For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கொல்கத்தா அணியில் முறைகேடுகள் – வருமான வரித்துறை ரெய்டில் ஆதாரம் சிக்கியது

By Staff
Google Oneindia Tamil News

IPL Logo
டெல்லி: நாடு முழுவதும் நேற்று எட்டு நகரங்களில் ஐபிஎல் அணிகளின் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய அதிரடி சோதனையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருக்கும் முறைகேடுகள் குறித்த ஆதாரங்கள் சிக்கியுள்ளதாக வருமானவரித்துறை கூறியுள்ளது.

.நேற்று, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், டெக்கான் சார்ஜர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளின் அலுவலகங்கள் ரெய்டுகளுக்கு ஆளாகின.

கொல்கத்தா அணியின் மும்பை மற்றும் கொல்கத்தா அலுவலகங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. டெக்கான் சார்ஜர்ஸ் அணியின் ஹைதராபாத் அலுவலகத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. சண்டிகரில் உள்ள கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் அலுவலகத்தில் ரெய்டு நடந்தது. மொத்தம் 8 நகரங்களில் ரெய்டு நடந்தது.

மோடியிடம் விசாரணை

மும்பையில் உள்ள மோடியின் அலுவலகத்தில் மீண்டும் ரெய்டு நடத்தப்பட்டது. மோடியும் மீண்டும் விசாரணக்குட்படுத்தப்பட்டார். அவரிடம் 12க்கும் மேற்பட்ட அதிகாரிகள் சரமாரியாக கேள்விகள் கேட்டு விசாரணை நடத்தினர்.

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பும் உரிமம் பெற்ற நிறுவனங்கள் தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. கடந்த ஒரு வாரத்தில் மோடி விசாரணைக்குட்படுத்தப்படுவது இது 2வது முறையாகும்.

நேற்று நடந்த நாடு தழுவிய ஐபிஎல் அணிகளின் அலுவலகங்களில் நடந்த சோதனையின்போது அணிகளின் வருவாய், உரிமையாளர்கள் விவரங்கள் உள்ளிட்டவை குறித்து விசாரிக்கப்பட்டது.

கொல்கத்தா அணியின் முறைகேடுகள்

கொல்கத்தாவில் உள்ள ஷாருக்கானுக்கு உரிமையான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அலுவலகம் தவிர பெங்கால் கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும் ரெய்டு நடந்தது. இந்த ரெய்டின்போது, சங்கத்தற்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் மாயமானது தெரிய வந்தது.

கொல்கத்தாவில் மட்டும் 3 இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டது. இந்த ரெய்டுகளில் மொத்தம் 11 பேர் ஈடுபட்டனர்.

கொல்கத்தா அணியில் மோடிக்கு மறைமுகப் பங்குகள் இருப்பதாக சர்ச்சை உள்ளது நினைவிருக்கலாம். எனவேதான் கொல்கத்தா அணியுடன் தொடர்புடைய அனைத்து இடங்களிலும் ரெய்டுகள் நடத்தப்பட்டன.

இந்த ரெய்டின்போது கொல்கத்தா அணி செய்த பல்வேறு முறைகேடுகள் தெரிய வந்துள்ளதாகவும், அதுகுறித்த ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பெங்கால் கிரிக்கெட் சங்க அலுவலகத்திலும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அலுவலகத்திலும் இன்ரு அதிகாலை வரை ரெய்டு நடந்தது.

இதுகுறித்து இந்திய வருவாய் சேவை இணை இயக்குநர் அகிலேந்து ஜாதவ் கூறுகையில், சில மோசடிகளுக்குரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளன. அதுகுறித்து தொடர்ந்து விசாரிக்கவுள்ளோம். சில பரிமாற்றங்கள் குறித்து தீவிரமாக ஆராய வேண்டியுள்ளது.

எங்களுக்கு கிடைத்துள்ளவற்றை தீவிரமாக ஆராய்ந்து முடிவுக்கு வருவோம் என்றார்.

ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களுக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பதைக் கண்டறிவதுதான் வருமான வரித்துறையினரின் சோதனையின் முக்கிய நோக்கமாக கருதப்படுகிறது. மொரீஷியஸ் தீவிலிருந்து பெருமளவிலான பணம் வருவதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

மேலும் ஹவாலா பணமும் உள்ளே புழங்குவதாக கூறப்படுவதால் அதுகுறித்தும் தீவிரமாக ஆராயப்படுகிறது.

கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் உள்ள பெங்கால் கிரிக்கெட் சங்க அலுவலகம், கொல்கத்தா அணியின் உரிமையாளரான நடிகர் ஷாருக் கானுக்குச் சொந்தமான ரெட் சில்லிஸ் என்டர்டய்ன்மென்ட் அலுவலகம் ஆகியவற்றில் விடிய விடிய சோதனை நடந்துள்ளது.

இதேபோல ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளிலும் மோடிக்கு மறைமுகப் பங்குகள் இருப்பதாக கூறப்படுகிறது.

இதேபோல சென்னையில் உள்ள இந்தியா சிமென்ட்ஸ் அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இந்தியா சிமென்ட்ஸ்தான் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நள்ளிரவு வரை இந்த சோதனை நீடித்தது.

ப்ரீத்தி ஜிந்தா அணிக்கு நோட்டீஸ்

இதற்கிடையே, வருடாந்திர வரிக் கணக்கு மற்றும் பாலன்ஸ் ஷீட் ஆகியவற்றை தாக்கல் செய்யாதது தொடர்பாக விளக்கம் கேட்டு தொடரப்பட்ட வழக்கில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் இணை உரிமையாளர்களான ப்ரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியாவுக்கு சண்டிகர் கோர்ட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

இதேபோல அணியின் உரிமையாளர்களான கரன் பால், மோஹித் பர்மனுக்கும் நோட்டீஸ் அனுப்ப்ப்பட்டுள்ளது.

இந்த மோஹித் பர்மனின் தம்பி கெளரவ் பர்மன். இவர் இங்கிலாந்தில் வசித்து வருகிறார். இவர் வேறு யாருமல்ல, லலித் மோடியின் வளர்ப்பு மகளின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நேற்று நாடு முழுவதும் ஐபிஎல் நிறுவனங்களில் நடந்த சோதனையில் 50க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். முதலில் வேர்ல்ட் ஸ்போர்ட்ஸ் குரூப், மல்டி ஸ்கிரீன் மீடியா, பாட் மாங்கிரல்லா மேனேஜ்மென்ட் ஆகிய டிவி ஒளிபரப்பு உரிமங்களைப் பெற்ற நிறுவனங்களில் சோதனை ஆரம்பித்தது. மாலைக்கு மேல் ஐபிஎல் அணிகளின் அலுவலகங்களில் ரெய்டு தொடங்கி நள்ளிரவு வரை நீடித்தது.

ஐபிஎல்லுக்காக தனிக் கட்டுப்பாட்டு அறை

ஐபிஎல் குறித்து தொடர்ந்து சர்ச்சைகள் வெடித்த வருவதால் இதற்காகவே தனி பிரிவை வருமான வரித்துறை டெல்லியில் தொடங்கியுள்ளது. அங்கு 24 மணி நேர கட்டுப்பாட்டு அறை ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் விசாரணைக்காக 400 அதிகாரிகள் அமர்த்தப்பட்டுள்ளனர். 200 தொழில்நுட்ப வல்லுநர்கள் ரெய்டுகள் நடத்தும் குழுக்களில் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோடி பாடிகார்டுகள் மீது வழக்கு

இதற்கிடையே மும்பை விமான நிலையத்தில் லலித் மோடியை சந்திக்க வந்த பத்திரிக்கையாளர்களைத் தாக்கிய மோடியின் பாதுகாவலர்கள் மீது வழக்கு தொடரப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அசோக் சவான் கூறினார்.

ஐபிஎல் விவகாரம் உச்சத்தில் இருந்த நிலையில் துபாய் போய் விட்டு மும்பை திரும்பிய மோடியை சந்திக்க விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்கள் குவிந்தனர்.

அப்போது மோடியின் பாதுகாவலர்கள் பத்திரிக்கையாளர்களை, மோடி அருகே நெருங்க விடாமல் தடுத்து தாக்கினர்.

இந்தப் பிரச்சினை மகாராஷ்டிர சட்டசபையில் எதிரொலித்தது. இதுகுறித்து எதிர்க்கட்சித் தலைவர் ஏக்நாத் கோட்சே கேள்வி கேட்டார். இதற்குப் பதிலளித்த முதல்வர் அசோக் சவான், இதுகுறித்து உள்துறை அமைச்சர் பாட்டீலிடம் பேசியுள்ளேன். தனியார் பாதுகாவலர்கள்தான் பத்திரிக்கையாளர்களைத் தாக்கியுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என பாட்டீல் தெரிவித்துள்ளார் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X