For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கருணாநிதி பேரனுக்கு சீட் தர மறுத்த ஒய்ஜி மகேந்திரன் பள்ளி! - முதல்வரே வெளியிட்ட தகவல்

By Chakra
Google Oneindia Tamil News

சென்னை: அமைச்சர் வீட்டுப்பிள்ளையென்றாலும் பள்ளியில் சட்டப்படிதான் சீட் தருவோம் என்று கூறி, என் பேரனுக்கே சீட் தர மறுத்தவர் ஒய்.ஜி. மகேந்திரன் என்றார் முதல்வர் கருணாநிதி.

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரன் மேடை நாடகங்களில் தொடர்ந்து 50 ஆண்டு காலம் நடித்து வருகிறார். அவருக்கு இது பொன்விழா ஆண்டு. அதைக் கொண்டாடும் வகையில் அவருக்கு பாராட்டு விழா சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது.

விழாவிற்கு முதல்வர் கருணாநிதி தலைமை தாங்கிப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

ஒய்.ஜி. மகேந்திரன், அவருடைய குடும்பத்தார், அவருடைய தந்தை, தாய் இவர்கள் எல்லாம் எனக்கு நீண்ட காலமாகத் தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள். கலை உலகத்திலும் சரி, அரசியல் உலகத்திலும் சரி அவர்களோடு நெருங்கிப் பழகியவன்தான் நான்.

இந்த விழாவிற்கு என்னை மகேந்திரன் அழைத்த போதுகூட, அவருடைய தாயார் மற்றும் அவருடைய குடும்பத்தார் எல்லாம் வீட்டிற்கு வந்திருந்தார்கள். மிகவும் உரிமையோடு 'நீங்கள் வந்து தான் தீரவேண்டும்' என்று அவர்கள் கேட்டபோது, அவர்களுடைய காதிலே விழாமல் என்னுடைய மனைவி- 'என் பேரனுக்கு ஒரு சீட் நீங்கள் பள்ளியிலே தர முடியாது என்று மறுத்துவிட்டீர்கள். இப்போது வந்து அவரைக் கூப்பிடுகிறீர்களே' என்று சொன்னபோது,

நான் அவருடைய வாயைப் பொத்தி, 'சும்மா இரு' என்று, இப்போது இந்த நாடகத்திலே பார்த்தது மாதிரி, மனைவியின் வாயைப் பொத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

இதை அவர் சொல்வதற்கு என்ன காரணம் என்றால், நான் அதை ரசித்தேன், அவர் சொன்னதை அல்ல- அவ்வளவு கண்டிப்பாக, அமைச்சர் வீட்டுப் பிள்ளையாக இருந்தாலும், பேரனாக இருந்தாலும் சட்டப்படி தான் நாங்கள் பள்ளியில் இடம் தருவோம், நடந்து கொள்வோம் என்பதை அவ்வளவு கண்டிப்பாக கடைப்பிடித்த காரணத்தால் தான்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த தம்பி ஒய்.ஜி.மகேந்திரன் கண்டிப்பாக இருந்த சிவாஜி உருவாக்கிய அந்த 'பிரஸ்டிஜ் பத்மநாபன்' கதாபாத்திரத்தை இங்கே தத்ரூபமாக நடித்துக் காட்ட முடிந்தது.

இதை நடித்து தமிழ்நாட்டில் பேரும் புகழும் பெற்றவர் என்னுடைய அருமை நண்பர் சிவாஜி கணேசன். அவர் நடித்த பாத்திரத்தையேற்றுக் கொண்டு இன்றைக்கு இந்த மேடையிலே அதை நடித்துக் காட்ட முன்வருவது உள்ளபடியே அவர் சொல்கிறார்- இதை 'குருதட்சணை'யாக நடத்துகிறேன் என்று ஒய்.ஜி.மகேந்திரன் என்னிடத்திலே குறிப்பிட்டார்.

அந்த குரு காணிக்கையை சிறப்பான முறையிலே அவர் செலுத்தியிருக்கிறார் என்றுதான் நான் நம்புகிறேன்.

நாடகம் வேறு, சினிமா வேறு. நாடகத்தில் தவறுகளைத் திருத்திக் கொள்ள முடியாது. மறுநாள் தான் திருத்தலாம். ஆனால் திரைப்படம் அப்படியல்ல. படத்திலே நடிக்கும்போது ஒரு தவறு ஏற்பட்டுவிட்டால் அடுத்த கணம், அதை வெட்டி விட்டு வேறொரு காட்சியை சேர்த்துக் கொள்ளலாம்.

நாடகங்களில் தட்டியோரம் நின்று கொண்டு 'பிராம்ட்' செய்கிறவர்கள்- பாடம் சொல்பவர்கள் இருப்பார்கள். அந்தப் பாடத்தை காதிலே வாங்கிக் கொண்டே பேச வேண்டிய வசனத்தைப் பேசுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால், நானே 'பிராம்டராக' இருந்த பல நாடகங்களை நடத்தியிருக்கிறேன்.

'தூக்குமேடை' போன்ற நாடகங்கள். இதையெல்லாம் நான் குறிப்பிடுவதற்குக் காரணம், கலை உலகம் என்பது எவ்வளவு கஷ்ட- நஷ்டங்களுக்கு இடையே வளர்ந்து இன்றைக்கு மென்மையான ரோஜா தோட்டமாக மாறியிருக்கிறது என்பதை நீங்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

அது ரோஜா தோட்டமாக மாறினாலும், மல்லிகைத் தோட்டமாக மாறினாலும் நாங்கள் முரட்டுத்தனமாகத்தான் எங்களை அர்ப்பணித்துக் கொள்வோம் என்று சொல்கின்ற கலைஞானிகளும் இருக்கிறார்கள்.

அது எவ்வளவு மென்மையாக இருந்தாலும் அதனை மென்மையாக இருப்பதற்கு நாங்கள் விட மாட்டோம், எங்கள் உயிரைக் கொடுத்தாவது இந்தக் கலையைக் காப்பாற்றுவோம் என்று சொல்கின்ற அளவிற்கு முரண்டு பிடிக்கின்ற கலைஞானி கமல்ஹாசன் போன்றவர்களும் இருக்கிறார்கள். அதை நான் பாராட்டுகிறேன். கலைக்காக தங்களை அர்ப்பணித்துக் கொள்பவர்களுக்கு அந்த உணர்ச்சி ஏற்படுவதிலே ஆச்சர்யம் இல்லை.

அப்படிப்பட்ட கலையுலகத்தில் எல்லோருடைய பாராட்டுதல்களையும் பெறக் கூடியவராக நம்முடைய ஒய்.ஜி. மகேந்திரன் இன்றைக்கு இந்த நாடகத்தை இங்கே நடித்துக் காட்டியிருக்கிறார். பாதி நாடகம் தான் பார்த்திருக்கிறோம். நான் முழு நாடகத்தையும் இருந்து பார்த்து விட்டுச் செல்வதற்கான வசதியில்லை.

காரணம் காலையிலிருந்து எனக்கு கண் வலி. கண் வலிக்கு மருந்தாக இந்த நாடகம் அமையும் என்ற எதிர்பார்ப்போடு தான் வந்தேன். மருந்தாக அமைந்திருக்கிறது என்பதிலே மறுபேச்சுக்கு இடம் இல்லை.

மகேந்திரன் பட உலகத்திலும், பல நேரங்களிலே காட்சியளித்து நம்மையெல்லாம் மகிழ்வித்தவர். இங்கே அவர் சிவாஜியாக- அவருடைய பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார் என்றால், நான் ஆச்சரியப்பட்டேன். அந்த அளவுக்கு நடிக்க முடியுமா என்ற எதிர்பார்ப்போடு தான் வந்து அமர்ந்தேன். ஆனால் திருப்தியோடு நான் இங்கிருந்து திரும்புகிறேன் என்பதை எடுத்துக்காட்ட விரும்புகிறேன்.

இந்த நாடகம் உள்ளபடியே 'வியட்நாம் வீடு' போல அல்ல- 'வியட்நாம் வீடேதான்' என்று சொல்லி விடைபெறுகிறேன்..." என்றார் கருணாநிதி.

விழாவில் இயக்குனர் கே.பாலசந்தர், கவிஞர் வைரமுத்து ஆகியோரும் பேசினார்கள். ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி, அனைவரையும் வரவேற்று பேசினார். விழா முடிவில், ஒய்.ஜி.மகேந்திரன் நன்றி கூறினார்.

மத்திய அமைச்சர் ராசா, மாநில அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மேயர் மா.சுப்பிரமணியன், திருமதி ஒய்.ஜி.பார்த்தசாரதி, இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன், பின்னணி பாடகர் பி.பி.சீனிவாஸ், டான்ஸ் மாஸ்டர் ரகுராம், நடிகர்கள் விஜயகுமார், சார்லி, கிரேசி மோகன், நடிகை சச்சு ஆகியோர் கலந்துகொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X