For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

திருமாவளவன் கார் மீது கல்வீசித் தாக்குதல்-காயமின்றி தப்பினார்: 5 பஸ்கள் உடைப்பு

Google Oneindia Tamil News

திருவாரூர்: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி சென்றுவிட்டு திரும்பும் போது விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனின் கார் மீது சிலர் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.இதில் காயமின்றித் தப்பினார் திருமாவளவன்.

மன்னார்குடியில் அம்பேத்கர் சிலை திறப்பு விழா மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில் சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இரவு 9.30 மணிக்கு விழா முடிந்ததும், 10 மணிக்கு மேல் மன்னார்குடியில் இருந்து பட்டுக்கோட்டை சாலையில் உள்ள பரவாக்கோட்டை கிராமத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏற்பாடு செய்திருந்த கொடியேற்று விழாவுக்கு திருமாவளவன் சென்று கொண்டிருந்தார்.

அப்போது பரவாக்கோட்டை எல்லையில் திருமாவளவன் மற்றும் அவருடன் வந்த கார்களை ஒரு கும்பல் தாக்கியது. இதில் திருமாவளவனின் கார் கண்ணாடிகள் உடைந்தன. அவர் கார் பின்னால் வந்த 4 கார்களின் கண்ணாடிகளும் உடைந்தன. இதில் பலர் காயம் அடைந்தனர்.

ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றவுடன் திருமாவளவன் கொடியேற்று விழாவில் பங்கேற்காமல் சென்று விட்டார்.

இச்சம்பவத்தை அடுத்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். திருமாவளவனின் கார் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5 பஸ்கள் உடைப்பு:

இந்த சம்பவத்தை கண்டித்து பட்டுக்கோட்டை, தஞ்சாவூர், மதுக்கூர், ஒரத்தநாடு, சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர் போன்ற இடங்களில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 5 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதுதொடர்பாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன், சுரேஷ், சேகர், பிரபு, ஜெகதீசன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருசசெந்தூரில் விடுதலைச் .சிறுத்தைகள் மறியல்:

திருமாவளவன் கார் மீது கல்வீசியதை கண்டித்து திருச்செந்தூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் 33 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருச்செந்தூர் வ.உ.சி. திடலில் விடுதலை சிறுத்தைகள் அமைப்பினர் தமிழினியன் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். திருச்செந்தூர் ரவுண்டானா அருகில் இளஞ்சிறுத்தை பாசறை மாவட்ட செயலாளர் முரசு தமிழப்பன் தலைமையில் அதன் நிர்வாகிகள் இன்று காலை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சம்பவம் பற்றி ஏடிஎஸ்பி மாஸ்டர் லியோ, சாத்தான்குளம் டிஎஸ்பி ஸ்டான்லி, திருச்செந்தூர் இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ், ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியிலில் ஈடுபட்ட 33 பேர்களை கைது செய்தனர்.

தேவர் சிலைக்கு பாதுகாப்பு:

திருமாவளவன் கார் மீது கல் வீசியதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நெல்லையில் உள்ள தேவர் சிலைக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நெல்லை மட்டுமல்லாமல் தென் தமிழகம் முழுவதும் தேவர் சிலைகளுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவர் சிலைகளுக்கும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சந்திப்பு தேவர் சிலை, கருங்குளம், சங்கரன்கோவில் உள்ளிட்ட இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வோம்-திருமா:

இந் நிலையில் திருமாவளவன் விடுத்துள்ள மே தின வாழ்த்து செய்தியில்,

உழைக்கும் வர்க்கத்தின் உன்னதத் திருநாளாம் மே நாள் உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக, தொழிலாளர் வர்க்கம் சுரண்டும் ஆதிக்க வர்க்கத்தின் கோரப்பிடியிலிருந்து தம்மை விடுவித்துக் கொண்ட உரிமை நாளே மே நாளாகும்.

உழைப்புக்கு காலவரையறையன்றி சுரண்டும் ஆளும் வர்க்கம் தொழிலாளர்களை, உழைக்கும் வர்க்கத்தை அடிமைப்படுத்தி உழைப்பை உறிஞ்சிக் கொளுத்த காலகட்டத்தில், உழைப்பதற்கு காலவரம்பு வேண்டுமென கோரிக்கை எழுப்பி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரமே வேலை செய்ய முடியும் என்ற உரிமையை வென்றெடுத்த நாள்தான் மே நாளாகும்.

இந்த உரிமையை வென்றெடுப்பதற்கான களத்தில் சிகாக்கோ நகர வீதிகளில் ரத்தம் சிந்திய தொழிலாளர்களும் இவ்வுரிமைக்கான களத்தில் களப்பலியானவர்களுக்கும் இந்நாளில் விடுதலைச் சிறுத்தைகள் வீர வணக்கம் செலுத்துகிறது.

இத்துடன் சுரண்டும் ஆளும் வர்க்கத்தின் ஆதிக்க வெறிக் கொடுமைகளிலிருந்து ஒட்டுமொத்த உழைக்கும் வர்க்கத்தையும் மீட்பதற்கான விடுதலைப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவோமென உறுதியேற்போம் என்று கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X