For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

குமுதம் பிரச்சனையை தீர்க்க சமரச குழு-கருணாநிதி

By Chakra
Google Oneindia Tamil News

Kumudam
சென்னை: குமுதம் வார இதழ் குழுமத்தில் ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி சட்டசபையில் அறிவித்தார்.

குமுதம் குழுமம் தொடர்ந்து நல்லபடியாக இயங்க வேண்டும் என்பதே அரசின் விருப்பம் என்றும், அதற்காக ஒர சமரசக் குழுவை அமைத்து நிர்வாகிகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனையைத் தீர்க்க நடவடிக்கை எடு்க்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்துள்ளார்.

குமுதம் ஆசிரியர் மற்றும் இயக்குநரான டாக்டர் எஸ்ஏபி ஜவஹர் பழனியப்பனுக்கும் அதன் பதிப்பாசிரியர் பி.வரதராஜனுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.

லாபத்தி்ல் இயங்கும் குமுதத்தை நஷ்டக் கணக்கு காட்டி பல கோடி நிதி மோசடி செய்ததாகவும், நிர்வாக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் வரதராஜன் மீது ஜவஹர் பழனியப்பன் கொடுத்த புகாரின் அடிப்படையில் வரதராஜன் சில நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது 323, 341, 342, 344, 365, 307, 25 (1) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நள்ளிரவில் கைது செய்யப்பட்ட வரதராஜன், சில மணி நேர விசாரணைக்குப் பின் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

குமுதம் நிறுவனத்தின் பதிப்பாளராக இருந்த மறைந்த பிவி பார்த்தசாரதியின் மகன்தான் வரதராஜன். குமுதத்தின் மேனேஜராக இருந்து, பார்த்தசாரதி மறைவுக்குப் பின்னர் பதிப்பாளரானார்.

இந் நிலையில் அவர் இன்று குற்றப் பிரிவு போலீசார் முன் ஆஜராகி கையெழுத்திட்டார். நிபந்தனைப்படி ஒவ்வொரு திங்கள்கிழமையும் அவர் போலீசார் முன் ஆஜராக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இவர்களிடையிலான பிரச்சனையைத் தீர்க்க சமரசக் குழுவை அமைப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் குமுதம் பிரச்சனை குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ ஞானசேகரன் ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.

இதற்கு பதிலளித்து முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

குமுதம் புகழ்பெற்ற வார இதழ்களில் ஒன்று. இந்த இதழை ஆரம்பித்து அதை நல்ல நிலைக்கு கொண்டு வந்த செல்வாக்கு மிக்க மூத்தவர்கள் மறைந்து விட்டார்கள்.

அவர்களின் பிரதிநிதியாக நடத்த முன்வந்த ஜவஹர் பழனியப்பன், வெளிநாட்டில் இருந்து அதை ஒருவரிடம் ஒப்படைத்து நடத்தி வந்தார். சமீபத்தில் நாடு திரும்பிய அவர் யாரிடம் ஒப்படைத்தாரோ அவரிடம் சில விளக்கங்களை கேட்டார்.

இதனால் ஏற்பட்ட தகராறு குறித்து ஞானசேகரன் இங்கு குறிப்பிட்டார். அந்த குற்றச்சாட்டுகளை விசாரித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் காவல் துறையினர் முயன்று வரதராஜன் என்ற நண்பரை கைது செய்து இருக்கிறார்கள்.

பொதுவாக பத்திரிகைகளை ஒடுக்குவது, வழக்கு தொடர்வது, சட்டசபை கூண்டில் நிறுத்துவது போன்றவற்றை திமுக ஆளுங்கட்சியாக இருந்தபோதும், எதிர்கட்சியாக இருந்தபோதும் ஏற்றுக்கொள்வதில்லை.

பத்திரிகைகள் மீது எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் அதற்கு கண்டனம் தெரிவித்து பத்திரிகைகளுக்கு நீதி தேடி தருவதில் ஆளுங்கட்சி முனைப்பாக இருக்கிறது.

வரதராஜன் கைது செய்யப்பட்டார் என்ற தகவல் வந்ததும் அவரை உடனடியாக விடுதலை செய்யும் நிலைமை இல்லை என்றாலும் அவர் சிறை புக வேண்டும் என வற்புறுத்த வேண்டியதில்லை என்று அரசு வக்கீல்களை நான் கேட்டுக் கொண்டு அவர் ரிமாண்ட் செய்யாமல் சில நிபந்தனைகளோடு வெளியே அனுப்பப்பட்டுள்ளார்.

வழக்கு பற்றி தெரியாது. சில நண்பர்கள் ஒரு சமாதான முயற்சியை ஏற்படுத்த வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.

ஒரு பிரச்சனை காரணமாக ஒரு பெரிய பத்திரிகை நடைபெறுவதில் தடங்கல், முட்டுக்கட்டை வந்து விடக்கூடாது என்பதில் அக்கறையுடன் இருக்கிறேன். ஏற்கெனவே சில பத்திரிகைகளில் புகைச்சல்கள், பிரச்சனைகள் வந்த போது அதிகாரிகளை அனுப்பி சமரச உடன்பாடு ஏற்படுத்தி பத்திரிகை விழுந்து விடாமல் பார்த்துக் கொண்ட அந்த வரலாறு திமுகவுக்கு உண்டு.

அண்ணா முதல்வராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்கு சென்றபோது ஒரு பிரபல பத்திரிகையில் தொழிலாளர் பிரச்சனை காரணமாக சிக்கல்கள் ஏற்பட்டது. ஆனால், அண்ணா அந்த பத்திரிகையில் பிரச்சனை வராமல் பார்த்துக் கொள்ளும் படி சொல்லிவிட்டுச் சென்றார்.

அமெரிக்கா சென்ற பிறகும் தொலைபேசியில் அதை வலியுறுத்தினார். நான், நெடுஞ்செழியன், அன்பழகன் ஆகியோர் தொழிலாளர்களை அழைத்து மறைந்த என்.வி.நடராஜன் மூலம் சமரசம் பேசி அந்த நிறுவனத்தை நடத்த வழிவகுத்து கொடுத்தோம்.

அதற்கு பிறகு குடும்ப சண்டை காரணமாக ஒரு பத்திரிகை நிறுத்தப்பட்டு விடுமோ என்ற நிலை வந்த போது ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி குகனை அனுப்பி சமரசம் செய்து வைக்கப்பட்டது. இதற்கு அந்த பத்திரிகை அதிபர் நன்றிக் கடிதம் அனுப்பினார். இப்போதும் அது என்னிடம் இருக்கிறது.

திமுக பற்றி குமுதம் இதழில் சில கருத்து வேறுபாடுகள், கேலி சித்திரங்கள் வரும். அதைப் பார்த்து ரசிப்பவன் நான், ஆத்திரப்படுபவன் அல்ல.

பங்குதாரர்களிடையே ஏற்பட்ட சண்டையா அல்லது முதலாளி- தொழிலாளி தகராறா என்பதை ஆராய்ந்து ஒரு உடன்பாடு ஏற்படுவதற்கு முன்னால் சட்ட ரீதியாகவோ, போலீஸ்துறை மூலமாகவோ எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று நான் கருதுகிறேன். அதற்காக உத்தரவிட முடியாது.

அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டால் அதை திரும்ப பெற முடியும். ஆனால் வழக்கை எப்படி நடத்துவது என்று சொல்ல முடியாது.

ஜவஹர் பழனியப்பன், வரதராஜன் இருவரிடையே சமரசம் உண்டாகும் வகையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும். எங்கே நியாயம் இருக்கிறதோ அந்த நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு குழு அமைத்தாவது அதற்கான ஏற்பாடுகளை குமுதம் வாழ வேண்டும் என்பதற்காக நிச்சயமாக இந்த அரசு செய்யும் என்றார் கருணாநிதி கூறினார்.

அப்போது பேசிய அதிமுக எம்எல்ஏ ஓ.பன்னீர் செல்வம், ஒரு பத்திரிகையில் நடந்த சம்பவம் பற்றிக் குறிப்பிட்டார். அதை சபாநாயகர் அவைக் குறிப்பில் இருந்து நீக்கினார்.

இதற்கு பதிலளித்த முதல்வர் கருணாநிதி, ஒரு பத்திரிகையில் நடந்த தகராறின் போது யாரோ சில வன்முறையாளர்கள் அலுவலகத்தில் புகுந்து இருக்கிறார்கள். இதற்கு யாரும் பொறுப்பு ஏற்க முடியாது. தர்மபுரியில் நடந்த பஸ் எரிப்பு சம்பவத்துக்கு நீங்கள் பொறுப்பேற்க முடியுமா? என்று கேட்டார்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

குமுதத்தை நிறுவிய ஆசிரியர் எஸ்ஏபி அண்ணாமலையின் மகன்தான் டாக்டர் ஜவஹர் பழனியப்பன். இவர்தான் குமுதம் உள்ளிட்ட அதன் குழும இதழ்களின் நிறுவன நிர்வாக ஆசிரியர். குமுதம் குழும இயக்குநராகவும் உள்ளார்.

குமுதத்தை முழுக்க தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ள வரதராஜன் முயற்சித்ததாகவும், அதற்காக ஆசிரியர் குழு உள்ளிட்ட அனைத்து விஷயங்களிலும் தலையிட்டதாகவும் அவர் மீது குற்றம்சாட்டியுள்ளார் ஜவஹர்.

மேலும் நிறுவனத்தின் நிதியை தனது சொந்த காரணங்களுக்காக தவறாக பயன்படுத்தியுள்ளார் என்றும், தனது ஊதியத்தை பல மடங்கு உயர்த்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டு கூறியள்ளார் ஜவஹர் பழனியப்பன்.

குமுதத்தை தனது தந்தை தன்னுடைய சொந்தப் பணத்தில் தொடங்கியதாகவும் அதில் வரதராஜனின் குடும்பம் எந்த முதலீடும் செய்யவில்லை என்றும், இதனால் அதில் பங்குதாரர் உரிமையை அவர் கோர முடியாது என்றும் ஜவஹர் கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X