For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சென்னையில் ஆட்டோ பர்மிட்டுக்கு தடை ரத்து! - அமைச்சர் கே என் நேரு

Google Oneindia Tamil News

சென்னை: சென்னையில் ஆட்டோ பெர்மிட் வழங்குவதற்கு கடந்த 12 ஆண்டுகளாக இருந்து வந்த தடை நீக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு சட்டமன்றத்தில் அறிவித்தார்.

தமிழக சட்டப்பேரவையில் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு நேற்று பதில் அளித்து அவர் நேற்று பேசியது:

கடந்த 12 ஆண்டுகாலமாக சென்னையில் ஆட்டோ ரிக்ஷாக்களை பதிவு செய்வதற்கான தடை நடைமுறையில் உள்ளது. சென்னையின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 10 ஆயிரம் புதிய பெர்மிட்டுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. சென்னையில் தற்போது சுமார் 52 ஆயிரம் ஆட்டோக்கள் ஓடுகின்றன. சென்னையைவிட சிறிய நகரங்களான பெங்களூருவில் 78 ஆயிரம் ஆட்டோக்களும், ஐதராபாத்தில் 64 ஆயிரம் ஆட்டோக்களும் ஓடுகின்றன.

அதனால், சென்னையில் கூடுதல் ஆட்டோ ரிக்ஷாக்கள் தேவைப்படுவதை கருத்தில் கொண்டு, ஆட்டோக்கள் பதிவு செய்யப்படுவதற்கான தடையை நீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் ஆட்டோ ரிக்ஷா பெர்மிட்டுகள் தகுதி அடிப்படையில் விண்ணப்பம் செய்வோருக்கு வழங்கப்படும்.

சென்னையில் ஆட்டோ வாங்கும்போது மார்வாடிகளிடம் அதிக பணம் கொடுத்து வாங்கும் நிலை இருக்கிறது. இதில் பல ஆயிரம் ரூபாய் வீணாக செலவாகிறது. எனவே, இது போன்ற பிரச்சினைகள் எதுவும் இல்லாமல், சென்னையில் இனி யார் வேண்டுமானாலும் ஆட்டோ வாங்கலாம். இதற்குரிய உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்படும்.

விபத்துக்கு உடனுக்குடன் இழப்பீடு!

தமிழகத்தில் 20,399 அரசு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தமிழகத்தில் பஸ், மினிபஸ், ஆட்டோ, மேக்சி கேப் உள்ளிட்ட 8 லட்சத்து 33 ஆயிரத்து 948 போக்குவரத்து வாகனங்கள் உள்ளன. அதுபோல், 99 லட்சத்து 69 ஆயிரத்து 598 இருசக்கர வாகனங்கள், 10.40 லட்சம் கார்கள் உள்ளிட்ட 1 கோடியே 13 லட்சத்து 23 ஆயிரத்து 13 வாகனங்கள் உள்ளன. மொத்தத்தில், 1 கோடியே 21 லட்சத்து 56 ஆயிரத்து 961 வாகனங்கள் உள்ளன. ஒரு நாளைக்கு 3,280 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்படுகின்றன.

இந்த ஆட்சி பொறுப்பேற்றபிறகு, 15 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டுள்ளன. இதுதவிர இந்த நிதியாண்டில் 3 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்படும். விபத்து, ஏற்பட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக இழப்பீடு தரும் திட்டமும் அமல்படுத்தப்படும்.

சென்னையில் 3500 மினிபஸ்

தமிழகத்தில் 3,500 புதிய மினி பஸ்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் நடக்கும் வழக்கு முடிந்ததும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சென்னையில் மினி பஸ் இயக்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. குடியிருப்புப் பகுதிகளில் இருந்து அலுவலகம், பஸ் நிலையம் போன்ற இடங்களுக்கு பொதுமக்களை அழைத்துச் செல்லும் இணைப்பு சேவையான, 'கனெக்டிங் சர்வீஸ்' (ஷார்ட் வீல் பஸ்) என்ற பஸ்கள் இயக்கப்படும்.

இது பொதுமக்களுக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கும். அண்ணா பல்கலைக்கழகம் இதற்கான திட்டத்தை தயாரித்து வருகிறது. அவர்களது அறிக்கை கிடைத்ததும், மேல்நடவடிக்கை எடுக்கப்படும்..." என்றார் நேரு.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X