For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஒருமைப்பாடு ஒரு வழிப் பாதையாக ஆகக் கூடாது: கருணாநிதி எச்சரிக்கை

Google Oneindia Tamil News

Karunanidhi
டெல்லி: தமிழ்நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, இன்னொரு மாநிலம் தண்ணீரை வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தால், அது வேடிக்கை காட்டுவதைவிட அப்படி வேடிக்கை காட்டுவதையும் அதனால் வேதனைப்படுகின்ற தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டு, அந்த வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பது இன்னும் தவறு. நான் இந்திய நாட்டினுடைய தலைநகரத்திலே இருந்து சொல்கின்றேன்; ஒருமைப்பாடு ஒருவழிப்பாதையாக ஆகக்கூடாது என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி.

டெல்லியில் ரூ.10 கோடி மதிப்பில் பெரியார் மையம் கட்டப்பட்டுள்ளது. இதை முதல்வர் கருணாநிதி நேற்று மாலை நடந்த விழாவில் திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது முதல்வர் பேசியதாவது

புது டெல்லியில் பெரியார் மையம் கொண்டிருக்கிறார். என்று தம்பி திருமாவளவன் இங்கே உரைத்தார். நான் அதை வழிமொழிகிறேன். ஏனென்றால், வழிமொழிகிறேன் என்று சொல்வதற்கு காரணம், நான் நினைத்ததை அவர் உரைத்தார். எனவே, நான் அதை வழிமொழிகிறேன்.

பெரியார் தமிழ்நாட்டு எல்லையை தாண்ட மாட்டார். தாண்டினாலும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா என்கின்ற அளவோடு நின்றுவிடுவார் என்று எதிர்பார்த்த பழமைவாதிகளுக்கு, மதவாதிகளுக்கு வியப்பூட்டும் வகையìலே நம்முடைய ஆருயிர் இளவல் தமிழர் தலைவர் கி.வீரமணியின் அயராத முயற்சியினாலும், தொடர்ந்த தொண்டாலும், அறவழி பணியினாலும், டெல்லி பட்டணத்திலேயே பெரியார் மையம் கொண்டு இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஏன் 5 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது என்றும் சொல்லலாம்.

மையம் கொண்டும் புயல் வீசினால் அதனால், புயல் வீசிய பிறகு ஏற்படுகின்ற சேதாரங்கள் சில இருந்தாலும் கூட விளைவு, அதன் பிறகு உன்னதமாக வளர்ச்சி, மேம்பாடு என்ற நிலையில் அமையும் என்பதை அனைவரும் அறிவோம். நம்முடைய பெரு மதிப்பிற்குரிய மத்திய அமைச்சர் பரூக் அப்துல்லா பேசும்போது, நாம் தேசிய அளவுக்கு பணியாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார். அவருடைய தந்தை ஷேக் அப்துல்லாவும் என்னிடத்தில் இதை பலமுறை சொல்லி இருக்கிறார்.

ஆனால், காஷ்மீரில் மாநில சுயாட்சி கருத்தரங்கம் ஒன்றை நம்முடைய பரூக் அப்துல்லா நடத்தினார். அதைத் தொடர்ந்து கொல்கத்தாவிலே மறைந்த முதல்வர் ஜோதி பாசு நடத்தினார். சென்னையிலும் நடத்தி இருக்கிறோம். அந்த நம்முடைய மாநாடுகளுக்கு எல்லாம் பரூக் அப்துல்லாவும் வந்துள்ளார். அதேபோலவே, வங்கத்தில் உள்ள தலைவர்கள் அஜய் முகர்ஜி போன்றவர்கள், கர்நாடகத்தில் உள்ள தலைவர்கள் எல்லாம் வந்திருக்கிறார்கள். வந்தவர்கள் அந்த மாநாட்டு அளவிலே சிறப்பித்து சென்றார்களே அல்லாமல் அங்கு எடுத்துச்சொன்ன கொள்கைகளை பரப்பிட வேண்டும் என்ற அந்த முயற்சியில் ஈடுபடவும் இல்லை. ஈடுபடுவதற்கான நிலைமைகளும் உருவாகவில்லை.

அதனால், டெல்லியிலே மையம் கொண்ட பெரியார் மற்ற இடங்களில் எல்லாம் அந்த தாக்கத்தை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை உருவாகி இருக்கிறது. எல்லா இடங்களிலும் பெரியாருடைய தாக்கம் இந்த அலைகள், இந்த வேகம், இந்த செயல் செல்ல வேண்டும். அப்படி செல்கிற காரணத்தால் இளைய தலைமுறை, இனிவரும் காலம் இந்தியா என்றால் என்ன? இந்தியாவில் நாம் யார்? இந்தியாவில் இருக்கிற மாநிலங்களில் வாழ்கின்றவர்கள் ஒரு மாநிலத்திலே உள்ளவர்களுக்கு இன்னொரு மாநிலத்திலே உள்ளவர்கள் முரண் பட்டவர்களா? என்ற கேள்விக்கு எல்லாம் விளக்கம் தரக்கூடிய சூழ்நிலை ஏற்படும்.

நான் என்னுடைய கவலையை இங்கே சொல்கிறேன். தமிழ்நாட்டினுடைய முதல்வராக நான் இருக்கிறேன். ஆனால் தமிழ்நாட்டிற்கு எல்லா வளமும் உண்டு. ஆனால் நீர் வளம் குறைவு. பக்கத்திலே இருக்கின்ற கேரளா, ஆந்திரா, கர்நாடகா, இந்த மாநிலங்கள் நீர்வளம் நிரம்பியவை. பக்கத்திலே இருக்கின்ற அந்த நீர்வளத்தைத்தான் பெற்று தமிழ்நாடு வாழ வேண்டியிருக்கிறது. ஆனால், தங்களுடைய தேவைக்கு அதிகமாக இருக்கின்ற தண்ணீரை தமிழகத்துக்கு தரக்கூடிய மனோபாவம் - என்ன காரணத்தாலோ பக்கத்து மாநிலங்களிலே உள்ள சிலருக்கு ஏற்படுவதில்லை.

நான் இந்திய நாட்டினுடைய தலைநகரத்திலே இருந்து சொல்கின்றேன்; ஒருமைப்பாடு ஒருவழிப்பாதையாக ஆகக்கூடாது! ஒருமைப்பாட்டில் எல்லா மாநிலங்களும் சகோதர மாநிலங்களாக ஒன்றுக்கொன்று உதவுகின்ற மாநிலங்களாக இருந்தால்தான் அந்த ஒருமைப்பாடு சீரானதாக, சிறப்பானதாக கருதப்படமுடியும். பக்கத்திலே இருக்கின்ற தமிழ்நாட்டு மக்களை பட்டினி போட்டுவிட்டு, இன்னொரு மாநிலம் தண்ணீரை வைத்துக் கொண்டு வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தால், அது வேடிக்கை காட்டுவதைவிட அப்படி வேடிக்கை காட்டுவதையும் அதனால் வேதனைப்படுகின்ற தமிழ்நாட்டையும் பார்த்துக் கொண்டு, அந்த வேடிக்கையை ரசித்துக் கொண்டிருப்பது இன்னும் தவறு.

நான் தலைநகரத்திலே இருந்து மீண்டும் சொல்கின்றேன்; இந்திய பேரரசு இனியாவது இந்த மாநிலங்களில் ஏற்படுகின்ற தகராறுகளை உன்னிப்பாகக் கவனித்து "அவர்கள் அடித்துக்கொண்டு அவர்களாக வரட்டும்'' என்று இல்லாமல் "நமக்கும் பொறுப்பு உண்டு'' என்ற முறையிலே மத்திய அரசு அதிலே தலையிட்டு ஆவன செய்ய வேண்டும்.

இந்த மையம் எல்லா வகையிலும் ஓங்கி வளர்ந்து, உயர்ந்த கொள்கைகளை இந்த வட்டாரத்திலே பரப்பும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. இங்கே இந்த விழாவில் இரண்டு சிறுவர்கள், சிறுமிகள் ஒரு லட்ச ரூபாய் என்றும், இன்னும் குறைவாகவும், அதிகமாகவும் நன்கொடைகளைத் தந்தார்கள் என்றால் என்ன காரணம்? இந்த மையம் மேலும் பலமாக விளங்க வேண்டும் என்பதற்காகத்தான்! நானும் கடமைப்பட்டிருக்கிறேன் குரு தட்சணை வழங்குவதற்கு.

"திராவிடர் கழகமும், திராவிடர் முன்னேற்ற கழகமும் இரட்டை குழல் துப்பாக்கி என்று நண்பர் பரூக் அப்துல்லாவும் மற்றவர்களும் பேசும்பொழுது சுட்டிக் காட்டினார்கள் - என்னையும், வீரமணியையும் இந்த இயக்கத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொன்னார்கள். இரட்டைக் குழல் துப்பாக்கி என வெறுமனே பேசிக்கொண்டிருந்தால் மட்டும் போதாது. காரியங்களைச் சாதிக்க வேண்டும்.

அந்தக் காரியங்கள் சில நேரங்களில் கடுமையாகத் தோன்றினாலும், பல நேரங்களிலே மிகக் கனிந்து விட்டாலும், மக்களிடத்திலே ஐயப்பாடுகள் எழும், அவற்றை போக்குகின்ற அளவிற்கு இந்த இயக்கம் தொடர்ந்து அரசியலிலும், சமுதாயத்திலும், தொண்டாற்ற வேண்டும் என்பது தான் என்னுடைய ஆசை. தொண்டாற்றும் என்பதை தஞ்சையிலே அல்ல, திருச்சியிலே அல்ல, சென்னையிலே அல்ல - இந்திய நாட்டின் தலைநகரமாம் டெல்லியிலே நான் அறிவிக்கின்றேன்.

இரு இயக்கங்களும் இணைந்து தொண்டாற்றி - எங்களுடைய அரசியல் கூறுபாடுகளால் ஏற்படுகின்ற நன்மை என்ன? சமுதாயப் பணிகளால் ஏற்படுகின்ற நன்மை என்ன? என்பதை இருசாராரும் இணைந்து தந்தாலும், அதை ஒருசாரார் சொல்வதைப் போல ஏற்றுக்கொள்ளக் கூடிய மனப்பக்குவத்தை இந்திய நாட்டு மக்கள் அனைவரும் அடையவேண்டும் என்பதுதான் இந்த நாளில் நான் எதிர்பார்க்கின்ற சூளுரையாகும்.

தந்தை பெரியாரின் வாழ்க்கையில், நினைத்தால், திரும்பப் படித்தால், நமக்கே மயக்கம் வருகின்ற அளவிற்கு அவர் பணியாற்றியிருக்கின்றார். அவர் வாழ்ந்த நாட்கள் 34 ஆயிரத்து 433. அந்த 34 ஆயிரத்து 433 நாட்களில் பெரியார் சுற்றுப்பயணம் செய்த நாட்கள் 8 ஆயிரத்து 600 நாட்கள். பயணம் செய்த தூரம் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோ மீட்டர். இன்றைக்கு நான் தங்கியிருக்கின்ற டெல்லி பட்டணத்திலே இருந்து இங்கே வருவதற்கு நேரம் ஆக ஆக என்னை இங்கே அழைத்து வந்த நம்முடைய நண்பர்களிடத்திலும், கார் டிரைவரிடமும் இன்னும் எத்தனை கிலோ மீட்டரப்பா என்று கேட்டுக் கொண்டிருந்தேன். காரணம் இந்த தொலைவே எனக்கு சற்று தொல்லையாகத் தெரிந்தது.

ஆனால், பெரியார் 13 லட்சத்து 13 ஆயிரம் கிலோ மீட்டர் சுற்றுப்பயணம் செய்திருக்கின்றார். பேசிய நேரம் 21 ஆயிரத்து 400 மணி. பேச்சுக்கள் அனைத்தையும் ஒலிபரப்பினாலும் ஒரு iகம், அவர்களுடைய பேச்சுக்கள் அனைத்தையும் ஒலிபரப்பினாலும் அந்த ஒலிபரப்புத் தொடங்கி முடிவதற்கு இரண்டு ஆண்டுகள் ஐந்து மாதம் பதினொரு நாட்கள் ஆகும்.

பெரியாருடைய திரைப்படத்தை நம்முடைய இளவல் வீரமணியின் பெரும் முயற்சிகளால் வெளியிட்ட போது, நான் அந்தப் படத்தைப் பார்த்தேன். அதை வெளியிடுவதற்கு இன்னும் சில ஏற்பாடுகள் தேவையானதாக இருந்தது. அதனால் வீரமணி அவர்களிடத்திலே நானே "என்ன செய்ய வேண்டும்?'' என்று கேட்டேன். "உங்களால் ஆன உதவியைச் செய்யலாம்'' என்று சொன்னார்.

நானே வலியச் சென்று, அந்தப் படத்தை மேலும் சிறப்புடன் ஆக்குவதற்கும் வெளியிடுவதற்கும் 95 லட்ச ரூபாயை நான் அந்தப் படத்திற்காக அரசின் சார்பாக தந்தேன். சிலபேர் கேட்டார்கள், "எப்படி பெரியார் படத்திற்காக 95 லட்ச ரூபாயை அரசாங்கப் பணத்தைத் தரலாம்?'' என்று கேட்டார்கள். இப்படி தலைவர்களுடைய படத்தை வெளியிடுவதற்கு அரசாங்கத்தினுடைய பணம் செலவழிக்கப்பட்ட வரலாறு எல்லாம் இருக்கிறது என்பதை எடுத்துக் காட்டினேன். படம் வெளிவந்தது, பெரும் வெற்றியினைப் பெற்றது என்பதை நீங்கள் எல்லாம் அறிவீர்கள். படம் வெற்றி பெற்றால் மாத்திரம் போதாது, படத்தினுடைய கதாநாயகன் "பெரியார்'' சொன்ன கருத்துக்கள் வெற்றி பெற்றதா என்பது தான் முக்கியம்.

பெரியார் பெயரை மாத்திரம் சொல்லிக்கொண்டு கோயிலுக்குப் போய்க் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்யும் நன்றி ஆகாது. பெரியார் பெயரைச் சொல்லிக் கொண்டு வாஸ்து' பார்த்துக் கொண்டிருந்தால், அது பெரியாருக்குச் செய்கின்ற நன்றி ஆகாது. பெரியாருடைய கொள்கையை உண்மையிலே மனதிலே பதியவைத்துக் கொண்டிருந்தால், அவன் நாத்திகவாதியாக இருந்தாலும், அவன் பகுத்தறிவுவாதியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் இரட்டை மனிதனாக இருக்கக் கூடாது. இதுதான் இந்த பெரியார் மைய திறப்பு விழாவிலே கண்டிப்பாக அரசியல் துறையிலே இருக்கின்ற என்னுடைய கழக தோழர்களுக்கும் நான் சொல்லுகின்ற வேண்டுகோளாகும். இன்னும் சொல்லப் போனால் கட்டளையாகும்.

95 லட்ச ரூபாயை பெரியார் திரைப்படத்திற்கு அன்றைக்கு கொடுத்தேன், காணிக்கை! இந்த மையத்திற்கு மேலும் ரூ.5 லட்சம் கொடுத்து இந்தக் காணிக்கையை ஒரு கோடி ரூபாயாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று வீரமணியை கேட்டுக் கொள்கிறேன். இந்த ஐந்து லட்ச ரூபாயை எங்கேயிருந்து கொடுப்பது அரசாங்கத்திலே இருந்து கொடுக்கிறேனா அல்லது எங்கள் கட்சியிலிருந்து கொடுக்கிறேனா அல்லது நானே தனிப்பட்ட முறையிலே கொடுக்கிறேனா என்பதையெல்லாம் நான் சென்னைக்கு சென்ற பிறகு அறிவிப்பேன் என்றார் கருணாநிதி.

நிகழ்ச்சியில் தி.க. தலைவர் கி.வீரமணி, மத்திய அமைச்சர்கள் பரூக் அப்துல்லா, ஜி.கே.வாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.

மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, அவருடைய மனைவி காந்தி அழகிரி, கவிஞர் கனிமொழி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X