For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிளவுஸை கிழித்த அவைக் காவலர்கள்-அதிமுக பெண் எம்.எல்.ஏ புகார்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: தமிழக சட்டசபையில் இன்று அமளியில் ஈடுபட்ட அதிமுக, மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனி்ஸ்ட் எம்எல்ஏக்கள் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்டனர்.

அவையிலிருந்து வெளியே அழைத்துவரும்போது வன்முறையைக் கையாண்ட பெண் அவைக் காவலர்கள், முரட்டுத்தனமாக இழுத்ததால், எனது பிளவுஸ் கிழியும் நிலை ஏற்பட்டது என்று அதிமுக பெண் எம்.எல்.ஏ. இளமதி சுப்ரமணியன் புகார் கூறியுள்ளார்.

இன்று காலை அவை கூடியதும் விலைவாசி உயர்வு, பந்த் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என்று அதிமுக, மதிமுக எம்எல்ஏக்கள் கோரினர்.

அப்போது சபாநாயகர், கேள்வி நேரத்தின்போது எந்த பிரச்சனையும் எழுப்பக் கூடாது. கேள்வி நேரம் முடிந்ததும் நீங்கள் விரும்பும் பிரச்சனை பற்றி பேசலாம் என்றார்.

ஆனால், அதை காதில் வாங்காமல் எதிர்க்கட்சி எம்.எல்.ஏக்கள் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.

சபாநாயகர்: அவைக்கு குந்தகம் விளைவிக்கும் செயலில் ஈடுபடக்கூடாது. எல்லோரும் அமைதியாக உட்காருங்கள். இப்படி நடந்து கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. நீங்கள் அமைதியாக உட்காரவிட்டால் நான் நடவடிக்கை எடுக்க வேண்டிவரும் என எச்சரிக்கிறேன்.

இருப்பினும் எதிர்க் கட்சி எம்எல்ஏக்கள் தொடர்ந்து கோஷம் எழுப்பியபடியே நின்றனர்.

சபாநாயகர்: எதுவானாலும் கேள்வி நேரம் முடிந்தபிறகு உங்களுக்கு பேச வாய்ப்பு தரப்படும். இப்போது இருக்கையில் அமருங்கள். உங்களுக்கு பணிவோடு தெரிவிக்கிறேன். நீங்களாக வெளியேறினால் பிரச்சனை இல்லை. நானே வெளியேற்றினால் இன்று முழுவதும் சபை நடவடிக்கைகளில் கலந்து கொள்ள முடியாமல் போய்விடும்.

சபாநாயகர் இவ்வாறு கூறியவுடன் அதிமுக எம்எல்ஏக்கள் சபாநாயகர் அருகே வந்து நின்று கோஷமிட்டனர். அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, மதிமுக எம்.எல்.ஏக்களும் அவையின் மையப் பகுதிக்கு வந்து கோஷமிட்டனர்.

சுமார் 15 நிமிட நேரம் அவர்கள் கோஷம் எழுப்பியபடி இருந்ததால் சபையை தொடர்ந்து நடத்த முடியாத நிலை உருவானது.

இதையடுத்து 7 முறை சபாநாயகர் அவர்களை இருக்கையில் அமருமாறு கேட்டுக் கொண்டார். ஆனாலும் எதிர்க்கட்சியினர் அதை பொருட்படுத்தாமல் கோஷம் எழுப்பியபடி இருந்தனர்.

அமைச்சர் அன்பழகன்: சட்டசபையில் இப்படி தொடர்ந்து கோஷம் எழுப்புவது அநாகரீகம். எந்த பிரச்சனையாக இருந்தாலும் கேள்வி நேரம் முடிந்ததும் அந்த கட்சியின் கொறடாவோ, வேறு யாரோ பேச வாய்ப்பு கேட்டால் கண்டிப்பாக தருவார்கள். அதை விட்டுவிட்டு இப்படி கோஷம் எழுப்புவது அழகல்ல.

அமைச்சர் பொன்முடி: இதே அவையில் 2 நாட்களுக்கு முன் கேள்வி நேரத்தை ஒத்தி வைத்ததற்கு ஆட்சேபம் தெரிவித்த செங்கோட்டையன், இன்று அதற்கு நேர்மாறாக கேள்வி நேரத்தில் பிரச்சனை எழுப்புகிறார். இது எப்படி நியாயமாகும்.

அமைச்சர் துரைமுருகன்: அவை நடவடிக்கைகளுக்கு தொடர்ந்து குந்தகம் விளைவிக்கிறார்கள். எனவே அவர்களை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதையடுத்து சபாநாயகர் அவைக் காவலர்களை அழைத்து கோஷம் எழுப்பியவர்களை வெளியேற்ற உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து நான்கு பக்கங்களிலும் இருந்து வந்த அவைக் காவலர்கள் இந்த எம்எல்ஏக்களை சபையில் இருந்து வெளியேற்றினர்.

சிலர் முரண்டு பிடித்தாதல் அவர்களை குண்டு கட்டாக தூக்கிச் சென்று வெளியே விட்டனர். அதிமுக பெண் எம்.எல்.ஏக்களை பெண் காவலர்கள் இழுத்துச் சென்றனர்.

வெளியேறப்பட்ட வலங்கைமான் தொகுதி அதிமுக பெண் உறுப்பினர் இளமதி சுப்ரமணியன் செய்தியாளர்களிடம் பேசுகையில், அவையிலிருந்து எங்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். நாங்கள் வெளியேறி வந்து கொண்டிருந்தபோது வன்முறையைக் கையாண்டனர் அவைக் காவலர்கள்.

அப்போது ஒரு பெண் காவலர், என்னை முரட்டுத்தனமாக பிடித்து இழுத்தபோது எனது பிளவுஸ் கிழியும் அளவுக்கு அவர்கள் வன்முறையைக் கையாண்டனர். இதை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றார்.

அதிமுக சட்டமன்ற துணைத் தலைவர் பன்னீர்செல்வம் நிருபர்களிடம் பேசுகையில்,

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு ஏற்பட்டபிறகு பெட்ரோல், கேஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டது. நூல் விலை உயர்வால் 10 லட்சம் பேர் வேலை இழந்திவிக்கிறார்கள்.

மத்திய அரசும், மாநில அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. திமுக ஆட்சியில் மின்சார பற்றாக்குறையால் அனைத்து மக்களும் துன்பப்படுகிறார்கள். எனவே மத்திய- மாநில அரசுகள் பதவி விலக வலியுறுத்தி இன்று நடைபெறும் பொது வேலை நிறுத்தம் குறித்து பேசுவதற்காகத்தான் சட்டசபையில் அனுமதி கேட்டோம். ஆனால் எங்களுக்கு அனுமதி தரப்படவில்லை.

'வயிற்றில் குத்தினர்-சேலை, ஜாக்கெட் கிழிந்தது':

சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்ற உத்தரவிட்டார். அவைக் காவலர்கள் சிலர் முரட்டுத்தனமாக நடந்து கொண்டார்கள். பெண் எம்.எல்.ஏக்களை வெளியேற்றியபோது அவர்களது வயிற்றில் குத்திவிட்டனர். இதில் சேலை, ஜாக்கெட் கிழிந்துவிட்டது என்றார்.

புதுச்சேரியில் வெளிநடப்பு:

அதே போல புதுச்சேரி சட்டசபையில் இதே விவகாரம் குறித்து கேள்வி நேரத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்ற கோரிக்கையை சபாநாயகர் ஏற்காததால் அதிமுக, மதிமுக, இந்திய கம்யூனி்ஸ்ட் எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X