For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஐபிஎல் அணி வருவதற்காக கேரளத்துக்கு உதவினேன்- பணம் பெறவில்லை: சசி தரூர் விளக்கம்

By Chakra
Google Oneindia Tamil News

Shashi Tharoor
டெல்லி: கொச்சி ஐபிஎல் அணி பிரச்சனையில் வெளியுறவு இணையமைச்சர் சசி தரூருக்கு உள்ள தொடர்பு குறித்து விவாதிக்க அனுமதி கோரி இன்று எதிர்க்கட்சிகள் பெரும் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையும் மாநிலங்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

இன்று காலை மக்களவை கேள்வி நேரத்தை நடத்தவிடாமல் எதிர்கட்சிகள் சசி தரூர் விவகாரம் குறித்து உடனடியாக விவாதிக்க வேண்டும் என்று கோரி கடும் அமளியில் ஈடுபட்டன.

உறுப்பினர்களை அமைதிப்டுத்த முயன்ற சபாநாயகர் மீரா குமார் கேள்வி நேரத்துக்குப் பிறகு சசி தரூர் விவகாரம் குறித்து பேசலாம் என்றார்.

ஆனால், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அதை ஏற்காமல் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

இந்த அமளிக்கு மத்தியிலும் கேள்வி நேரம் நடந்தது. ஆனால், ரகளை அதிகமானதையடுத்து அடுத்த சில நிமிடங்களில் அவையை ஒத்தி வைத்தார் சபாநாயகர்.

விளக்கம் தந்த சசி:

பின்னர் அவை கூடியதும் தனது விளக்கத்தை சசி தரூர் அளிக்க ஆரம்பித்தார். ஆனால், அவரை அறிக்கை படிக்கவிடாமல் எதிர்க் கட்சி எம்பிக்கள் கடுமையான கூச்சலிட்டனர். சசி தரூர் உடனே பதவி விலக வேண்டும் என்று கோரினர்.

இதனால் அவர் அறிக்கையை வாசிப்பைத நிறுத்திக் கொண்டு அதை அவையில் ஒப்படைத்துவிட்டு அமைதியானார். இதையடுத்து அமளி அதிகமானதால் மீண்டும் அவை ஒத்தி வைக்கப்பட்டது.

தனது அறிக்கையி்ல் சசி தரூர் கூறியிருப்பதாவது:

இந்தியன் பிரீமியர் லீக் அல்லது ஐபிஎல் அமைப்பு சமீபத்தில் 2 புதிய அணிகளின் ஏலத்தை நடத்தியது. அடிப்படையில் நான் ஒரு கிரிக்கெட் ரசிகர். அந்த முறையிலும், கேரளாவைச் சேர்ந்த எம்.பி என்ற முறையிலும், எனது தாய் மாநிலம் கிரிக்கெட்டில் சிறந்து விளங்க ஐபிஎல் அணி அமைவது உதவும் என நினைத்தேன்.

ஐபிஎல் அணிகளில் ஒன்றை வாங்குவதற்காக ரெண்டஸ்வஸ் ஸ்போர்ட்ஸ் கன்சார்டியம் அமைக்கப்பட்டது. அவர்கள் என்னை அணுகி வழிகாட்டுமாறு கோரினர். நானும், சாதாரண முறையிலான வழிகாட்டுதல்களை வழங்கினேன்.. இதில் நேரடி தலையீடு எதிலும் ஈடுபடவில்லை. அந்த அணிக்கு ஆலோசனைகளை கூறியதுடன், தேவையான வழி காட்டுதல்களையும் வழங்கினேன்.

ஐபிஎல் கொச்சி அணி வாங்கப்பட்டதை கேரள மக்கள் தங்களது மாநிலத்தற்குக் கிடைத்த வெற்றியாக கொண்டாடினர். மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது மாநிலத்தைச் சேர்ந்த இளம் வீரர்களின் திறமைகள் வெளியுலகுக்கு வர உதவும் என நம்பினர்.

ஆனால் கேரளாவுக்கென்று ஒரு தனி ஐபிஎல் அணி அமைந்த்தை சிலர் விரும்பவில்லை. இதனால் பல்வேறு குழப்பங்கள், சர்ச்சைகள் ஏற்பட்டு விட்டன. அதில் எனது பெயரையும் இழுத்து விட்டுள்ளனர். என் மீது இரண்டு மிக்க் கடுமையான புகார்கள் சுமத்தப்பட்டுள்ளன.

ரெண்டஸ்வஸ் குழுமத்துடன் நான் மறைமுகமாக தொடர்பு வைத்துள்ளேன் என்ற குற்றச்சாட்டு அவதூறானது, பொருத்தமற்றது. எனது அலுவலகத்தை தவறாக பயன்படுத்தினேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது. இதற்காக நான் ஆதாயம் அடைந்தேன் என்ற குற்றச்சாட்டும் தவறானது.

நான் தனிப்பட்ட முறையில் யாருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு செயல்படவில்லை. நான் இதனால் எந்த ஆதாயமும் பெறவில்லை. யாருக்கும் ஆதாயம் பெற்று தரவும் இல்லை.

என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை. நான் எனது அதிகாரத்தை இதற்காக பயன்படுத்தவில்லை. எனது அலுவலகமும் இதில்

சம்பந்தப்படவில்லை. கொச்சி அணிக்காக நான் முதலீடு எதுவும் செய்யவில்லை. கொச்சி அணி பங்குதாரருக்கும் எனக்கும் உள்ள தொடர்பு பற்றி பொறுப்பற்ற முறையில் தகவல்களை பரப்பி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் நான் ஆதாயம் அடைந்ததாக கூறுவது எனது பொது வாழ்க்கையில் ஆழமான காயத்தை ஏற்படுத்தியுளது. நான் 30 ஆண்டுகளாக சர்வதேச அளவில் பொதுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறேன். எந்த காலத்திலும் நிதி ஆதாயத்தை பெற்றதில்லை. என்னை ஒரு போதும் பணம் கட்டுப்படுத்த முடியாது. என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகள் என்னை அவமானப்படுத்துவதாக உள்ளன.

ஐபிஎல் கொச்சி அணி அமைய நான் செயல்பட்ட அனைத்துமே, ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கான நடத்தை விதிகளுக்குட்பட்டே அமைந்திருந்த்து. நானோ, எனது அலுவலகத்தைச் சேர்ந்த வேறு யாருமோ இதில் தொடர்பு கொள்ளவில்லை. எனது அமைச்சகத்திற்கும் இதில் எந்த்த் தொடர்பும் இல்லை.

ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களிடமிருந்து நான் ஆதாயம் அடைந்த்தாக கூறுவதிலும் உண்மை இல்லை. குறிப்பாக அதில் இடம் பெற்றுள்ள எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவருக்காக நான் இதில் ஈடுபட்டதாக கூறுவதிலும் உண்மை இல்லை.

இந்த விவகாரத்தில் பணம் கைமாறவில்லை. அதிகார துஷ்பிரயோகம் நடைபெறவில்லை.

நான் ரெண்டஸ்வஸ் நிறுவனத்தின் பினாமி என்று சிலர் கூறுவதிலும் உண்மை இல்லை. அது என்னை அவமானப்படுத்தும் குற்றச்சாட்டாகும்.

கேரளாவுக்காக ஒரு அணியை உருவாக்க உதவியதற்காக பெருமைப்படுகிறேன். ஆனால் இந்தப் பணிக்காக, வழிகாட்டலுக்காக நான் ஒரு பைசா கூட வாங்கவில்லை.

பொதுமக்கள் நலனுக்காக நடத்தப்படும் நிறுவனங்கள் மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். அதுதான் ஜனநாயக நாட்டுக்குப் பொருத்தமானதும் கூட. மாறாக தங்களுக்குச் சாதகமான சிலருக்காக அதை நடத்தினால் அது ஜனநாயக நெறிமுறைகளுக்குப் புறம்பானதாகும்.

இந்தியா வளர வேண்டுமானால், செழிக்க வேண்டுமானால் அந்த இந்தியா அனைவருக்கும் சொந்தமான இந்தியாவாக இருக்க வேண்டும். மாறாக ஒரு சிலர் தங்களது சுய நலனுக்காக, தங்களுக்கு வேண்டியவர்களுக்காக மட்டும் வாழ முயன்றால் விரும்பினால் அங்கு பாரபட்சங்கள், ஏற்றத்தாழ்வுகள் குடியேறி விடும்.

சில பணக்கார தனி நபர்கள், மக்களுக்கான நிறுவனத்தை தங்களுக்கு சாதகமானதாக சூழ்நிலைக்கு மாற்ற முயல்வது சரியான நடவடிக்கையாக இருக்காது.

கிரிக்கெட் நமது நாட்டின் மிகப் பிரபலமான பொழுதுபோக்கு விளையாட்டாகும். கோடிக்கணக்கான ரசிகர்கள் இதற்கு உள்ளனர். ஆனால் இந்த விளையாட்டின் மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான வருவாய் மற்றும் பலன்களை ஒரு சில தனிநபர் குழுக்கள் மட்டும் தங்கள் வசம் வைத்துக் கொள்வதை அனுமதிக்கக் கூடாது.

கேரளாவுக்கென்று ஒரு ஐபிஎல் அணி அமைவது என்பது அந்த மாநில மக்களின் நீண்ட நாள் கனவாகும். இதன் மூலம் கேரள மாநிலத்தின் பொருளாதாரமும், சமூகமும் பெரும் மாற்றத்தையும், உயர்வையும் காணும். ஆனால் அதை முறியடிக்க நடக்கும் அசிங்கமான சில வேலைகளைப் பார்க்கும்போது மனதுக்கு வேதனையாக உள்ளது. இப்படிப்பட்டவர்கள் கேரள ஐபிஎல் அணிக்கு மட்டுமல்லாமல், இந்த விளையாட்டுக்கே மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியவர்கள் ஆவர். ஐபிஎல் கட்டமைப்புக்கும் இது பெருத்த அவமானத்தையே கொண்டு வந்து சேர்க்கும்.

சமீப நாட்களில் என்னை மையமாக வைத்து உருவான சர்ச்சைகளுக்கு முக்கிய பின்னணியே, கேரளாவை விட்டு இந்த ஐபிஎல் அணியை வேறு எங்காவது மாற்றிக் கொண்டு போய் விட வேண்டும் என்பதுதான். இதுபோன்ற முயற்சிகள் முறியடிக்கப்பட வேண்டும் என்பதில் அனைத்து இந்தியர்களும் உறுதியாக இருக்க வேண்டும்.

என்னை மையமாக வைத்து எழுப்ப்ப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களும் பொய்யானவை, அடிப்படை ஆதாரம் இல்லாதவை, உள்நோக்கத்துடன் கூடியவை, சித்தரிக்கப்பட்டவை என்பதை எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் தரூர்.

முன்னதாக மாநிலங்களவையும் இந்த விவகாரத்தால் நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

இந் நிலையில் சசிதரூர் விவகாரம் குறித்து கட்சியின் மூத்த தலைவர்களான பிரணாப் முகர்ஜி, அந்தோணி ஆகியோருடன் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா அவசர ஆலோசனை நடத்தினார்.

அப்போது சசி தரூர் தரப்பை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க முடியாது என்று கூறிவிட்ட சோனியா, இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரித்த பின்னர்
முடிவெடுக்கலாம் என்று கூறியதாகத் தெரிகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X