For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ரேசன் கடைகளில் 10 வகையான மளிகை பொருள்கள் இனி ரூ.25க்கு!

By Chakra
Google Oneindia Tamil News

Minister Velu
சென்னை: சமையலுக்குத் தேவையான 10 வகையான மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலம் ரேஷன் கடைகளில் இனி ரூ.25க்கு விற்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப மாதம் 2 மளிகைப் பொருள் பொட்டலங்களை வாங்கிக் கொள்ளலாம்.

சட்டசபையில் நடந்த உணவுத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்து உணவுத் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசுகையில்,

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்வதற்காக 50,000 டன் பருப்பு கையிருப்பில் உள்ளது. தமிழகத்துக்கு மத்திய அரசு 5 லட்சம் மெட்ரிக் டன் அரிசியை கூடுதலாக வழங்கியுள்ளது.

மாதம் 15,000 டன் கோதுமை வேண்டும் என்று முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

வறுமைக் கோட்டிற்கு கீழ், வறுமைக் கோட்டுக்கு மேல் என்று எந்த பாகுபாடும் பார்க்காமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக பொது வினியோகத் திட்டத்தில் ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு விற்கப்படுவது தமிழ்நாட்டில் மட்டும்தான்.

ரேஷன் கடைகளில் ஏற்கனவே சமையலுக்குத் தேவையான 10 மளிகைப் பொருட்கள் அடங்கிய பொட்டலம் 50 ரூபாய் விலையில் விற்கப்படுகிறது. இனிமேல் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித்தூள் ஆகியவற்றின் எடை அளவுகளை குறைத்து அந்த 10 வகையான மளிகைப் பொருட்களும் ரூ.25க்கு விற்கப்படும்.

குடும்ப அட்டைதாரர்கள் தங்கள் தேவைக்கும், வசதிக்கும் ஏற்ப 2 மளிகைப் பொருள் பொட்டலங்களையும் வாங்கிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

அகில இந்திய அளவில் பல்வேறு மாநில முதல்வர்களும் தமிழகத்தில் பொது வினியோகத் திட்டம் செயல்படும் முறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர். உச்சநீதிமன்றம் அமைத்த நீதிபதி வாத்வா தலைமையிலான குழுவினர் தமிழ்நாட்டில் பொது வினியோகத் திட்டம் மிகச் சிறப்பாக செயல்படுவதாக அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

1,600 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய ரேஷன் கடைகள் அமைக்கப்படும். பொது வினியோகத் திட்டம் முழு அளவில் கணிணிமயமாக்கப்பட்ட மின்னணு நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

எந்த பொருளும் வாங்காமல் அடையாளத்திற்காக மட்டும் ரேஷன் அட்டை மட்டும் தேவை என்று கேட்டு விண்ணப்பிப்பவர்களுக்கு அவர்கள் விண்ணப்பித்த 15 நாட்களில் அவர்களுடைய வீட்டின் முகவரிக்கே குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும்.

திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம் கிராமத்தில் புதிய சேமிப்புக் கிடங்கு கட்டப்படும். இதே போல தமிழ்நாடு சேமிப்புக் கிடங்கு நிறுவனத்திற்கு இந்த ஆண்டு ரூ.25 கோடி செலவில் மதுராந்தகம், நாமக்கல், அருப்புக்கோட்டை, காரைக்குடி, கோவில்பட்டி, சின்னசேலம் ஆகிய இடங்களில் புதிய சேமிப்புக் கிடங்குகள் கட்டப்படும்.

அத்துடன் ஆத்தூர், பட்டுக்கோட்டை ஆகிய இடங்களில் ரூ.5 கோடி செலவில் கூடுதல் சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும்.

விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மக்களின் வாங்கும் சக்தியும் உயர்ந்துள்ளது. இதனால் விலைவாசி உயர்வு மக்களை பெரிய அளவில் பாதிக்கவில்லை. நெல், கரும்பு பயிர்களுக்கு கூடுதல் விலை வழங்கப்பட்டுள்ளது. நெல்லுக்கு 84.2 சதவீத விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அரிசி விலை 53 சதவீதம்தான் உயர்ந்துள்ளது. கரும்புக்கு 125 சதவீதம் விலை உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சர்க்கரை விலை உயர்வு 50 சதவீதம்தான்.

அரசு ஊழியர்களுக்கு 62 சதவீத சம்பள உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இது போன்று மக்களின் வாங்கும் சக்தி உயர்ந்திருப்பதால் விலைவாசி உயர்வால் மக்கள் பெரிய அளவில் பாதிக்கப்படவில்லை என்றார் அமைச்சர் வேலு.

20 லட்சம் போலி ரேஷன் அட்டைகள்:

முன்னதாக சட்டசபையில் அவர் தாக்கல் செய்த கொள்கை விளக்கக் குறிப்பில்,

போலி ரேஷன் அட்டைகளைக் களையவும், அட்டைகளில் உள்ள விவரங்களைச் சரிபார்க்கவும் வீடு வீடாக கணக்கெடுக்கும் பணி தமிழகத்தில் நடைபெற்றது. முதல் கட்டமாக 3 மாவட்டங்களிலும், இரண்டாவது கட்டமாக 10 மாவட்டங்களிலும் பணி மேற்கொள்ளப்பட்டது.

முதல்கட்டத்தில் 2.06 லட்சமும், இரண்டாவது கட்டத்தில் 5.66 லட்சம் ரேஷன் அட்டைகளும் ரத்து செய்யப்பட்டன. மூன்றாவது கட்டமாக 14 மாவட்டங்களிலும், நான்காவது கட்டமாக 5 மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைகளை சரிபார்க்கும் பணி நடத்தப்பட்டது. இந்த 19 மாவட்டங்களிலும் சேர்த்து, மொத்தம் 23.02 லட்சம் ரேஷன் அட்டைகள் போலியாக இருக்கலாம் எனக் கருதி பொருள் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்தப் பணியின் இறுதியில் தமிழகத்தில் சுமார் 18 முதல் 20 லட்சம் போலி ரேஷன் அட்டைகள் ரத்து செய்யப்படலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் அதிக விலையில் விற்கப்பட்ட துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, பாசிப் பருப்பு, தனியா, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலைகள் இப்போது குறைந்து காணப்படுகின்றன என்று கூறப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X