For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஸ்ரீபெரும்புதூரில் தீக்குளித்த அதிமுக தொண்டர் மரணம்

Google Oneindia Tamil News

சென்னை: நேற்று நடந்த முழு அடைப்பு போராட்டத்தின்போது ஸ்ரீபெரும்புதூரில் தீக்குளித்த அதிமுக தொண்டர் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.

விலைவாசி உயர்வை கண்டித்து, நேற்று இடதுசாரிகள், அ.தி.மு.க. மற்றும் ம.தி.முக. போன்ற கட்சிகள் முழு அடைப்பை நடத்தினார்கள். ஸ்ரீபெரும்புதூரிலும் இந்த போராட்டம் நடந்தது. இதில் ஸ்ரீபெரும்புதூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தீவிர தொண்டர் மஸ்தான் (38) என்பவரும் கலந்து கொண்டார்.

ஸ்ரீபெரும்புதூர் பஸ் நிலையம் அருகே சைக்கிள் ரிப்பேர் செய்யும் கடை நடத்தி வந்தார். நேற்று அவர் தனது கடையை திறக்கவில்லை. திறந்து இருந்த கடைகளுக்கு சென்று, கடைகளை அடைக்கும்படி கேட்டுக்கொண்டார்.

பின்னர் பஜாரில், அ.தி.முக. நடத்திய போராட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது திடீரென தனது உடலில் மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

அதிர்ச்சி அடைந்த அதிமுக தொண்டர்கள் உடனடியாக தீயை அணைத்தனர். உடல் முழுக்க கருகியநிலையில் மஸ்தானை சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனைக்குக் கொண்டு வந்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மஸ்தான் உயிரிழந்தார்.

தகவல் அறிந்ததும், அ.தி.முக. பொது செயலாளர் ஜெயலலிதா சார்பில் அவைத்தலைவர் இ. மதுசூதனன், பொருளாளர் ஓ.பன்னீர் செல்வம், தலைமை நிலைய செயலாளர் கே.ஏ. செங்கோட்டையன், அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் டி. ஜெயக்குமார், காஞ்சீபுரம் மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ.யுமான திருத்தணி கோ.அரி மற்றும் அதிமுக நிர்வாகிகள் விரைந்து வந்து மலர் வளையம்வைத்து அஞ்சலி செலுத்தினர்.

மஸ்தானின் தந்தை பெயர் நிஜாம். மஸ்தானுக்கு அமீதா என்ற மனைவியும், முகமது ஆசிப், முகமது ரியாஸ் என்ற 2 மகன்களும், ஆயிஷா என்ற மகளும் உள்ளனர். முகமது ஆசிப் 6-ம் வகுப்பும், முகமது ரியாஸ் 3-வது வகுப்பும், ஆயிஷா 5-ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.

ஜெயல்லிதா அதிர்ச்சி - இரங்கல்

மஸ்தான் மரணத்தைத் தொடர்ந்து ஜெயலலிதா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

காஞ்சீபுரம் மேற்கு மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி, 14-வது வார்டை சேர்ந்த 35 வயதே ஆன என்.மஸ்தான், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடைபெற்ற கடையடைப்பு போராட்டத்தின் போது, தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளித்ததன் காரணமாக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அகால மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு என் மனம் துடிதுடித்தது.

கட்சியின் மீதும், கட்சி தலைமையின் மீதும் மிகுந்த விசுவாசம் வைத்திருக்கும் இதுபோன்ற கட்சி அடலேறுகளின் மரணச் செய்தி மேலும் என்னை வேதனையில் ஆழ்த்துகிறது.

மஸ்தானை இழந்து வாடும் அவரது மனைவி ஆமினா பீவிக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். மேலும், மரணம் அடைந்த மஸ்தான் குடும்பத்திற்கு, கட்சியின் சார்பில் குடும்ப நல நிதியுதவியாக ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்பதையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X