For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பென்னாகரம் பார்முலா அடிப்படையில் 70 தொகுதிகளுக்கு பாமக குறி

By Staff
Google Oneindia Tamil News

Anbumani
சென்னை: பென்னாகரத்தில் திட்டமிட்டு செயல்படுத்திய உத்திகள் வெற்றி பெற்றிருப்பதால் வருகிற சட்டசபை பொதுத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டும் வகையில் 70 சட்டசபைத் தொகுதிகளைத் தேர்வு செய்து அங்கு பென்னாகரம் பார்முலாவை அமல்படுத்தப் போகிறதாம் பாமக.

வீழ்ந்து போயிருந்த பாமகவை தூக்கி நிறுத்த பெருமளவில் உதவியிருக்கிறது பென்னாகரம் தொகுதி இடைத் தேர்தல். அதிமுகவை பின்னுக்குத் தள்ளி 2வது இடத்தைப் பிடித்ததோடு, வன்னியர் வாக்கு வங்கியை முழுமையாக நாங்கள் இழக்கவில்லை என்பதையும் பாமக நிரூபித்துள்ளது.

தோல்வியிலும் இது வெற்றியாகவே பாமக தரப்பில் கருதப்படுகிறது. இதையடுத்து பென்னாகரம் பார்முலாவை தனது ஆதரவு பலம் அதிகம் உள்ள தொகுதிகளில் அமல்படுத்த பாமக திட்டமிட்டுள்ளதாம்.

இதற்காக தமிழகம் முழுவதும் 70 தொகுதிகளை பாமக தேர்வு செய்துள்ளது. அந்த லிஸ்ட்டை ஏ மற்றும் பி என இரு பிரிவாக பிரித்து தயாரித்துள்ளது.

பாமக வலுவாக, அதிக ஆதரவு கொண்ட வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை ஏ பட்டியலிலும், ஓரளவு வாக்கு வங்கியுடன் கூடிய தொகுதிகளை பி பிரிவிலும் சேர்த்துள்ளனர்.

ஏ பிரிவில் 40 தொகுதிகளும், பி பிரிவில் 30 தொகுதிகளும் உள்ளனவாம். தேர்ந்தெடுத்துள்ள 70 தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்துவதோடு, வாக்கு வங்கியையும் உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள் விரைவில் தொடங்கவுள்ளதாம்.

இந்த 70 தொகுதிகளில் பாதிக்குப் பாதி நிச்சயம் நமக்கு வெற்றி தேடித் தரும் என்ற நம்பிக்கையுடன் உள்ளதாம் பாமக.

இது போக பென்னாகரம் இடைத் தேர்தலில் பாமகவின் செயல்பாட்டால் முக்கிய திராவிடக் கட்சிகளான திமுகவும், அதிமுகவும் அதிர்ச்சி அடைந்திருப்பதோடு சமாதானமாகப் போக தூது விட ஆரம்பித்திருப்பதாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் மகனும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

எல்லாப் பக்கத்திலிருந்தும் எங்களுக்குத் தூது விடுகிறார்கள். ஆனால் எங்களது கவனம் முழுவதும் வருகிற பொதுத் தேர்தலில் மிகப் பெரிய வெற்றியைப் பெறுவது மட்டுமே. ராஜ்யசபா தேர்தலைப் பற்றிக் கூட நாங்கள் கவலைப்படவில்லை.

70 தொகுதிகளைத் தேர்வு செய்துள்ளோம். அங்கு எங்களது நிலையைப் பலப்படுத்திக் கொள்ளும் முயற்சிகளைத் தொடரப் போகிறோம் என்றார் அன்புமணி.

பாமகவுக்குத்தான் உண்மையான வெற்றி:

இதற்கிடையே, பென்னாகரம் தொகுதி வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக அன்புமணி ராமதாஸ் அங்கு வந்துள்ளார். அவருடன் பாமக தலைவர் ஜி.கே.மணி, வேட்பாளர் தமிழக்குமரன் ஆகியோரும் வந்துள்ளனர்.

13 ஊர்களுக்கு நேரில் போய் இவர்கள் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கவுள்ளனர். சாமிசெட்டிப்பட்டியிலிருந்து நன்றி தெரிவிக்கும் பிரசாரத்தை இவர்கள் தொடங்கினர்.

சாமிசட்டிபட்டியில் இருந்து இவர்கள் நன்றி அறிவிக்கும் பிரச்சாரத்தை துவங்கினர்.

அங்கு அன்புமணி பேசுகையில், திமுக ரூ. 100 கோடி செலவு செய்து 77,669 வாக்குகள் வாங்கியிருக்கிறது. ஆனால் நாம் ஒரு பைசா கூட செலவு செய்யாமல் 41,285 வாக்குகள் வாங்கியிருக்கிறோம்.

23 ஆண்டுகள் ஆட்சி செய்த அதிமுக டெபாசிட்டையே இழந்துள்ளது.

இதனால் நமக்குத்தான் உண்மையான வெற்றி. இதை உலகமே சொல்கிறது. உலகின் பல நாடுகளில் இருந்தும் இதை தெரிவிக்கிறார்கள். டெல்லியிலும் பாமகவுக்குத்தான் உண்மையான வெற்றி எல்லோரும் சொல்கிறார்கள்.

வாக்களித்த அனைவருக்கும் நன்றி. வன்னிய மக்களுக்கு மட்டுமல்லாமல், அனைத்து சமுதாயத்தினருக்கும் பாமக தொடர்ந்து குரல் கொடுக்கும் என்றார்.

இன்று இரவு பென்னாகரத்தில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதை முடித்துக் கொண்டு பாப்பாரப்பட்டியிலும் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது. அதிலும் அன்புமணி பேசுகிறார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X