For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உயர்நீதிமன்ற வளாக சம்பவம்: 'எங்கிருந்தோ தூண்டப்பட்ட ஒன்று'-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Karunanidhi
சென்னை: உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலை திறப்பு விழாவின்போது நடந்த கருப்பு கொடி காட்டும் சம்பவம் எங்கிருந்தோ தூண்டப்பட்டு நடந்ததாக முதல்வர் கருணாநிதி கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்று அம்பேத்கர் சிலை திறப்பு விழா நடந்தபோது, சிலர் கருப்புக் கொடி காட்டியதால் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக எதிர்க்கட்சிகள் இன்று சட்டசபையில் கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தன.

அப்போது நடந்த விவாதம்:

ஜெயக்குமார் (அதிமுக): ஜனநாயகத்தின் முக்கிய தூண்களில் ஒன்று நீதிமன்றம். நேற்று அங்கு நடந்த சம்பவத்தை பார்க்கும்போது வேதனையாக இருக்கிறது. அதிமுக ஆட்சியில் இதுபோல ஏதாவது ஒரு சம்பவம் நடந்ததா?

அமைச்சர் பரிதி இளம்வழுதி: ஜனநாயகத்தை பற்றி கூறுகிறாரே.. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் வக்கீல் சண்முகசுந்தரத்தை கூலிப் படையை ஏவி தாக்குதல் சம்பவம் நடைபெற்றது அனைவருக்கும் தெரியும்.

இதற்கு அதிமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

அமைச்சர் பரிதி இளம் வழுதி: இதே ஹைகோர்ட் வளாகத்தில் சுப்பிரமணிய சாமிக்கு குச்சியும் இல்லாமல், கொடியும் இல்லாமல் கறுப்பு கொடி காட்டிய வரலாறும் உண்டு.

அதிமுகவினர் மீண்டும் கூச்சலிட்டனர்.

அமைச்சர் துரைமுருகன்: சம்பந்தப்பட்ட விஷயம் பற்றி மட்டும் பேசினால் பிரச்சனை இல்லை. ஜெயலலிதா ஆட்சியில் இப்படி நடந்தது உண்டா? என்று கேட்டால் அதற்கு அமைச்சர் பதில் சொல்லத்தான் செய்வார். இதற்கு அதிமுகவினர் கோபப்பட்டால் எப்படி? உங்கள் ஆட்சியில் ஒரு சம்பவம் அல்ல, நிறைய நடைபெற்றன. கேட்டால் சொல்லிக் கொண்டே இருப்போம்.

ஜெயக்குமார்: நான் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மொட்டை தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு பேசுகிறீர்கள். எல்லோரும் இருக்கும் அரங்கில் இவர்களுக்கு முன்பு வெட்கி தலைகுனியும் சம்பவம் நடந்துள்ளது. 4 ஆண்டு காலத்தில் உங்கள் ஆட்சியில் எத்தனையோ சம்பவங்கள், வக்கீல்கள் மோதல், சட்டக் கல்லூரி மோதல், டி.வியை போட்டாலே ஆங்கிலப் படத்தை மிஞ்சும் சம்பவங்கள்.

நேற்றைய சம்பவத்தில் பத்திரிகையாளர்கள் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறார்கள். முதல்வர் முன்பே இந்த சம்பவம் நடக்கிறது. ஆனால் முதல்வர் தொடர்ந்து உரை நிகழ்த்திக் கொண்டுள்ளார். பத்திரிகையாளர்களை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகுவதுதான் நியாயமானதாக இருக்கும்.

வேல்முருகன் (பாமக): நேற்றைய சம்பவத்தில் 6 பேர் கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள். அவர்களை அப்புறப்படுத்தும் பொறுப்பு போலீசுக்கு உண்டு. ஆனால் அவர்கள் அப்புறப்படுத்தப்படவில்லை.

அமைச்சர் துரைமுருகன்: கறுப்புக் கொடி காட்ட ஜனநாயகத்தில் உரிமை உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை. அதற்கு என்று சில முறைகள் உள்ளன. போலீசில் முறையாக அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் சொல்லும் இடத்தில் நின்றுதான் கறுப்புக் கொடி காட்ட வேண்டும். ஆனால் இவர்கள் அனுமதி கேட்கவும் இல்லை. திடீரென்று 4 பேர் காலித்தனமாக கூட்டத்தில் எழுந்து கறுப்புக் கொடி காட்டுகிறார்கள். இதை கண்டிக்க வேல்முருகனுக்கு வாய் வரவில்லை.

வேல்முருகன்: கறுப்புக் கொடி காட்டியதை நாங்களும் கண்டிக்கத்தான் செய்கிறோம். ஆனால் அதற்கு பிறகு அங்கு அசம்பாவிதங்கள் நடந்து உள்ளது. அவர்களை தாக்கியதும் கண்டிக்கத்தக்கது. இதை படம் எடுத்த பத்திரிகையாளர்களை தாக்கியதும் ஏற்றுக் கொள்ளதக்கதல்ல.

பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்): ஒரு பிரச்சனை வருகிறபோது அதை நிதானமாக கையாண்டு முதல்வர் நேற்று பேசி இருக்கிறார். கறுப்புகொடி காட்டிய குழுவினர் எந்த அரசியல் கட்சியை சார்ந்தவராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் அந்த போராட்டத்தை முறைப்படுத்தி இருக்க வேண்டும். அடிதடி சண்டை என்று சென்றதால் பிரச்சனை வேறுவிதமாக சென்றுவிட்டது.

அமைச்சர் துரைமுருகன்: கறுப்பு கொடி காட்டப் போகிறோம் என்று யாரும் போலீசாரிடம் சொல்லவில்லை. அனுமதியும் கேட்கவில்லை. திருட்டுத்தனமாக கொண்டு வந்த கொடியை காட்டுவார்கள். அதை அப்படியே விழாவில் உள்ளவர்கள் பார்த்துக் கொண்டிருப்பார்களா?

பாலபாரதி: கறுப்புக் கொடி காட்ட போலீஸ் அனுமதி கொடுப்பதே இல்லை. ஆகவேதான் தங்கள் உணர்வுகளை காட்ட போலீசுக்கு தெரியாமல் கறுப்புக் கொடி காட்டி இருக்கிறார்கள்.

துரைமுருகன்: அனுமதி கொடுக்கமாட்டார்கள் என்று தெரிந்தே இவர்கள் கறுப்புக் கொடி காட்டி காலித்தனம் செய்வார்கள். அதை எவனாவது பார்த்துக் கொண்டு பொறுத்து இருப்பானா? திமுகவில் மானம் உள்ளவன் கிடையாதா? உங்கள் தலைவர் முன்பு யாரும் கறுப்புக் கொடி காட்டினால் உங்கள் தொண்டர்கள் சும்மா இருப்பார்களா?

பாலபாரதி: நேற்றைய நிகழ்ச்சியில் முதல்வர் நேர்த்தியாக சமாளித்தார். ஆனால் துரைமுருகன் இங்கு இவ்வளவு ஆவேசமாக பேச வேண்டியது இல்லை. இதை கையாண்ட முறையில்தான் கோளாறு என்று கூறுகிறேன்.

முதல்வர் பதில்:

இதற்கு பதிலிளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

உயர்நீதிமன்ற வளாகத்தில் அம்பேத்கர் சிலையை வைப்பதற்கு இந்த அரசோ, நானோ அல்லது யாராவது குறுக்கீடு செய்திருந்தால், தடுத்திருந்தால் உணர்ச்சியுள்ளவர்கள் கருப்புக் கொடி காட்டுவதில் நியாயம் இருந்திருக்கும்.

திமுக ஆட்சிக் காலத்தில் வட சென்னையில் அமைந்த சட்டக் கல்லூரிக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக அம்பேத்கர் பெயரை வைத்தவன் நான். எனக்கு ஒதுக்கப்பட்டிருந்த பெரிய வீட்டை சட்டப் பல்கலைக்கழக அலுவலகமாக மாற்றியதும் நான்தான்.

மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரை சூட்டுவதற்கு காரணமாக இருந்தவனும் நான்தான். இதெல்லாம் தவறு என்று குற்றம் சாட்டுவதுபோல உயர்நீதிமன்ற வளாகத்தில் சட்டைப் பையில் இருந்த கருப்புக் கொடியை வீசினார்கள்.

சுமார் ஆயிரம் பேர் இருந்த கூட்டத்தில் நான்கைந்து பேர் எழுந்து ஒரு கட்சியின் பெயரை சொல்லிக் கொண்டு அம்பேத்கரை வீணாக கலங்கப்படுத்தும் விதத்தில் நடந்த இந்த சம்பவத்தைப்பற்றி நீங்கள் (எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்) தெரிவித்த கவலையில் நானும் பங்கு கொள்கிறேன். இதை நான் ஏற்றுக்கொள்ளவும் இல்லை, வரவேற்கவும் இல்லை.

பத்திரிகை நிருபர்கள் தாக்கப்பட்டது குறித்து நானும் வருத்தப்படுகிறேன். அது பற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த கருப்புக்கொடி எதற்காக தீடீரென்று காட்டப்பட்டது. கருப்புக் கொடிக்கு அஞ்சுகிற இயக்கம் திமுக அல்ல. நாங்கள் நடத்தாத கருப்புக் கொடி போராட்டமே தமிழ்நாட்டில் இல்லை.

ஆசிய ஜோதி, பண்டித ஜவஹர்லால் நேருவுக்கே கருப்புக் கொடி காட்டியிருக்கிறோம். தஞ்சை தரணியில் எனது தலைமையில் அவருக்கு கருப்புக் கொடி காட்டப்பட்டது. ஆனால் கருப்புக் கொடி காட்டுவதற்கென்று ஒரு முறை உள்ளது.
முன்கூட்டியே போலீசிடம் அனுமதி கேட்டு போலீசார் அனுமதிக்கிற இடத்தில் இருந்துதான் கருப்புக் கொடி காட்ட வேண்டும். அப்படித்தான் திமுகவும், ஜனநாயகரீதியில் ஏராளமான கருப்புக் கொடி போராட்டங்களை நடத்தியுள்ளது.

ஆனால், இங்கே திடீரென்று எழுந்து கருப்புக் கொடி காட்டப்பட்டது. கடலூரில் தந்தை பெரியார் பேசியபோது, அவர் மீது செருப்பு வீசப்பட்டது. அந்த செருப்பு வீசிய இடத்தில் அவருக்கு சிலை அமைத்து அந்த சிலையை நான்தான் திறந்து வைத்தேன்.

76 ஆண்டுகால பொது வாழ்க்கையில் நான் பார்க்காத எதிர்ப்பு இல்லை. அதேபோல பெரியார் சந்திக்காத வன்முறைகள் இல்லை. செருப்பு வீசியவரையே அழைத்து அவருக்கு பரிசளித்தவர் பெரியார். அந்த செருப்பையும் அவர் பத்திரமாக வைத்திருந்தார்.

என்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்குள் அனுமதித்து, மேடையிலும் அனுமதித்து நான் பேச ஆரம்பித்தபோது 'அனுமதியோம், அனுமதியோம்' என்று சொன்னால் அதற்கு என்ன அர்த்தம்?.

எங்கிருந்தோ தூண்டப்பட்டு அனுப்பப்பட்ட சிறு கூட்டம் அது என்று தான் அர்த்தம். பஞ்ச பாண்டவர்களைப்போல ஐந்தாறு பேர் தான் இந்த கலாட்டாவில் ஈடுபட்டார்கள்.

இந்த நிலையிலும் நான் அதைப்பற்றி கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்ததாக சிபிஎம் உறுப்பினர் பாலபாரதி கூட என்னைப் பாராட்டினார்.

நான் மிகுந்த அடக்கத்தோடு கவலைப்படாமல் பேசிக் கொண்டிருந்தேன். அதுதான் கருணாநிதி.
தூத்துக்குடியில் வஉசி சிலை திறப்பு விழாவில் இந்திரா காந்தியும், நானும் கலந்து கொண்டபோது அந்த பெருங்கூட்டத்தில் இடைஇடையே சிலர் கூச்சல் போட்டுக் கொண்டிருந்தார்கள். ஆனால் கொஞ்ச நேரத்தில் கூச்சல் போட்டவர்களை காணவில்லை. 'திஸ் ஈஸ் கருணாநிதி' என்று பக்கத்தில் இருந்த கோசல்ராமிடம் இந்திரா காந்தி சொன்னார். அவரது அந்த பாராட்டை நான் இழந்து விட முடியுமா?.

14 வயதிலிருந்தே நான் இப்படித்தான் பேசிக் கொண்டிருக்கிறேன். கூட்டத்தில் பாம்பு வந்தாலும், செருப்பு வீசினாலும் சரி, கல் எறிந்தாலும் சரி என்னுடைய கடைசி மூச்சு இருக்கும் வரை கடைசி இதய துடிப்பு இருக்கும்வரை நான் பேசிக் கொண்டேதான் இருப்பேன். இதை யாரும் தடுக்க முடியாது.

நேற்றைய கூட்டத்தில் கலந்துகொண்ட உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உள்ளிட்ட நீதிபதிகள் நன்றாக சமாளித்தீர்கள் என்று பாராட்டினார்கள்.

இந்த சம்பவங்கள் எல்லாம் நேற்றைய மாலை பத்திரிகையில் வரவில்லை. இன்று காலை பத்திரிகையில் இந்த செய்திகள் வந்திருந்தன. பத்திரிகையாளர்கள் பாதிக்கப்பட்டது குறித்து என் கவனத்துக்கு வந்துள்ளது. அதுபற்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் அவர்களுக்கு நல்ல பாதுகாப்பு வழங்கப்படும்.

ஆனால் பத்திரிகைகளுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நேற்றைய நிகழ்ச்சிக்கு நான் பேசியதுதான் காரணம் என்று யாரும் என் மீது குற்றம் சாட்ட முடியாது. அம்பேத்கருக்காக நான் பட்ட பாட்டை, செய்த சிறப்புக்களை உலகம் அறியும்.

தாழ்த்தப்பட்ட மக்கள் அறிவார்கள். தாழ்த்தப்பட்ட ஜாதியிலிருந்தே என் மகனுக்கு பெண் எடுத்தவன் நான். எனவே இதுபோன்ற கருப்புக் கொடிகளை அவர்கள் காட்டிக் கொண்டே இருக்கட்டும். முன்பெல்லாம் ஆயிரம் பேர் கருப்புக் கொடி காட்டுவது என்பது இப்போது ஐந்து பேராக சுருங்கிவிட்டதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிலரது இந்த நடவடிக்கைக்கு வக்கீல் சங்கத் தலைவர் பால் கனகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதை நடக்காமல் பார்த்திருக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் சொன்னார்கள். நான் மாத்திரம் அல்ல, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியே அனைவரிடமும் பேசி எந்த தகராறும் ஏற்படக்கூடாது என்று கேட்டுக் கொண்டு அதற்கு ஒத்துக் கொண்டுதான் போயிருக்கிறார்கள். அதையும் மீறி ஒரு நான்கு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

நான்கு போலீஸ்காரர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்காததற்காக கருப்பு க்கொடி காட்டப்பட்டது என்று சொல்லியிருக்கிறார்கள்.

போலீஸ்காரர்கள் சட்டரீதியாக அதை அணுகும்போது, நீதிமன்றத்துக்கு போகும்போது, நான் என்ன நடவடிக்கை எடுப்பது. எனவே உயர் நீதிமன்றத்தை அமளிக்காடாக, கலவர பூமியாக மாற்றுபவர்கள் யாராக இருந்தாலும் பொது மக்களால் மன்னிக்கப்பட மாட்டார்கள்.

இந்த விஷயத்தை நானும் மறந்து விடுகிறேன். எல்லோரும் மறந்துவிட்டு மக்களுக்கு நல்ல வழிகாட்டுவோம் என்றார் கருணாநிதி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X