரு நக்சல் தலைவராக இருந்தவர்தான். சில ஆண்டுகளுக்கு முன்பு நடந்த தாக்குதலில் இவர் கொல்லப்பட்டு விட்டார்.

சுதர்சன், மாவோயிஸ்ட் நக்சலைட் இயக்கத்திலேயே மிகவும் சக்தி வாய்ந்த தலைவர்களில் ஒருவர். இவரிடம், ஆந்திரா- ஒரிசா எல்லைப் பகுதி, வடக்கு தெலுங்கானா பிராந்தியம், சட்டிஸ்கர் ஆகியவை ஒப்படைக்கப்பட்டுள்ளன. மாவோயிஸ்டுகளின் மக்கள் கொரில்லாப் படையின் கமாண்டராகவும் இருக்கிறார்.

தான்டேவாடா தாக்குதலைத் திட்டமிட்டு நடத்தியவர் சுதர்ஷன்தான் என்று திட்டவட்டமாக நம்ப்பப்படுகிறது. ஆனால் தாக்குதல் நடந்த சமயத்தில் சுதர்ஷனும் அங்கு இருந்தாரா என்பது உறுதியாகத் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X