For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ராஜா விலகுவாரா?: நிருபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தியுடன் வரவில்லை - கருணாநிதி

Google Oneindia Tamil News

Karunanidhi
டெல்லி: 2ஜி ஏல ஊழல் தொடர்பாக மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராஜா பதவி விலகுவாரா என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை நான் கொண்டுவரவில்லைஎன்று முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.

மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அமைந்த பின்னர் முதல் முறையாக முதல்வர் டெல்லி சென்றுள்ளார். இன்று அதிகாலை சென்னையிலிருந்து கிளம்பி அவர் டெல்லி சென்றடைந்தார். அவருக்கு அங்கு திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர்.

பிரதீபா பாட்டீலுக்கு அழைப்பு

முதலில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலை முதல்வர் சந்தித்தார். குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று பிரதீபா பாட்டீலை சந்தித்த முதல்வர் கருணாநிதி அவரிடம், ஜூன் 23ம் தேதி தொடங்கும் கோவை உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் பங்கேற்குமாறு கோரி அழைப்பிதழைக் கொடுத்து முறைப்படி அழைப்பு விடுத்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் கருணாநிதி. அப்போது அவர் கூறுகையில், நாளை நடைபெறும் திட்டக்குழுவில் கலந்து கொள்வதற்காகவும், கோவையில் நடைபெறும் உலக செம்மொழி மாநாட்டிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பிதழ் வழங்கவும் தான் டெல்லி வந்துள்ளேன்.

தமிழக அரசின் அழைப்பை ஏற்று, செம்மொழி மாநாட்டை துவக்கி வைத்து அதில் கலந்து கொள்வதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார் என்றார்.

பின்னர் செய்தியாளர்கள், மத்திய அமைச்சர் ராஜா மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை ஏற்று அவர் பதவி விலகுவாரா என கேட்டதற்கு, உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தியை நான் கொண்டு வரவில்லை என பதிலளித்தார்.

மத்திய அமைச்சர் அழகிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்காதது குறித்தும், சபாநாயகர் அழைத்தும் நேரில் சென்று சந்திக்காதது குறித்தும் கருத்து கேட்டதற்கு, அதைப் பற்றி அழகிரியிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்றார் முதல்வர்.

சேலம் உருக்காலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை அளிப்பதாக தெரிவித்திருப்பது குறித்தும், பிரதமரிடம் இது பற்றி ஆலோசனை நடத்துவீர்களா என கேட்டதற்கு, கட்டாயம் பேசுவேன் , திட்டக்குழு கூட்டத்தில் தமிழக திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குமாறு பிரதமரிடம் வலியுறுத்துவேன். நாளை திட்டக்குழு கூட்டம் முடிவடைந்த பிறகு எந்த திட்டத்திற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து தெரிவிக்கிறேன்.

தமிழகத்தில் நிலவி வரும் மின்வெட்டு குறித்து வெள்ளை அறிக்கை அளிப்பீர்களா என கேட்டதற்கு, வெள்ளை அறிக்கை என்ன கறுப்பு அறிக்கையே அளிக்க தயார் என பதிலளித்தார் கருணாநிதி.

இன்று மாலை ரூ.10 கோடி செலவில் திராவிட கழகத்தின் சார்பில் கட்டப்பட்டுள்ள 5 மாடி பெரியார் மையத்தை திறந்துவைக்கிறார்.

பெரியார் சிலையை மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும், முதல்வர் கருணாநிதி பெயரால் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் கணினி' மையத்தை மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லாவும், சந்திரஜித் நூலகத்தை முன்னாள் கல்வி அமைச்சர் டி.பி.யாதவும், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். பயிற்சி நிலையத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும் திறந்துவைக்கிறார்கள்.

நாளை காலையில் பிரதமர் மன்மோகன்சிங்கையும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தியையும் சந்தித்து உலக செம்மொழி மாநாட்டு அழைப்பிதழை கொடுத்து, இதில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைக்கிறார். இதுதவிர, தமிழகத்துக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் குறித்தும் ஆலோசனை நடத்துகிறார்.

நாளை மாலை மத்திய திட்டக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு தமிழகத்துக்கு இந்த ஆண்டுக்கான திட்ட ஒதுக்கீடு குறித்து விவாதித்து, தமிழக அரசு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைக்கிறார். நாளை இரவு முதல்வர் சென்னை திரும்புகிறார்.

ராஜா-மு.க.அழகிரி- கனிமொழி

திட்டக் குழுக் கூட்டம், பெரியார் மையத் திறப்பு ஆகியவை முதல்வரின் அதிகாரப்பூர்வ நிகழ்ச்சிகள் என்றாலும் வேறு சில முக்கிய ஆலோசனைகளுக்காகவும் அவர் டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

2ஜி ஏல விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜாவின் பெயர் பலமாக அடிபடுகிறது. அவர் முறைகேடு புரிந்த்தற்கான ஆதாரங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. மேலும், இந்த விவகாரத்தில் முதல்வரின் மகளும், ராஜ்யசபா உறுப்பினருமான கனிமொழியின் பெயரும் அடிபடுகிறது. இதுகுறித்து பிரதமர் மற்றும் சோனியாவுடன் கருணாநிதி ஆலோசனை நடத்துவார் எனத் தெரிகிறது.

இன்னொரு முக்கியப் பிரச்சினை, லோக்சபாவுக்கு மு.க.அழகிரி வருவதில்லை என்பது. இதனால் அரசுக்கு பெரும் தர்மசங்கடம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் தரப்பிலும், பிரதமர் தரப்பிலும் கருணாநிதியுடன் முக்கிய ஆலோசனை நடத்தப்படும் எனத் தெரிகிறது.

மூன்றாவது தமிழக சட்டசபைக்கு முன்கூட்டியே தேர்தலை நடத்த முதல்வர் கருதுகிறார். அடுத்த ஆண்டு மே மாதம்தான் தமிழக சட்டசபைக்கு பொதுத் தேர்தல் வருகிறது. ஆனால் அதை முன்கூட்டியே வருகிற நவம்பர் மாதத்தில் நடத்தி விட முதல்வர் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தேர்தலுக்கு முன்பே திமுக தரப்பில் உள்ள பல்வேறு பிரச்சினைகளை காங்கிரஸுடன் பேசி சரி செய்து விடவேண்டும் என்பதில் முதல்வர் தீர்மானமாக இருப்பதாக தெரிகிறது. இதற்கு தனது டெல்லி பயணத்தை முதல்வர் பயன்படுத்திக்கொள்ளவிருப்பதாகவும் கருதப்படுகிறது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X