• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்னையும், அன்பழகனையும் தவிர வேறு யாரும் பேட்டி அளிக்கக் கூடாது –திமுகவினருக்கு கருணாநிதி எச்சரிக்கை

|

Karunanidhi
சென்னை : திமுக தலைவராகிய நான், பொதுச் செயலாளராகிய பேராசிரியர் அன்பழகன் ஆகியோரைத் தவிர வேறு யாரும் கட்சியின் முடிவுகள் குறித்து பத்திரிகைகளுக்கு பேட்டி தரக் கூடாது என்று திமுகவினருக்கு முதல்வர் கருணாநிதி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சமீப காலமாக திமுகவின் அடுத்த வாரிசு யார் என்பதில் பெரும் புகைச்சல் நிலவி வருகிறது. மு.க.ஸ்டாலினுக்கும், மு.க.அழகிரிக்கும் இடையே நிழல் யுத்தம் வலுத்துள்ளது.

மு.க.அழகிரி சமீபத்தில் அளித்த சில பத்திரிகைப் பேட்டிகள், பெரும் பரபரப்பையும், திமுக வட்டாரத்தில் குழப்ப அலைகளையும் எழுப்பியுள்ளன. இதைச் சமாளிக்க முதல்வர் கருத்து தெரிவிக்க நேரிட்டது.

இந்த நிலையில் முதல்வர் கருணாநிதி ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில்,

அரசியல் சம்மந்தமான பேட்டிகள் அல்லது அவரவர் சொந்தக் கருத்துகள் பற்றிய சர்ச்சைகள் குறித்து பத்திரிகையாளர்களுடன் சந்திப்புகளில்; சொன்னவை-சொல்லாதவை என்று தங்கள், தங்களது எண்ணங்களுக்கேற்ப செய்திகளை வெளியிடுவதும், அதனால் தேவையற்ற குழப்பங்கள் தூண்டிவிடப்படுவதும்-கடந்த காலங்களில் மட்டுமல்லாமல் நிகழ் காலத்திலும் நடப்பவைகளாக இருப்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

தங்கள் ஏடுகளுக்கு ஏதாவது செய்திகள் வேண்டும் என்பதற்காக விளைந்துள்ள செய்திகளை அறுவடை செய்வதும் உண்டு; செய்திகள் விளையாத பகுதிகளில் வேண்டுமென்றே செய்திகளை விதைத்து, அதை விளைவிக்க முனைவோரும் உண்டு.

இந்தச் சூழலில் "மீடியா'' எனப்படும் செய்தி வழங்கும் கழனிகளில் நல் விளைச்சல் எது - நச்சு விளைச்சல் எது எனப் பகுத்தறிய இயலாதபடி பலவற்றை - அரசியல் கட்சிகளும் - அந்தக் கட்சிகளின் தலைவர்களும் காணவும், சந்திக்கவும் நேரிடுகிறது. அதுவும், இன்னும் சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு இடையே ஓராண்டு காலம் தான் இருக்கின்ற நிலையில் பத்திரிகைகளில் பலமான புயல் சின்னங்கள், எச்சரிக்கை அறிவிப்புகள் எனும் விதத்தில் பல கட்சிகளுக்குமிடையே அய்யப்பாடுகள் - அச்சுறுத்தல்கள் ஆகியவை நாள் தோறும், நாழிகை தோறும் தோன்றுவதற்கான தொடக்கங்கள் - செய்தியாளர்களின் சிந்தனைக் கூடங்களில் பலமான அடித் தளங்களோடு உருவாகும் நிலையில் எல்லா கட்சிகளுமே எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்பது பொதுவான நிலை என்றாலுங்கூட - நம்முடைய திராவிட இன இயக்கமாம் திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரையில் அவற்றில் தனி கவனம் செலுத்தி தன்னையும் காப்பாற்றிக் கொண்டு, தமிழகத்தையும் காப்பாற்ற வேண்டிய நிலையில் - பொறுப்பு மிகுந்தவர்களாக உள்ளோம் என்பதை நாடறியும் - நல்லோர் அறிவர்.

அதனால்தான் தந்தை பெரியார் "என் திராவிட ஜீவரத்தினங்களே'' என்று விளித்து அழைக்கப் பெற்றவர்களும்- அண்ணாவால், "ஒரு தாயின் வயிறு இடம் தராத காரணத்தால் பல தாய்களின் வயிற்றில் உதித்த சகோதரர்கள் நாம்'' என்று உணர்ச்சி பொங்க குறிக்கப்பட்டவர் களுமான உடன்பிறப்புக்களின் பாசறையாம் -

இந்தக் கழகமும் - கழகத்தை வழி நடத்துவோரும் - முன்னணி தளகர்த்தர்களும் - படை நடத்தும் பாங்கறிந்தோரும் - எழுத்தாளர், பேச்சாளர், செயல்வீரர் என்று எண்ணிறந்த அண்ணன் தம்பியரும் - அக்காள் தங்கைகளும் தங்கள் தங்கள் பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காகவே உறுதியானதும், இறுதியானதுமான இந்த அறிக்கையை நான் வெளியிட நேர்ந்துள்ளது.

அண்மைக்காலமாக - கழக வளர்ச்சியில் ஊக்க நிலையைத் தடுத்து, ஒரு தேக்க நிலையை உருவாக்க பல முனைகளிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த முயற்சிகள் போர்க்களத்தில் ஒரு வீரன் மீது பொழியப் படும் கணைகள் போல் என்னையும் - இந்த இயக்கத்தையும் நிலை குலையச் செய்து விடும் என்று யாராவது எதிர்பார்ப்பார் களேயானால் - அவர்கள் இந்தக் கழகம் நடந்து வந்த பாதையை அறியாதவர்களாகவும், அறிந்திருந்தாலும் அதை மறந்தவர்களாகவும் தான் கருதப்படுவர்.

எத்தனையோ துரோகங்களை - கீழறுப்பு வேலைகளை - விலை போன வீடணர்களின் வஞ்சக வலைகளை அறுத்து எறிந்தும் - மிதித்து நடந்தும் திராவிடத் தமிழ் மக்களின் அணையா விளக்காக ஆயிரமாயிரம் வைரக் கற்களின் ஒளி மிகுந்த சுடராக விளங்குவது இந்த இயக்கம் என்ற பெருமிதத் தோடும்தான் பேராசிரியரும், நானும் இந்த இயக்கத்தை வழி நடத்திக் கொண்டிருக்கிறோம். அதற்கு நாங்கள் பின்பற்றும் வழி - பெரியார் வழியும், அண்ணா வழியும் இணைந்த இன ஒற்றுமை எனும் இணையற்ற வழியாகும்.

அந்த வழியே செல்லும் நம்மிடையே ஒற்றுமைக்கு உலை வைத்திடவும் - ஓங்கி வளரும் நம் புகழைச் சிதைத்திடவும் ஓநாய் குணம் படைத்தோர் காத்திருப்பர் என்பது நாம் அறியாதது அல்ல! அதனால் தான் வைத்த விழி தவறாமல் - கடக்கும் வழி உணர்ந்து நடப்போம் வா என்று உடன்பிறப்புகளுக்கு எச்சரிக்கை அழைப்பாகத்தான் இந்த அறிக்கை அமைகிறது.

தொடக்கத்தில் நான் குறிப்பிட்டவாறு; சில செய்திக் கழனியாளர்களின் சேட்டைகளால் உருவாக்கப்படும் பிரச்சினைகள் எதுவாயினும் - அவற்றை எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில் கல்லறைக்கு அனுப்பி வைத்து விட்டு - கடமை, கண்ணியம், கட்டுப்பாடு காத்து நிற்கும் இந்தக் கழகத்தைக் கட்டிக் காத்திட நான் தரும் இந்த அழைப்பில் அல்லது அறிவுரையில் அல்லது வேண்டுகோளில் அல்லது எச்சரிக்கையில் தொடர்புடையோர் அனைவரும் கவனம் செலுத்த வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

கழகத்தினர் யாரும் ஊராட்சி, நகராட்சி, மாநகராட்சி, மாநில ஆட்சி, மத்திய ஆட்சி என்று பதவிப் பொறுப்பில் இருப்பாராயின், அந்தப் பொறுப்பு பற்றிய அய்ய வினாக்களுக்கும் – அறிவிப்புகளுக்கு மட்டுமே செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டுமே அல்லாது, கழகம் எடுக்க வேண்டிய முடிவுகள், ஈடுபடவேண்டிய செயல்கள், மற்றக் கட்சிகளோடான உறவுகள் - இவை பற்றியெல்லாம் பொதுக்குழு, செயற்குழு எடுக்கின்ற முடிவுகளை செய்தியாளர்களுக்குத் தெரிவிக்கும் பொறுப்பினை பேராசிரியரும் நானும் மட்டுமே முறையே பொதுச் செயலாளர், தலைவர் என்ற முறையில் பெற்றிருக்கிறோம் என்பதை அழுத்திக் கூறுகிறேன், அழுத்தந்திருத்தமாகவும் கூறுகிறேன்.

எனவே பல்வேறு பொறுப்புக்களில் உள்ள கழகத்தினர் தாம் வகிக்கும் பொறுப்புகள் பற்றிய வினாக்களுக்கும், அய்யப்பாடுகளுக்கும் மட்டுமே செய்தியாளர்களிடம் விளக்கம் அளிக்கவேண்டுமே தவிர - கட்சிக் கட்டுப்பாட்டுக்கு மீறிய நிலையில் - கழகத்தினர் எவரும் தன்னிலை விளக்கங்கள் தருவதற்கு கழக அமைப்புகள் இருக்கும்போது, அதனை விடுத்து செய்தியாளர்கள் சந்திப்புகளை பயன்படுத்திக் கொள்வதும் ஏற்புடையதல்ல; கழகக் கட்டுப்பாடு என்ற நிலையில் ஏற்கக் கூடியதும் அல்ல.

எனவே "வெறும் வாயை மெல்லுவோருக்கு கொஞ்சம் அவல் கொடுப்பதைப் போல'' நமது கழகத்தினர் யாராயினும், எவராயினும், எந்த அமைப்பில், பொறுப்பில் இருப்பவராயினும் அல்லது அவரது குடும்பத்தினராயினும் கட்சித் தொடர்புடைய செய்திகளை கட்சியின் தலைமை தான் வெளியிட வேண்டும். அப்படி வெளியிடப்படும் கருத்துகளை செயல்படுத்துவது மட்டும் தான் தங்கள் பணி எனக் கொண்டு அனைவரும் தொண்டாற்றிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி எச்சரித்துள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X