For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பார்வை வந்ததும் முதலில் ஸ்டாலினைத்தான் பார்ப்பேன்: சுரேகா

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: எனக்கு பார்வை மீண்டும் திறந்து கண் திறக்கும்போது முதலில் அந்த துணை முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தான் பார்ப்பேன் என்று மாணவி சுரேகா கூறியுள்ளார்.

காய்ச்சலுக்கு உட்கொண்ட மாத்திரையால் பார்வையிழந்த மாணவி சுரேகாவின் நிலைமையை அறிந்த ஸ்டாலின், அவருக்கு தேவையான அனைத்து சிகிச்சைகளும் கிடைக்க ஏற்பாடுகள் செய்தார்.

சுரேகாவுக்கு ஹைதராபாத்தில் உள்ள பாஸ்டோன் மருத்துவமனையில் லென்ஸ் பொருத்தப்பட இருப்பதால், அங்கு செல்வதற்கு முன், தனக்கு உதவிக்கரம் நீட்டிய ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க விரும்பினார்.

இதையறிந்த ஸ்டாலின் நேற்று மாலை மாணவி சுரேகா, அவரது பெற்றோர் தேவேந்திரன், கலாவதி, சகோதரர் நவீன்குமார் ஆகியோரை தனது இல்லத்தில் சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் மனைவி துர்காவும் உடனிருந்தார்.

மாணவியின் உடல்நலன், அவருக்கு இதுவரை அளிக்கப்பட்ட சிகிச்சை ஆகியவற்றை கேட்டறிந்த ஸ்டாலினும் அவரது மனைவியும் மேற்கொண்டு நடைபெறவுள்ள சிகிச்சைகள் நல்ல முறையில் நடைபெறும் என நம்பிக்கையும், வாழ்த்துக்களும் தெரிவித்தனர்.

சுரேகாவும், குடும்பத்தினரும் ஹைதராபாத் செல்ல ரூ. 10,000த்தை கைச் செலவாகவும் தந்தனர்.

அப்போது சுரேகாவுக்குத் தேவையான மற்ற உதவிகளையும் உடனுக்குடன் செய்து தருமாறு அங்கிருந்த தமிழக அரசின் வழக்கறிஞர் ஹசன் முகம்மது ஜின்னாவிடம் ஸ்டாலின் கூறினார்.

உணர்ச்சி மிகுதியில் சுரேகாவின் குடும்பத்தினர் அழ, அவர்களை ஸ்டாலினின் மனைவி தேற்றினார்.

முன்னதாக நன்றி பெருக்குடன் காலில் விழ முயன்ற சுரேகாவையும் அவரது தாயார் கலாவதியையும் ஸ்டாலின் தடுத்துவிட்டார். யார் காலிலும் நீங்கள் விழ வேண்டிய அவசியமில்லை, யார் காலில் விழவே கூடாது என்று தடுத்தார்.

பின்னர் சுரேகா கூறுகையில், ''எனக்கு சிகிச்சை முடிந்து கண் கட்டை திறக்கும்போது முதலில் உங்களைத் தான் பார்ப்பேன் அங்கிள்'' என்றார்.

அதற்கு ஸ்டாலி்ன், நிச்சயம் சுரேகா.. உனக்கு மீண்டும் பார்வை கிடைத்த செய்திக்காக நான் காத்திருப்பேன். உனக்கு பார்வை கிடைப்பதற்கான அனைத்து செலவுகளையும் நானே ஏற்பேன். உனக்கு எந்தக் கவலையும் வேண்டாம். நீ நன்றாக படி என்று வாழ்த்தி வழியனுப்பி வைத்தார்.

இதையடுத்து மகிழ்ச்சியோடு வெளியே வந்த சுரேகா நிருபர்களிடம் பேசுகையில்,

எனது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்ய முன் வந்துள்ள துணை முதல்வர் அங்கிளுக்கு நன்றி தெரிவிக்க வந்தேன். எனக்கு சிகிச்சை முடிந்து கண் திறக்கும் போது முதலில் துணை முதல்வரைத் தான் பார்ப்பேன் என்றார்.

அவரது தாயார் கலாவதி கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளாக நிம்மதியே இல்லை. சுரேகாவை நினைத்து எங்கள் குடும்பமே அழுது கொண்டுதான் இருந்தோம். துணை முதல்வர் மு.க.ஸ்டாலினின் நடவடிக்கைக்கும், அவரது குடும்பத்தினர் காட்டிய அன்புக்கும் எப்படி நன்றிக் கடன் தீர்க்கப் போகிறோம் என்று தெரியவில்லை என்றார் கண்ணீருடன்.

சிறுத்தை தாக்கி உயிரிழந்த சிறுவர் குடும்பத்துக்கு உதவி:

இந் நிலையில் கோவை மாவட்டம் வால்பாறையில் சிறுத்தை தாக்கி உயிரிழந்த 2 சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1 லட்சம் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

சட்டசபையில் அவர் கூறுகையில், கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த தோனிமுடி எஸ்டேட் பகுதியில் தாத்தா வீட்டில் தங்கியிருந்து பால்வாடி வகுப்பில் பயின்று வந்த பாபுகுமார் என்பவரின் 5 வயது மகன் முகேஸ்வரன் மற்றும் அதே எஸ்டேட்டில் காந்தி என்பவருடைய மகன் மணிசங்கர் ஆகிய இருவரும் சிறுத்தையின் பசிக்கு இரையாகி வேட்டையாடப்பட்டு இறந்த செய்தி பற்றிய விவரங்களை நானும் சேகரித்திருக்கிறேன்.

இந்த உருக்கமான சம்பவம், கொடுமையான சம்பவம். தொடர்ந்து நடக்காமல் இருப்பதற்கும், எச்சரிப்பதற்கும் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தெரிவிப்பதோடு கோவை கலெக்டரின் அறிக்கையை கேட்டிருக்கிறேன்.

அந்த அறிக்கையை பெற்று அந்த சிறுவர்களுடைய குடும்பம் ஒவ்வொன்றுக்கும் தலா 1 லட்சம் ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்றார்.

முன்னதாக வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கூறுகையில், சம்பவம் நடந்த பகுதி 958 சதுர கிலோ மீட்டர் அளவு கொண்ட அடர்ந்த காடாகும். இந்திரா காந்தி தேசிய பூங்கா, புலிகள், யானைகள் சரணாலயம் இங்குள்ளன. வேலி, அகழி அமைத்து சிறுத்தைகள் வருவதை தடுக்க முடியாது. அவை நீண்ட உயரம் தாண்டக்கூடிய ஆற்றல் பெற்றவை.

சிறுத்தை கடித்து பலியான சிறுவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.25,000 நிவாரண உதவி கலெக்டர் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

கோழி, இறைச்சி சாப்பிட்டுவிட்டு கழிவுகளை வீட்டுக்கு வெளியே எறிவதால் சிறுத்தைகள் வருகின்றன. சிறுத்தைகளின் நடமாட்டத்தை கண்காணிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கும் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X