For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ரூ.50 லட்சம் ஹவாலா பணத்துக்காக நடந்த அசோக் நகர் 3 கொலைகள்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை அசோக்நகரில் நடந்த 3 பேர் கொலை வழக்கில் ஹவாலா கும்பலை சேர்ந்த கணவன்-மனைவி உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 20ம் தேதி அசோக் நகரில் சரவணன் (74), அவரது மனைவி கஸ்தூரி (70), வேலைக்காரப் பெண் அன்பரசி (18) ஆகியோர் கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர்.

சரவணன் தமிழ்நாடு கனிம வளத்துறை மேலாண்மை நிறுவன நிர்வாக இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி கஸ்தூரியும் தலைமைச் செயலகததில் உள்துறையில் இணைச் செயலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் சில ஆண்டுகளுக்கு முன் கண்பார்வை இழந்துவிட்டார்.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களது வீட்டில் அன்பரசி தங்கிருந்து பணியாற்றி வந்தார்.

சம்பவத்தன்று இரவில் இந்த மூவரும் அரிவாளால் கொடூரமாக வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுக் கிடந்தனர். வீட்டில் இருந்த நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் 2 கமிஷனர்கள், 3 இணை கமிஷனர்கள், 4 துணை கமிஷனர்கள் தலைமையில் விசாரணை நடைபெற்றாலும் எந்த துப்புவும் கிடைக்கவில்லை. தனிப் படைகளை சுமார் ஆயிரம் பேரிடம் விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இதனால் இந்த வழக்கு போலீசாருக்கு பெரும் சவாலாக இருந்து வந்தது.

இந் நிலையில், இந்த வழக்கை 4 வார காலத்திற்குள் துப்பு துலக்கமுடியாவிட்டால், அதை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் சென்னை போலீசாருக்கு கெடு விதித்தது.

இதையடுத்து கமிஷனர் ராஜேந்திரனே நேரடியாக களத்தில் இறங்கினார். கூடுதல் கமிஷனர் ஷகில் அக்தர், இணை கமிஷனர் சக்திவேலு, துணை கமிஷனர் சண்முகவேலு ஆகியோர் மேற்பார்வையில் உதவி கமிஷனர் பரந்தாமன் மற்றும் இன்ஸ்பெக்டர்கள் செல்வமணி, சார்லஸ், சிவராம்குமார் மற்றும் போலீசார் அடங்கிய புதிய தனிப்படை விசாரணையில் இறங்கியது.

இதில் துப்பு துலக்கி குற்றவாளிகளை இந்தப் படை கைது செய்துள்ளது.

சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்த யாசின் (23), அசோக் நகரைச் சேர்ந்த உதய் (26), முதலிவாக்கத்தை சேர்ந்த மோகன்தாஸ் (43), மோகன்தாசின் மனைவி சத்தியபாமா (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போலீசாரிடம் இவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தில் தெரியவந்த விவரம்:

கிரானைட் போன்ற கனிமங்கள் உள்ள இடங்களை கண்டுபிடிப்பதில் சரவணன் கை தேர்ந்தவர் ஆவார். பல வெளிநாட்டு நிறுவனங்களுக்கு கிரானைட் உள்ளிட்ட கனிமங்கள் எங்கெங்கு கிடைக்கும் என்பது பற்றி ஆலோசனைகளை அளித்து வந்தார். இதில் அவருக்கு வெளிநாடுகளில் இருந்து ஏராளமான டாலர்கள் வருவாயாக வந்து கொண்டிருந்தது.

பல சமயம் சட்டவிரோதமான வழியில் இந்த டாலர்கள் வந்துள்ளன. அவ்வாறாக ரூ.50 லட்சம் மதிப்புள்ள டாலர்கள் சரவணனிடம் இருந்ததாகத் தெரிகிறது. அதை இந்தியப் பணமாக மாற்றுவதற்கு சரவணன் முயற்சித்தார்.

தன்னிடம் டிரைவராக வேலை பார்த்து வந்த சதீஷ்குமார் மூலம் டாலர்களை இந்திய பணமாக மாற்றுவதற்கு சரவணன் முயற்சித்துள்ளார்.

சதீஷ்குமார் தனது நண்பர்கள் யாசின், உதய் ஆகியோர் உதவியோடு டாலர் நோட்டுகளை மாற்றி கொடுக்கும் ஹவாலா கும்பலைச் சேர்ந்த மோகன்தாஸை அணுகியுள்ளனர்.

சரவணன் கொடுத்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள டாலர்களை சதீஷ்குமாரும், அவரது நண்பர்களும் பணமாக மாற்றித் தரவில்லை. டாலர்களையும் திருப்பித் தரவில்லை.

அதை அவர்களே பங்கு போட்டுக் கொண்டனர். இதில் மோகன்தாசுக்கும் ஒரு பங்கு கிடைத்துள்ளது.

பணத்தை திருப்பி கேட்டு சரவணன் நெருக்கடி தரவே சதீஷ்குமார் வேலையை விட்டு நின்றுவிட்டார். ஒருகட்டத்தில் போலீசில் புகார் கொடுக்கப்போவதாக சரவணன் மிரட்டியுள்ளார்.

இதனால் இந்தக் கும்பல் சரவணனை கொலை செய்ய முடிவு செய்துள்ளது. சதீஷ்குமார் தலைமையில் சென்ற இந்தக் கும்பல் முதலில் சரவணனை கொலை செய்துள்ளது. அதைப் பார்த்த வேலைக்கார பெண் அன்பரசியையும் கொலை செய்தனர்.

கஸ்தூரி கண்பார்வை இழந்தவர் என்றாலும் அவர் மூலமாக மாட்டிக் கொள்வோம் என்பதால் அவரையும் கொன்றுள்ளனர்.

சதீஷ்குமார் தற்கொலை:

இந்த வழக்கில் சதீஷ்குமார் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால் அவரை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளது தனிப்படை. ஆனால், தன்னை போலீசார் கண்காணிப்பதை அறிந்து கொண்ட சதீஷ்குமார் கடந்த மாதம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் அவர் அடிக்கடி பேசிய நபர்களின் பட்டியலை வைத்து விசாரணையை துரிதப்படுத்தினர்.

அதே போல சதீஷ்குமார் அடிக்கடி சென்று வந்த மோகன்தாசின் வீட்டிலும் போலீசார் சோதன நடத்தினர். அப்போது ஏராளமான டாலர்கள் சிக்கின. மேலும் சரவணன் வீட்டில் கொள்ளைப் போன 2 வைர நெக்லஸ்களும் சிக்கின.

இதை வைத்து நடத்தப்பட்ட விசாரணையில் யாசி்ன் மற்றும் உதய் இருவரும் சிக்கினர்.

இவர்களது பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இதனால் விசாரணை தொடர்ந்து கொண்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 4 பேரும் நேற்றிரவு மிக ரகசியமாக தனிப்படை போலீசாரால் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் கைதான தகவல் பற்றி போலீசார் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

இவர்களை மாஜிஸ்திரேட் ரவியின் வீட்டில் அவர் முன் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், 4 பேரும் நீதிமன்ற காவலில் இரவோடு இரவாக புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இவர்களை போலீசார் மீண்டும் தங்கள் காவலில் எடுத்து விசாரிக்கவுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X